24 மணிநேர பயணம், வெறும் 12 மணிநேரமா குறையும்! மத்திய அரசு பார்த்து பார்த்து அமைத்துவரும் விரைவுச்சாலை!
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் லட்சியமான திட்டங்களில் ஒன்றான டெல்லி- மும்பை விரைவுச்சாலையில் இன்னும் பல பிரிவுகள் கட்டுமான பணியில் இருந்தாலும், அதன் கணிசமான பகுதி ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துவிட்டது மற்றும் இதுதான் நாட்டின் மிக நீளமான விரைவுச்சாலை ஆகவும் விளங்குகிறது. இந்த விரைவுச்சாலை 2026 மார்ச் மாதத்திற்குள் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முழுமை அடைந்த பிறகு, இந்த விரைவுச்சாலை சுமார் 1,350 கிமீ (840 மைல்) நீளம் கொண்டதாக இருக்கும். இது டெல்லி மற்றும் மும்பை இடையேயான பயண நேரத்தை சுமார் 24 மணி நேரத்தில் இருந்து வெறும் 12 மணி நேரமாக குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விரைவுச்சாலை ஆனது 8 வழி பாதைகளை கொண்ட வேக கட்டுப்பாட்டு சாலையாகும்.

அதாவது, விரைவுச்சாலை என கூறினாலும் இந்த சாலையில் பயணிப்பதற்கு வேக வரம்பு உள்ளது. எதிர்கால போக்குவரத்து தேவைகளைக் கருத்தில் கொண்டு, இதை 12 வழிச்சாலையாக விரிவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாகவும், உலகிலேயே இரண்டாவது முறையாகவும் வனவிலங்குகள் பாதுகாப்பாகவும் தடையில்லாமலும் கடந்து செல்ல, இந்த விரைவுச்சாலையில் விலங்கு மேம்பாலங்கள் (வைல்டுலைஃப் கிராசிங்ஸ்) அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், முகுந்தரா ஹில்ஸ் தேசிய பூங்கா பகுதி வழியாக செல்லும் இந்த விரைவுச்சாலையில் ஒரு சுரங்கப்பாதையும் உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து, இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சாலையின் இருபுறமும் இருபது இலட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் மற்றும் புதர்கள் நடப்பட்டு வருகின்றன. இவற்றிற்கு சொட்டுநீர் பாசன முறை மூலம் நீர்ப்பாசனம் செய்யப்படும்.

மேலும், ஒவ்வொரு 500 மீட்டருக்கும் ஒரு மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்கப்பட்டு வருகிறது. மின் விளக்குகளுக்கான மின்சாரத்திற்கு சூரிய மற்றும் கிரிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்களாகும். இந்த விரைவுச்சாலையில் 93 "வழியோர வசதிகள்" பகுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் எரிபொருள் நிலையங்கள், எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள், உணவு விடுதிகள், சில்லறை கடைகள் மற்றும் ஹோட்டல்கள் போன்ற வசதிகள் இருக்கும்.
விபத்து ஏற்பட்டால் விரைவான அவசரகால மருத்துவ உதவிகளை வழங்க, ஒவ்வொரு 100 கிமீ-க்கும் முழு வசதிகள் கொண்ட அவசர சிகிச்சை மையங்கள் மற்றும் ஹெலிபேட்கள் அமைக்கப்படும். சரக்கு போக்குவரத்து செலவுகளைக் குறைக்கவும், எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கவும், மின்சார வாகனங்களுக்காக (லாரிகள் மற்றும் பேருந்துகள்) எதிர்காலத்தில் தனிப் பாதைகளுடன் "இ-ஹைவே" ஆக விரைவுச்சாலையின் ஒரு பகுதியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

டெல்லி- மும்பை விரைவுச்சாலையில் இலகுரக வாகனங்களுக்கான அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 120 கிமீ என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 120kmph வேகத்தை கூட முன்னால் செல்லும் வாகனத்தை முந்துவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்றப்படி, இந்தியாவின் எந்தவொரு விரைவுச்சாலையிலும் அனுமதிக்கப்பட்ட வேகம் 110kmph ஆகும். அதேநேரம், பொதுவாக விரைவுச்சாலைகள் அதிவேகப் பயணத்திற்காக வடிவமைக்கப்படுவதால், மெதுவாகச் செல்லும் வாகனங்கள் சாலையின் முக்கிய பாதைகளில் அனுமதிக்கப்படாது.
சாலை பாதுகாப்பிற்கும், சீரான போக்குவரத்துக்கும் உறுதுணையாக இருக்கும் இந்த விதிமுறைகள் டெல்லி- மும்பை விரைவுச்சாலைக்கும் பொருந்தும். வேக வரம்பு மீறல்களைக் கண்காணிக்க, இந்த விரைவுச்சாலையில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட வேகக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அதிவேகமாகச் செல்லும் வாகனங்களை தானாகவே கண்டறிந்து, மின்-செல்லான்களை (e-challans) வழங்கும்.
1350கிமீ நீளத்தில் போடப்பட்டு வரும் டெல்லி- மும்பை விரைவுச்சாலை தற்போதைக்கு 770- 1150கிமீ நீளத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2026 மார்ச் மாதத்திற்கு பிறகே முழுமையான 1350கிமீ விரைவுச்சாலை பயன்பாட்டிற்கு வரும். இந்தியாவில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு தற்சமயம் செயல்பாட்டில் உள்ள மிக நீளமான விரைவுச்சாலை என்றால், அது உத்தர பிரதேசத்தில் 340.8 கிமீ நீளமுள்ள பூர்வாஞ்சல் விரைவுச்சாலை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்தவொரு நாட்டிற்கும் பொருளாதாரம் மேம்பட நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகள் அவசியமானவை ஆகும். நெடுஞ்சாலையின் அடுத்தக்கட்ட பரிணாம வளர்ச்சியே விரைவுச்சாலை ஆகும். அதாவது, நீண்ட தூர பயணத்திற்கான நெடுஞ்சாலைகளில் பயண வேகத்தை குறைக்கும் விதத்தில் இருக்கும் அம்சங்களை தவிர்த்து, பயண நேரத்தை குறைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டதே விரைவுச்சாலை ஆகும். இத்தகைய விரைவுச்சாலை இந்தியாவிலேயே மிக நீளமாக தலைநகர் டெல்லி- பொருளாதார தலைநகர் மும்பையை இணைக்கும் விதமாக பயன்பாட்டிற்கு வருவது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









