இதுக்கு அப்புறம் எத்தனை பேர் வேணும்னாலும் வாங்கலாம், ஆனா இவர்தான் முதல் ஆளு!! ரோல்ஸ்-ராய்ஸ் உடன் பாடகர்
உலகம் முழுவதும் பிரபலங்கள் விலையுயர்ந்த கார்கள் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை விரும்புகின்றனர். இதில், இந்தியாவில் இருக்கும் சினிமா பிரபலங்கள் மட்டும் என்ன விதிவிலக்காகவா இருக்க போகிறார்கள்? பொதுமக்களிடையே அதிக வெளிச்சத்தில் இருக்க வேண்டும் என்ற அவர்களின் வாழ்க்கை முறை இதற்கு முக்கிய காரணம் ஆகும்.
குறிப்பாக, பாலிவுட் சினிமா (Bollywood Cinema) துறையை சேர்ந்தவர்கள் அவ்வப்போது புது, புது சொகுசு கார்களை வாங்கும் நிலையில், பிரபல பாலிவுட் ராப் பாடகரான பாட்ஷா (Badshah) எல்லாரையும் அசரடிக்கும் வகையில் விலையுயர்ந்த ரோல்ஸ்-ராய்ஸ் கல்லினன் (Rolls-Royce Cullinan) என்கிற அல்ட்ரா-லக்சரி எஸ்யூவி காரை வாங்கியுள்ளார்.

பாடகர் பாட்ஷா மற்ற சினிமா நடிகர்கள் மற்றும் பாடகர்களைப் போலவே, விலையுயர்ந்த கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அவருடைய சொகுசு கார்களை பற்றி இதற்குமுன் சிலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அந்த வரிசையில் தற்போது பாட்ஷா பிராண்ட்-நியூ (Brand-new) ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை டெலிவிரி (Delivery) பெற்றுள்ளார்.
இதன் மூலம், இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி காரை வாங்கிய முதல் இசைக்கலைஞர் என்ற பெருமையை பாட்ஷா பெற்றுள்ளார். புதிய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவியின் வீடியோ மற்றும் படங்களை பாட்ஷா தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அவற்றில், புதியதாக வாங்கிய கல்லினன் காரின் ஸ்கஃப் பிளேட்டில் இருந்து பிளாஸ்டிக் கவரை பாடகர் பாட்ஷா பிரிப்பதைப் பார்க்க முடிகிறது.

காருக்குள் நுழையும் வாசல் பகுதியில் வழங்கப்படும் இந்த பிளாஸ்டிக் கவரை காரில் இருந்து அகற்றுவதை குறிப்பாக சுட்டிக்காட்டி இருப்பதற்கு காரணம், இந்தக் கார் பாட்ஷாவுக்காக பிரத்யேகமாக ஆர்டர் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது ஆகும். பொதுவாகவே, ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இவ்வாறுதான் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப உருவாக்கி பயன்படுத்துவது வழக்கம்.
இதற்காகவே, மற்ற ரோல்ஸ் ராய்ஸ் கார்களைப் போலவே, கல்லினனும் நீண்ட கஸ்டமைசேஷன் (Customisation) ஆப்ஷன்கள் உடன் விற்பனை செய்யப்படுகிறது. பாடகர் பாட்ஷா புதியதாக வாங்கியிருக்கும் கல்லினன் கார் கருப்பு நிறத்தில் உள்ளது. இது தற்போது இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள கல்லினனின் சீரிஸ்-II பதிப்பு ஆகும்.

பாட்ஷாவின் புதிய கல்லினன் காரின் வெளிப்பக்கம் கருப்பு நிறத்தில் இருக்க, உட்புற கேபினுக்கு நீலம் மற்றும் கருப்பு நிற தீம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதாவது, இருக்கைகள் இரு நீல நிற ஷேடுகளில் உள்ளன. அதே நேரத்தில் ஒட்டுமொத்த கேபின் கருப்பு நிற தீம் கொண்டுள்ளது.
இது வித்தியாசமாகத் தோற்றமளித்து, கல்லினன் எஸ்யூவிக்கு தனித்துவமான தன்மையை அளிக்கிறது; மேலும் இது பாட்ஷாவின் ஆளுமைக்கும் ஏற்றதாக உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் உலகளவில் பணக்கார வாடிக்கையாளர்களிடம் இருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது ஆகும். இந்தியாவில் கூட, இது நமது சாலை நடைமுறைகளுக்கு உகந்ததாக இருப்பதால், மற்ற ரோல்ஸ் ராய்ஸ் கார்களை விட அதிக கல்லினன் உரிமையாளர்கள் உள்ளனர்.
குறிப்பாக, முகேஷ் அம்பானி (Mukesh Ambani) குடும்பத்தினரிடம் மட்டும் 10 கல்லினன் கார்கள் உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தியாவில் தற்சமயம் 4 ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் மட்டுமே விற்பனையில் உள்ளன. அவற்றுள் ஒன்றான கல்லினனின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) தற்சமயம் ரூ.6.95 கோடியாக உள்ளது.
கல்லினன் 6.75 லிட்டர், ட்வின்-டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 571 PS மற்றும் 850 Nm டார்க்கை உருவாக்குகிறது. என்ஜின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. மேலும், என்ஜினின் ஆற்றல் காரின் நான்கு சக்கரங்களுக்கும் அனுப்பப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாடகர் பாட்ஷா வாங்கியிருப்பது வழக்கமான ரோல்ஸ்-ராய்ஸ் கல்லினன் கார் போல உள்ளது. மிகவும் விலையுயர்ந்த கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் (Black Badge Edition) போல் இல்லை. இது பாட்ஷாவின் முதல் ரோல்ஸ் ராய்ஸ் கார் அல்ல. ஏனெனில், இவரிடம் ஏற்கனவே அரிதான ரோல்ஸ் ராய்ஸ் வ்ரைத் (Wraith) கார் உள்ளது. வ்ரைத் காரை வைத்திருக்கும் இந்தியாவின் ஒரே பாடகர் என்கிற பெயருக்கு சொந்தகாரராக விளங்கி வரும் பாடகர் பாட்ஷா, இனி கல்லினன் காரை இந்தியாவில் முதலாவதாக வாங்கிய பாடகர் என்றும் புகழப்பட உள்ளார்.


Click it and Unblock the Notifications









