இந்திய புல்லட் ரயில் திட்டத்தின் சாதக, பாதகங்கள்!
இந்தியாவில் முதல் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்டத்தை ஜப்பான் கைப்பற்றியிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம் இந்தியர்களுக்கு பெருமை தேடி தரும் விஷயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் இந்தியாவில் மிக அதிக முதலீட்டில் அமைக்கப்பட உள்ள புல்லட் ரயிலின் கட்டுமானம், பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் கட்டணம் போன்றவை பற்றி மிகப்பெரிய சந்தேகங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த சந்தேகம் ஏன் எழுகின்றன, இந்திய புல்லட் ரயிலின் சாதக, பாதகங்களை ஸ்லைடரில் காணலாம்.

சந்தேகம் ஏன்?
பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் சீனாவில் புல்லட் ரயில் திட்டம் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனால், அங்கு புல்லட் ரயில் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்கவும், புல்லட் ரயில் விரிவாக்கத் திட்டங்களையும் நிறுத்துவதற்கும் யோசனைகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதுதான் தற்போது பலருக்கும் இந்திய புல்லட் ரயில் திட்டம் பற்றிய பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அடுத்தடுத்த சில ஸ்லைடுகளில் சாதகங்களையும், தொடர்ந்து பாதகங்களையும் காணலாம்.

வர்த்தகம் பெருகும்
நாட்டின் வர்த்தக தலைநகராக கருதப்படும் மும்பையையும், நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் பெருநகரங்களில் ஒன்றான ஆமதாபாத்தையும் இணைப்பதன் மூலமாக வர்த்தக வளர்ச்சி வெகுவாக உயரும். பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு
புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், புல்லட் ரயில் இயக்கப்படும் வழித்தடத்தில் உள்ள நகரங்களிலும் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

நிறுவனங்களை கவரும்
அலுவலக பணி சம்பந்தமாக இரு நகரங்களுக்கு இடையில், பணியாளர்களை அனுப்பி வைக்கும் நிறுவனங்களுக்கு விமான பயணக் கட்டணம் மிக அதிகமாக இருக்கிறது. இதற்காக, அந்த நிறுவனம் பெரும் பட்ஜெட்டை போட வேண்டியிருக்கிறது. ஆனால், அவர்களுக்கு புல்லட் ரயில் சிறந்த தீர்வாகவும், விரைவான போக்குவரத்தாகவும் இருக்கும்.

விமான பயண பயம்
பலருக்கு விமான பயணம் அச்சம் தருவதாக அமைந்துள்ளது. அவர்களுக்கு புல்லட் ரயில் மிகவும் பாதுகாப்பான போக்குவரத்து சாதனமாக அமையும். குறிப்பாக, வயோதிகர்களுக்கு புல்லட் ரயில் சுகமானதாக அமையும்.

கட்டணம்
மும்பை- ஆமதாபாத் இடையில் பயணிப்பதற்கு ரூ.2,800 கட்டணமாக நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, விமானக் கட்டணத்துடன் ஒப்பிடும்போது புல்லட் ரயில் கட்டணம் மிக குறைவாக இருக்கும் என நம்பலாம்.

சுற்றுச்சூழலுக்கு உகந்தது...
பிற போக்குவரத்து சாதனங்களுடன் ஒப்பிடும்போது, சுற்றுச்சூழலுக்கு அதிக தீங்கை விளைவிக்காத போக்குவரத்து சாதனமாக புல்லட் ரயில்கள் குறிப்பிடப்படுகின்றன.

பயண நேரம்
மும்பை- ஆமதாபாத் நகரங்களை புல்லட் ரயில்கள் 2 மணிநேரத்தில் கடந்துவிடும். அதேநேரத்தில், விமானப் பயணத்தின்போது மேற்கொள்ளப்படும் சோதனைகள் மற்றும் இதர நடைமுறை கால விரயங்கள் புல்லட் ரயில்களில் தவிர்க்கப்படும் என்பதால், பயணிகளுக்கு மிக விரைவான போக்குவரத்தை வழங்கும்.

பெரும் முதலீடு
மும்பை- ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டம் ரூ.98,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு 81 சதவீத கடனை ஜப்பான் வழங்க இருக்கிறது. இருப்பினும், இந்தியா சார்பில் ரூ.25,000 கோடி முதல் ரூ.50,000 கோடி வரை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இதற்கான நிதி ஆதாரம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

முடங்கும் அபாயம்
தற்போது 63,000 கிலோமீட்டர் தூரத்துக்கான இந்திய ரயில்பாதை மற்றும் அதனை சார்ந்த விஷயங்களுக்கான கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளுக்கு நிதி பற்றாக்குறை காரணமாக முடங்கி கிடக்கின்றன. இந்த சூழலில் இந்த பெரும் முதலீடு தேவையற்றது என்று விமர்சனம் எழுந்துள்ளது. அத்துடன், ரயில்வே பணிகள் மேலும் முடங்கும் வாய்ப்புகள் உள்ளன.

பழைய தொழில்நுட்பம்
பழைய புல்லட் ரயில் தொழில்நுட்பத்தை அதிக விலை வைத்து இந்தியாவின் தலையில் கட்டவே ஜப்பான் இந்தளவு கடன் வழங்குவதாகவும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், தனது பழைய தொழில்நுட்பத்தை விற்று பெரும் லாபம் பார்க்கவே ஜப்பான் முனைப்புடன் செயல்படுவதுடன், கடன் வழங்குவதிலும் பல்வேறு கடுமையான நிபந்தனைகளையும் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இலக்கு
நம் நாட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற திட்டங்களை செயல்படுத்தினால் மட்டுமே வெற்றி கிட்டும். இந்த சூழலில் அதிக முதலீடுகள் காரணமாக, 2023ல் பயன்பாட்டுக்கு வரும்போது புல்லட் ரயிலின் கட்டணம் மேல்தட்டு மக்களுக்கு உகந்ததாகவே இருக்கும். எனவே, இந்த திட்டம் வெற்றி பெறுவது கடினம் என்றும் பொருளாதார நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

பராமரிப்பும் அதிகம்
புல்லட் ரயில்களை பராமரிப்பதற்கான செலவீனமும் அதிகம். தற்போது இயக்கப்படும் ரயில்களை ஒழுங்காக பராமரிக்க வக்கில்லாத ரயில்வே துறை, புல்லட் ரயில்களை ஒழுங்காக பராமரிக்குமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. மேலும், பாதுகாப்பு விஷயங்களிலும் அலட்சியம் காட்டும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர்.

வெற்றி பெறுமா?
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் நிச்சயம் நம் நாட்டு போக்குவரத்தில் ஓர் புதிய துவக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. நாட்டின் சீரான பொருளாதார வளர்ச்சியும் சீராக இருந்தால் மட்டுமே புல்லட் ரயில் திட்டம் வெற்றி பெற ஏதுவாகும். எனவே, இந்த திட்டத்தின் வெற்றியை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்திய புல்லட் ரயில் திட்டம் - கண்ணோட்டம்
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புல்லட் ரயில் தொழில்நுட்பம் மற்றும் சிறப்புகளை மற்றொரு செய்தித் தொகுப்பில் காணலாம்.


Click it and Unblock the Notifications