9 வயதில் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்ந்த காஷ்மீர் சிறுமி!! அங்கே இருந்து இவ்வளவு தூரம் வந்ததே பெருசு
இந்தியாவில் கார் ரேஸர்களுக்கு பஞ்சமே கிடையாது. நம் நாட்டில் சிறு வயது முதலே பல ரேஸர்கள் உருவாக ஆரம்பித்துவிடுகின்றனர். அவர்களை ஊக்குவிக்க நாடு முழுவதும் அவ்வப்போது பந்தயங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் கிடைத்த தைரியத்தில் சர்வதேச அளவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இளம் இந்திய கார் ரேஸர்கள் பலரை இதற்குமுன் நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அந்த வரிசையில், காஷ்மீரை சேர்ந்த சிறுமி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோட்ரோம் போட்டியில் 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
இந்தியாவின் காஷ்மீரை சேர்ந்தவர் 9 வயதான இளம் கோ-கார்டிங் பந்தய வீராங்கனை அதிகா மிர் (Atiqa Mir). இந்தியாவின் இளமையான மற்றும் வேகமான 4-சக்கர மோட்டார்ஸ்போர்ட் வீராங்கனையாக விளங்கும் அதிகா மிர் தனது 5 வயது முதலே இதற்கான பயிற்சிகளில் ஈடுப்பட்டு வருகிறார். இவருக்கு மிகவும் உந்துதலாகவும், பக்க பலமாகவும் இருப்பவர் இவரது தந்தை ஆசிஃப் நசிர் மிர்.

ஆசிஃப் நசிர் மிர், இந்தியாவின் முதல் தேசிய கார்டிங் வெற்றியாளர். இவர் அளித்த பயிற்சியின் மூலம், உலகளவில் 10 வயதிற்குட்பட்டோருக்கான பெண் டிரைவர்கள் பட்டியலில் ஆதிகா மிர் அதிக மதிப்பெண்களை பெற்று ஆச்சிரியப்படுத்தினார். கடந்த சில வருடங்களில், பல்வேறு சர்வதேச கோ-கார்டிங் போட்டிகளில் ஜார்ஜ் கிப்பன்ஸ் மோட்டார்ஸ்போர்ட்ஸ் குழுவின் சார்பில் கலந்துக் கொண்டு பதக்கங்களை அதிகா மிர் தட்டி சென்றுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் துபாய் ஆட்டோட்ரோம் சாம்பியன்ஷிப் (DAMC) போட்டியில் கலந்துக் கொண்ட அதிகா மிர் 3வது இடத்தை பிடித்து ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். முன்னதாக, இத்தாலியில் நடைபெற்ற மற்றொரு போட்டியின்போது மோதலை சந்தித்ததினால் DAMC-இல் 4வது சுற்று பந்தயங்களை அதிகா மிர் தவறவிட்ட போதிலும் தொடரில் 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

4வது சுற்றில் கலந்துக் கொள்ள முடியாமல் போனதை அடுத்து, மிகுந்த பயிற்சிகளுடன் 5வது சுற்றை கடந்த ஜூன் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகா மிர் எதிர்கொண்டார். துபாயின் சூடான கார்ட்ட்ரோம் டிராக்கில் நடத்தப்பட்ட இந்த 5வது சுற்றில் மொத்தம் 3 பந்தயங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் முதல் பந்தயத்தில் 3வது இடத்தை பிடித்த அதிகா மிர், 2வது பந்தயத்தில் முதலிடத்தை பிடித்து பிரம்மிக்க வைத்தார்.
கடைசி 3வது பந்தயத்தில் 3வது இடத்தையே இவரால் பிடிக்க முடிந்தது. முதல் பந்தயத்தில் 10வது இடத்தில் அதிகா மிர் நிறுத்தப்பட்டார். அதாவது, பந்தயம் துவங்குவதற்காக கோ-கார்டிங் வாகனங்களில் பந்தய வீராங்கனைகள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்ததில், 10வது இடத்தில் அதிகார் மிர் இருந்தார். இந்த பொசிஷன்களுக்காக DAMC தனியாக எந்த பந்தயத்தையும் நடத்தவில்லை. தோராயமாக பந்தய வீராங்கனைகளை டிராக்கில் நிறுத்தியது.

இந்த வகையில் பார்த்தால், முதல் பந்தயத்தில் 7 பேரை முந்தி 3வது இடத்தை அதிகா மிர் தனதாக்கி உள்ளார். முதல் பந்தயத்தில் 3வது இடத்தை பிடித்ததினால் 2வது பந்தயத்தில் அதிகா மிர்ரின் பொசிஷன் மாற்றப்பட்டது. அதாவது, இந்த முறை கொஞ்சம் முன்னால் இருந்து பந்தயத்தை துவங்கினார். இதனால், 2வது பந்தயத்தில் எளிதாக அவரால் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற முடிந்தது.
கடைசி 3வது பந்தயத்தில் அதிகா மிர் 2வது இடத்தை பிடித்துவிடுவார் என்பது போல் இருந்தது. ஆனால், கடைசியில் 3வது இடத்தையே இவரால் பிடிக்க முடிந்தது. இதன் பின்னர் அதிகா மிர் அளித்த பேட்டியில், 3 மாதங்களுக்கு பிறகு தான் ரோடக்ஸ் (கோ-கார்டிங்) வாகனத்தை ஓட்டுவதாகவும், தனது டிரைவிங் ஸ்டைலில் நிறைய மாற்றங்களை கொண்டுவந்துள்ளதாகவும் கூறியவர், போட்டியின் முக்கியமான கட்டத்தில் வேகத்தை இழந்துவிட்டதாகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காஷ்மீரில் இருந்து ஒரு வீராங்கனை வெளியே வருவதே பெரிய விஷயம். ஆனால், அதிகா மிர் அவரது 10 வயதிற்குள்ளாகவே பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்துக் கொள்வது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. DAMC-இல் 2வது இடத்தை தவறவிட்ட போதிலும், இதுகுறித்து அதிகா மிர் பெரியதாக கவலைப்பட தேவையில்லை. ஏனெனில், அவர் இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது.


Click it and Unblock the Notifications









