எவ்வளவு செலவாகினாலும் பரவாயில்லை... காரில் ஒருமுறையாவது இங்கே சென்று பார்த்திடனும்!!
ஆசியாவிலேயே கடற்கரையை ஒட்டிய மிக நீளமான சாலை நம் இந்தியாவில் அமைய உள்ளது. சென்னையில் உள்ள பிரபலமான கிழக்கு கடற்கரை சாலையை காட்டிலும் இன்னும் நெருக்கமாக நம் நாட்டில் சில பகுதிகளில் கடற்கரையில் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கப்படுகிறது. அதாவது, அத்தகைய பகுதிகளில் கடலின் அலைகளில் இருந்து சில மீட்டர் தூரத்திற்குள் வாகனங்களை ஓட்ட முடியும். இதனை, டிரைவ்-இன் பீச் என அழைக்கின்றனர். அவ்வாறான சாலைகள் உலகின் பல பகுதிகளில் உள்ளன என்றாலும், ஆசிய கண்டத்திலேயே மிக நீளமான சாலை இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ள அந்த சாலையை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடற்கரை மணலில் வாகனங்களை ஓட்டுவதற்கு நம்மில் நிறைய பேருக்கு பிடித்திருக்கும். ஆனால், இந்தியாவில் கடற்கரை மணலில் வாகனங்களை இயக்குவதற்கு நிறைய இடங்களில் தடை உள்ளது. நம் சென்னை மெரீனா கடற்கரையிலும் வாகனங்களை இயக்க முடியாது. போலீசாரின் சில ரோந்து வாகனங்கள் மட்டுமே மெரீனாவில் இயக்கப்படுகின்றன.

இந்த தடை இந்தியாவின் பெரும்பாலான கடற்கரை பகுதிகளில் இருந்தாலும், சில பகுதிகளில் கடற்கரை மணலில் வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கப்படுகிறது. கடல் மற்றும் கடற்கரை மணலின் தன்மையை பொறுத்து இந்த அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வாறு, இந்தியாவில் கடற்கரை மணலில் வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கப்படும் பகுதிகளுள் ஒன்று, கேரளாவின் முழப்பிலங்காடு ஆகும்.
கேரளா மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரிக்கு அருகே அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரமான முழப்பிலங்காட்டில் உள்ள கடற்கரையில் வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி உள்ளது. இந்தியாவின் மிக நீளமான டிரைவ்-இன் பீச் சாலையாக விளங்கும் இது தற்சமயம் புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்த வேலைகள் முடிந்த பின் இந்தியாவில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த ஆசியாவிலேயே மிக நீளமான டிரைவ்-இன் பீச் சாலையாக கேரளாவின் முழப்பிலங்காடு கடற்கரை விளங்கும் என கூறப்படுகிறது.

புனரமைக்கப்பட்டு வரும் முழப்பிலங்காடு கடற்கரை தொடர்பான வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் கேரளா மாநிலத்தின் சுற்றுலா துறை அமைச்சர் முகமது ரியாஸ் காட்சி தந்துள்ளார். உலகிலேயே மிக பிரபலமான சுற்றுலா தளங்களுள் ஒன்றாக கேரளா விளங்குகிறது. இருப்பினும், மாநிலத்தின் சுற்றுலா துறையை மேம்படுத்த கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மாநிலத்தின் கடற்கரை பகுதிகளை மேம்படுத்தும் திட்டத்தில் கேரள அரசு தீவிரமாக உள்ளது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே, முழப்பிலங்காடு கடற்கரை மேம்படுத்தப்பட்டு, வாகனங்கள் ஓட்டுவதற்கு இன்னும் ஏற்றதாக மாற்றப்பட்டுள்ளது. வடக்கு கேரளாவின் மிக பிரபலமான கடற்கரை பகுதியாக முழப்பிலங்காடு விளங்குகிறது. இதற்கு முக்கிய காரணம், ஏற்கனவே கூறியதுதான் இந்த கடற்கரை மணலில் வாகனங்களை ஓட்டுவதற்கு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இந்த கடற்கரையை மேம்படுத்தியுள்ள கேரள அரசாங்கம், மக்கள் தங்களுக்கு தேவையான விபரங்களை பெற ஆங்காங்கே திரைகளை அமைத்துள்ளது.

மேலும், உணவகங்கள் உள்பட பார்வையாளர்களை கவர்வதற்கான மற்ற அடிப்படை விஷயங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாகனங்களை கடல் அலைகளுக்கு அருகே கொண்டு செல்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாகனங்களை கொண்டு செல்வதால் மற்றவர்கள் பாதிக்காத வகையில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். அதேநேரம், மக்கள் கால்நடையாக கடலின் அழகை ரசித்தப்படி செல்வதற்காக நடைப்பாதைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
முழப்பிலங்காடு கடற்கரை புனரமைப்பு பணிகள் இந்த ஆண்டு முடிவதற்குள் நிறைவடைந்துவிடும் எனவும், 2025 புத்தாண்டில் மக்களின் பயன்பாட்டிற்கு டிரைவ்-இன் பீச் சாலை வந்துவிடும் எனவும் எக்ஸ் தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முழப்பிலங்காடு கடற்கரை மொத்தம் 4 கிமீ தொலைவிற்கு நீண்டது ஆகும். இந்த மொத்த நீளத்திற்கும் உங்களால் வாகனங்களை ஓட்டி செல்ல முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான டிரைவ்-இன் பீச் பகுதிகளை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவலாக காண முடியும். ஆனால், இந்தியாவை பொறுத்தவரையில் இது புதுமையானது ஆகும். ஆதலால், புனரமைக்கப்பட்ட புதிய முழப்பிலங்காடு கடற்கரை மக்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் என கேரள அரசு நம்பிக்கையாகயாக உள்ளது.


Click it and Unblock the Notifications









