அம்பானி, அதானி கிட்ட கூட இந்த கார்கள் இல்லை... நம்ம சென்னையில் இப்படியொரு தொழிலதிபரா!!
ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce) கார் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேருக்கு கனவாக இருக்கும். ஆனால், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சமீபத்தில் ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்கியது மட்டுமில்லாமல், தற்போது மீண்டும் ஒரு லக்சரி காராக ஃபெராரி (Ferrari) கார் ஒன்றை வாங்கியுள்ளார். சுமார் ரூ.8.5 கோடி மதிப்பிலான அந்த பிராண்ட்-நியூ ஃபெராரி கார் உடன் சென்னை சாலைகளில் அந்த தொழிலதிபர் உலா வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
சென்னையை சேர்ந்த கட்டுமான நிறுவனமான பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் (Baashyaam Constructions)-இன் நிறுவனராக இருப்பவர் தொழிலதிபர் பாஷ்யம் யுவராஜ் ஆவார். உலகளவில் பிரபலமான அல்ட்ரா-லக்சரி ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் (Electric Car) ஆன ஸ்பெக்டர் (Spectre)-ஐ இந்தியாவில் வாங்கிய முதல் கஸ்டமர் பாஷ்யம் யுவராஜ் ஆவார்.

இதன் மூலம் இந்திய கார் ஆர்வலர்கள் மத்தியில் கவனத்தை பெற்றது மட்டுமின்றி, செய்திகளில் இடம்பெற்ற இந்த சென்னை தொழிலதிபருக்கு ஸ்பெக்டர் கார் மிகவும் பிடித்துள்ளது போல, ஏனெனில் அதனை வாங்கிய சில மாதங்களிலேயே மீண்டும் ஒரு ரோல்ஸ்-ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் காரை பாஷ்யம் யுவராஜ் வாங்கினார். அதாவது, இவரிடம் இரு ஸ்பெக்டர் கார்கள் உள்ளன.
இந்த நிலையில்தான், பல கோடி ரூபாய் மதிப்பில் மற்றுமொரு விலையுயர்ந்த காராக ஃபெராரி கார் ஒன்றை இவர் வாங்கியுள்ளார். தொழிலதிபர் பாஷ்யம் யுவராஜ் தற்போது வாங்கியிருப்பது, ஃபெராரி 12சிலிண்ட்ரி (12Cilindri) என்கிற சுமார் ரூ.8.5 கோடி மதிப்பிலான கார் ஆகும். ரோல்ஸ்-ராய்ஸ் ஸ்பெக்டர் காரை போன்று, ஃபெராரி 12சிலிண்ட்ரி காரை இந்தியாவில் வாங்கிய முதல் கஸ்டமரும் பாஷ்யம் யுவராஜ் ஆவார்.

இவ்வாறு இந்தியாவில் அரிதான அல்ட்ரா-லக்சரி கார்களை வாங்கிவரும் இந்த சென்னை தொழிலதிபர் தற்போது புதியதாக வாங்கிய ஃபெராரி காரை சென்னை சாலைகளில் ஓட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் ஃபெராரி 12சிலிண்ட்ரி கார் என்பது மட்டுமின்றி, உலகிலேயே வெர்டே ஜிபி23 என்கிற நிறத்தை கொண்ட முதல் 12சிலிண்ட்ரி காரும் இதுவாகும்.
அதாவது, காரின் பெயிண்ட்டிற்காக தொழிலதிபர் பாஷ்யம் யுவராஜ் கூடுதலாக செலவு செய்திருப்பார். கிட்டத்தட்ட இதே நிறத்தில்தான் தனது 2வது ஸ்பெக்டர் காரையும் இவர் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் சில ஃபெராரி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள், 12சிலிண்ட்ரி காரும் ஒன்று என்றாலும், மற்ற ஃபெராரி கார்களை காட்டிலும் இது கொஞ்சம் ஸ்பெஷலானது ஆகும்.
இந்த 2025ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபெராரி 12சிலிண்ட்ரி காரின் சிறப்பம்சமே அதன் என்ஜின் சிஸ்டம் ஆகும். ஏனெனில், இந்த காரின் என்ஜின் சிஸ்டத்தில் சுமார் 12 சிலிண்டர்கள் பொருத்தப்படுகின்றன. இதனை குறிக்கும் விதமாகவே காருக்கு 12சிலிண்ட்ரி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த காரில் பொருத்தப்படும் 6.5 லிட்டர் வி12 என்ஜின் அதிகப்பட்சமாக சுமார் 830 பிஎஸ் மற்றும் 678 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. 12 சிலிண்டர்கள் உடன் இந்த அளவிற்கு ஆற்றல்மிக்க என்ஜினாக இருப்பினும், இந்த என்ஜின் சிஸ்டத்தில் எந்தவொரு டர்போசார்ஜர்களும், ஹைப்ரீட் சிஸ்டமும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெறும் 2 கதவுகளை மட்டுமே கொண்ட இந்த ஃபெராரி காரை சென்னை சாலைகளில் பார்ப்பதற்கு மிகவும் பிரம்மிப்பாக உள்ளது. அதுவும் பச்சை நிறத்திலான கார்களை சாலையில் காண்பதே அரிது எனும்போது, இந்த நிறத்தில் ரோல்ஸ்-ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் மற்றும் ஃபெராரி 12சிலிண்ட்ரி சூப்பர் காரை இந்த சென்னை தொழிலதிபர் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications








