பிரதமர் தீபாவளியை கொண்டாடுனதே இங்கே தான்... இந்தியாவின் இந்த போர் கப்பல்களை பார்த்தே உலகமே பயப்படுது!
இந்தியாவின் கடற்படைக்கு வலிமை சேர்க்கும் இரண்டு விமானந்தாங்கி போர் கப்பல்களான ஐ.என்.எஸ் விக்ராந்த் (INS Vikrant) மற்றும் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா (INS Vikramaditya) ஆகியவை நாட்டின் பாதுகாப்புக்கு அத்தியாவசியமானவை ஆக விளங்குகின்றன. இதனாலேயே, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் தீபாவளியை இந்த போர் கப்பல்களில் ஓர் இரவு தங்கி கொண்டாடினார்.
இந்த இரு விமானந்தாங்கி போர் கப்பல்களில் ஐ.என்.எஸ் விக்ராந்த் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது ஆகும். ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா ரஷ்யா நாட்டில் இருந்து பெறப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டது. இரண்டு கப்பல்களும் தங்களது கட்டுமானப் பின்னணி, அளவு மற்றும் உந்துவிசை அமைப்புகளில் வேறுபடுகின்றன. இருப்பினும், இரண்டுமே மிக்-29கே போன்ற போர் விமானங்களை ஏவி, தரையிறக்கும் 'STOBAR' அமைப்பைப் பயன்படுத்துகின்றன.

இவை இந்தியாவின் கடல்சார் பலத்திற்கு உயிர்நாடியாக விளங்குகின்றன. ஐ.என்.எஸ் விக்ராந்த் இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானந்தாங்கிக் கப்பலாகும். 2022-ஆம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்பட்டது. இது 262 மீட்டர் நீளமும், 62 மீட்டர் அகலமும் கொண்டதுடன், 43,000 டன் வரையில் எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டுள்ளது.

நான்கு கேஸ் டர்பைன்கள் மூலம் அதிகப்பட்சமாக 88 மெகாவாட் இயக்க ஆற்றலில் இயங்கக்கூடிய ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலில் சுமார் 30 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை நிறுத்தி பயன்படுத்தலாம். மேலும், எதிரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்களையும் சிறைப்படுத்தி வைக்கலாம்.

இந்த போர் கப்பலில் உள்ள 2,200 அறைகளில் சுமார் 1,700 வீரர்களை அழைத்து செல்ல முடியும். மறுப்புறம், ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா ரஷ்யா நாட்டில் உருவாக்கப்பட்டு, இந்திய கடற்படைக்காகப் புதுப்பிக்கப்பட்டு 2013-ல் இணைக்கப்பட்டது. இது 284 மீட்டர் நீளமும், 60 மீட்டர் அகலமும் கொண்டது. இதன் சுமக்கும் திறன் இன்னும் கூடுதலாக 44,500 டன் ஆகும்.
8 கேஸ் டர்பைன்கள் மூலம் அதிகப்பட்சமாக 134 மெகாவாட் இயக்க ஆற்றலில் இயங்கக்கூடிய ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர் கப்பல் மணிக்கு 30 கடல் மைல்களுக்கும் மேலான வேகத்தில் இயங்கும் திறன் கொண்டதாக உள்ளது. இந்தக் கப்பல், மிக்-29கே உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இயக்கவல்லது. ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர் கப்பலின் 22 தளங்களில் 1,600 கடற்படை வீரர்களை அழைத்து செல்லலாம்.

ஏற்கனவே கூறியதுபோல், இந்த இரு விமானந்தாங்கிக் கப்பல்களும் 'STOBAR' அமைப்பைப் பயன்படுத்தி விமானங்களை இயக்கும் திறன் கொண்டவை ஆகும். இந்த STOBAR அமைப்பை பற்றி கொஞ்சம் விரிவாக பார்த்தோமேயானல், இது விமானங்களை குறுகிய தூர ரன்வே மூலம் டேக்-ஆஃப் செய்ய வைக்கும். அதேநேரம், விமானத்தில் அனைத்து இயக்கத்தையும் நிறுத்தி அதனை லேண்ட் செய்யவும் முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர் கப்பல்கள், நடு கடலில் பல்வேறு பணிகளுக்காகப் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை நிறுத்துவதற்கான வசதிகளை வழங்குகின்றன. இதன் மூலம், நாட்டின் கப்பற்படை மற்றும் விமான படையை ஒருங்கிணைக்க முடிகிறது. மேலும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் கடல்சார் சக்திக்கும், வியூக ரீதியான நிலைப்பாட்டிற்கும் இந்த இரு கப்பல்களும் மிக முக்கியமானவைகளாகத் திகழ்கின்றன.


Click it and Unblock the Notifications









