ஜப்பானுக்கு பாடம் புகட்டிய இந்தியா! வாலை ஒட்ட நறுக்கீட்டாங்க! இனி உலக நாடுகள் நம்ம கிட்ட கைகட்டி நிக்க போகுது!
கர்நாடக மாநில தலைநகரான பெங்களூர் (Bangalore), இதமான வானிலை, பூங்காக்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது, மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கும் புகழ்பெற்றது. உலகிலேயே வாகனங்கள் மிகவும் மெதுவாக நகர்ந்து செல்லும் நகரங்களில் ஒன்றாக பெங்களூர் திகழ்ந்து வருகிறது. ஆனால் அப்படிப்பட்ட மெதுவான ஒரு நகரம்தான், இந்தியாவின் முதல் அதிவேக ரயிலை (High-speed Train) உற்பத்தி செய்யவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
என்ஹெச்எஸ்ஆர்சிஎல் (NHSRCL - National High-Speed Rail Corporation Limited) மூலம், எம்ஏஹெச்எஸ்ஆர் எனப்படும் மும்பை-அகமதாபாத் (MAHSR - Mumbai-Ahmedabad High-Speed Rail) அதிவேக ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 1.10 லட்சம் கோடி ரூபாய் செலவில், இந்த திட்டம் உருவாக்கப்படுகிறது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 508 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில், 12 ஸ்டேஷன்கள் அமையவுள்ளன. ஆரம்பத்தில் ஜப்பானின் சிங்கன்சென் இ5 (Shinkansen E5) ரயில்களைதான், இந்த வழித்தடத்தில் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்க கூடியது. ஆனால் ஜப்பான் இதற்கு அதிக தொகை கேட்ட காரணத்தால், இந்தியாவிலேயே அதிவேக ரயில்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 2 அதிவேக ரயில்களை தயாரிப்பதற்கான டெண்டரை சென்னையில் (Chennai) உள்ள ஐசிஎஃப் (Integral Coach Factory) கோரியது.

கடந்த செப்டம்பர் 5ம் தேதி டெண்டர் கோரப்பட்ட நிலையில், ஏல ஆவணங்களை சமர்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் (செப்டம்பர் 19) முடிவடைந்தது. இந்த டெண்டரில் பங்கேற்க பிஇஎம்எல் (BEML - Bharat Earth Movers Limited) நிறுவனம் மட்டுமே முன்வந்திருப்பதாக தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேறு எந்தவொரு நிறுவனமும் டெண்டரில் பங்கேற்க முன்வராத காரணத்தால், இந்தியாவின் முதல் அதிவேக ரயில்களை உருவாக்கும் பணியை, பிஇஎம்எல் நிறுவனம் தற்போது தட்டி செல்லவுள்ளது. பெங்களூர் நகரில் உள்ள பிஇஎம்எல் நிறுவனத்தின் தொழிற்சாலையில், இந்தியாவின் முதல் அதிவேக ரயில் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி பிஇஎம்எல் நிறுவனம் மொத்தம் 2 அதிவேக ரயில்களை உற்பத்தி செய்யவுள்ளது. 2 ரயில்களை மட்டும் உற்பத்தி செய்வதற்கான டெண்டர் என்ற காரணத்தால்தான், மற்ற நிறுவனங்கள் எதுவும் டெண்டரில் பங்கேற்க முன்வரவில்லை என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிஇஎம்எல் நிறுவனம் ஒரு ரயிலை எவ்வளவு செலவில் தயாரிக்க முடியும் என உத்தரவாதம் அளித்திருந்தது? என்பது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் ஒரு ரயிலை, 200-250 கோடி ரூபாய் செலவில் தயாரிக்க முடியும் என பிஇஎம்எல் நிறுவனம் உத்தரவாம் அளித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
தோராயமாக 250 கோடி ரூபாய் என வைத்து கொண்டால் கூட, ஜப்பானின் சிங்கன்சென் இ5 ரயிலை காட்டிலும், இது மலிவானதுதான். ஏனெனில் ஜப்பானின் சிங்கன்சென் இ5 ரயிலுக்கு சுமார் 450 கோடி ரூபாய் விலை கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது ஒரு ரயிலுக்கான தொகை ஆகும்.
எனவேதான் 200-250 கோடி ரூபாய் செலவில், இந்தியாவிலேயே அதிவேக ரயிலை தயாரிக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு ரயிலுக்கு சுமார் 200 கோடி ரூபாய் தொகையை மிச்சம் பிடிக்க முடியும். பிஇஎம்எல் நிறுவனம் தயாரிக்கவுள்ள அதிவேக ரயில்களின் டாப் ஸ்பீடு மணிக்கு 280 கிலோ மீட்டர்களாக இருக்கும்.
ஆனால் மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இந்த அதிவேக ரயில்கள் இயக்கப்படும் என தெரிகிறது. இந்திய ரயில்களை பொறுத்தவரையில், இதுவே அதிக வேகம்தான். இதன் மூலம் மும்பையில் இருந்து அகமதாபாத் நகரை வெறும் 2 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் இந்த அதிவேக ரயில் சென்றடைந்து விடும்.
பிஇஎம்எல் நிறுவனம் தயாரிக்கவுள்ள அதிவேக ரயில்களில், மொத்தம் 8 கோச்கள் இருக்கும். இதில், 7 கோச்களில் 3+2 என்ற வகையிலும், எஞ்சிய ஒரு கோச்சில் 2+2 என்ற வகையிலும் இருக்கை அமைப்பு வழங்கப்பட்டிருக்கும். தேவைப்பட்டால் இந்த ரயில்களில், இன்னும் அதிகப்படியான கோச்களை இணைத்து கொள்ள முடியும்.
எனவே ஆரம்பத்தில் 8 கோச்கள் என்ற அளவில் மட்டுமே இருந்தாலும் கூட, எதிர்காலத்தில் 16 கோச்கள் வரை கூட இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிஇஎம்எல் நிறுவனம் உற்பத்தி செய்யவுள்ள 2 அதிவேக ரயில்களில், முதல் ரயிலின் உற்பத்தி பணிகள், வரும் 2026ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மணிகண்ட்ரோல் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிக செலவு செய்து ஜப்பானிடம் இருந்து அதிவேக ரயிலை வாங்காமல், குறைவான செலவில் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். எதிர்காலத்தில் இந்த ரயில்களை இந்தியா இங்கு உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு விற்பனை கூட செய்யலாம். இந்தியாவின் தயாரிப்புகள் விலை குறைவானதாக இருக்கும் என்பதால், உலக நாடுகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்ப்புகளும் பிரகாசமாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








