டெல்லிக்கு பக்கத்திலேயே இருப்பதால் எத்தனை நன்மைகள்!! உத்தர பிரதேசத்தில் இந்தியாவின் 2வது நீளமான விரைவுச்சாலை!
உத்தர பிரதேசம் (Utter Pradesh) மாநிலம் இந்த 2024ஆம் ஆண்டிற்குள் மிக நீளமான விரைவுச்சாலையை பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டெல்லி- மும்பை விரைவுச்சாலைக்கு அடுத்து இந்தியாவின் 2வது மிக பெரிய விரைவுச்சாலையாக விளங்கவுள்ள இதனை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் தற்சமயம் வேகமாக வளர்ச்சிக் கண்டுவரும் மாநிலங்களுள் ஒன்று உத்தர பிரதேசம் ஆகும். தலைநகர் டெல்லிக்கு அருகே இருப்பதினாலும், பிரதமர் மோடி வெற்றிப் பெற்ற வாரணாசி தொகுதியை கொண்டிருப்பதாலும், கடந்த சில வருடங்களில் பொருளாதாரம், சாலை கட்டமைப்பு என பல விஷயங்களில் உத்தர பிரதேசம் முன்னேற்றம் கண்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் வருகிற 2025ஆம் ஆண்டில் கும்ப மேளா பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. இதற்கு, உ.பி மாநில அரசு இப்போதே எல்லா விதங்களிலும் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கங்கா விரைவுச்சாலை உத்தர பிரதேசத்தில் அமையவுள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தர பிரதேசம் விரைவுச்சாலை துறை மேம்பாட்டு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
கங்கா விரைவுச்சாலை பணிகளை இந்த 2024ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உ.பி முதல்வர் ஆணையிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிலேயே உத்தர பிரதேசம் மாநிலத்தில் தான் தற்சமயம் அதிக விரைவுச்சாலைகள் உள்ளன. இந்த மாநிலத்தில் 6 விரைவுச்சாலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

7 விரைவுச்சாலைகள் கட்டமைப்பு பணிகளில் உள்ளன. இந்த 7 விரைவுச்சாலைகளில் பெரியது கங்கா விரைவுச்சாலை ஆகும். மொத்தம் 594 கிலோமீட்டர்கள் நீளத்தில் இந்தியாவிலேயே 2வது மிக நீளமான விரைவுச்சாலையாக இது உருவாக்கப்பட்டு வருகிறது. முதல் இடத்தில் தேசிய தலைநகர் டெல்லி மற்றும் மும்பைக்கு இடையேயான விரைவுச்சாலை உள்ளது.
இந்தியாவின் தற்போதைய மிக நீளமான 10 விரைவுச்சாலைகளை எடுத்து பார்த்தால், அதில் 4 விரைவுச்சாலைகள் உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ளன. கங்கா விரைவுச்சாலை செயல்பட ஆரம்பித்துவிட்டால், 4 என்ற எண்ணிக்கை 5 ஆக மாறிவிடும். உத்தர பிரதேச மாநிலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் விதமாக கங்கா விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
12 மாவட்டங்கள் வழியாக மொத்தம் 518 கிராமங்களை கடந்து கங்கா விரைவுச்சாலை செல்லும். இந்த விரைவுச்சாலை பயன்பாட்டிற்கு வந்த பின், மீரட்டில் இருந்து பிரயாக்ராஜ் நகரத்திற்கு செல்வது இன்னும் எளிமையாகி விடும் என கணிக்கப்பட்டுள்ளது. பிஜாலி என்ற கிராமத்தில் இருந்து துவங்கும் கங்கா விரைவுச்சாலை பிரயாக்ராஜ் நகரத்திற்கு அருகே உள்ள ஜூடாபுர் தாடு என்ற கிராமத்தில் நிறைவடையும்.
முதற்கட்டமாக கங்கா விரைவுச்சாலையில் வாகனங்கள் இயங்க 6 பாதைகள் அமைக்கப்படுகின்றன. அதன்பின், பின்னர் காலத்தில் 8 பாதைகளாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விரைவுச்சாலைகளை போல், கங்கா விரைவுச்சாலையிலும் வாகனங்கள் அதிகப்பட்சமாக மணிக்கு 120கிமீ வேகத்தில் இயங்க அனுமதிக்கப்படும். இரு முக்கிய சுங்கச்சாவடிகள் இந்த புதிய விரைவுச்சாலையில் மீரட் மற்றும் பிரயாக்ராஜ் நகரங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய தரமான சாலை கட்டமைப்புகள் அவசியமான ஒன்றாகும். இந்த விஷயத்தில் நம் மத்திய அரசு எப்போதுமே முனைப்புடன் உள்ளது. குறிப்பாக, கடந்த சில வருடங்களில் பல புதிய விரைவுச்சாலைகளும், நெடுஞ்சாலைகளும் நாட்டில் பல்வேறு பகுதிகளில் கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானதாக, மும்பை - டெல்லி விரைவுச்சாலையை சொல்லலாம்.


Click it and Unblock the Notifications








