ரோல்ஸ்-ராய்ஸ் காரில் ஆயுத பூஜை கொண்டாடிய எம்.எல்.ஏ இவரா? வீடு அரண்மனை மாதிரி இருக்கு!!
நவராத்ரி (Navratri), 10 நாட்களாக நடைபெறும் பண்டிகை. தென்னிந்தியாவில் ஆயுத பூஜை, விஜய தசமி என 2 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையை வட இந்தியாவில் கோலகலமாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான நவராத்ரி கொண்டாட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மக்கள் தங்களது வாகனங்களை கழுவி சுத்தம் செய்து, இந்து முறைப்படி பூஜைகளை மேற்கொள்வது வழக்கம். அவ்வாறு, இங்கு ஒரு எம்.எல்.ஏ தனது விலையுயர்ந்த கார்களுக்கு பூஜை செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடப்பு 2024ஆம் ஆண்டிற்கான நவராத்ரி கொண்டாட்டங்கள் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி துவங்கி, கடந்த 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்றன. இந்த 10 நாள் பண்டிகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுப்படுவது வழக்கம். ஏற்கனவே கூறியதுபோல், 10 நாட்களுக்கு நவராத்ரியை கொண்டாடுவது எல்லாம் வட இந்தியாவில் தான்.

தென்னிந்தியாவில் 8வது மற்றும் 9வது நாட்களை தான் ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி என கொண்டாடுகின்றனர். ஆயுத பூஜையின் போது வீட்டை சுத்தம் செய்து, எல்லாவற்றையும் அலங்கரித்து இந்து முறைப்படி கடவுளை வணங்குவது வழக்கம். இதில், 'எல்லாவற்றையும்' என்பதில் வீட்டில் இருக்கும் கார், பைக் போன்ற வாகனங்களும் அடங்குகின்றன. ஆயுத பூஜையின் போது ஏழை எளியோரில் இருந்து பணக்காரர்கள் வரையில் தங்களது வாகனங்களுக்கு பூஜை செய்கின்றனர்.
இன்றைய செல்போன் உலகில் எல்லாவற்றையும் காட்சிப்படுத்துவது போல், ஆயுத பூஜையின் போது அலங்கரிக்கப்பட்ட தங்களது வாகனங்களையும் மக்கள் பலர் தங்களது மொபைலில் காட்சிப்படுத்தி இணையத்தில் உலாவ விடுவதை பார்க்க முடிகிறது. அந்த வரிசையில், இங்கு ஒரு எம்.எல்.ஏ தனது வீட்டில் உள்ள விலையுயர்ந்த கார்களுக்கு பூஜை செய்வதை வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த எம்.எல்.ஏ வேறு யாரும் இல்லை, இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ என அழைக்கப்படும் எம்டிபி நாகராஜ் ஆவார். கர்நாடகாவை சேர்ந்தவரான எம்டிபி நாகராஜ் முதலில் ஒரு பெரும் பணக்காரர் ஆவார். அதன்பின்னரே, அவர் எம்.எல்.ஏ ஆகினார். ஹோசகோட் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ ஆக தேர்வு செய்யப்பட்ட எம்டிபி நாகராஜ் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். தற்போது, பாரதீய ஜனதா கட்சியில் அங்கம் வகிக்கிறார்.
கர்நாடகாவில் முந்தைய ஆட்சியில் சிறு வணிக மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். 2004ஆம் ஆண்டில் இருந்து மாநில சட்டசபை தேர்தல்களை சந்தித்துவரும் 73 வயதான எம்டிபி நாகராஜ் பிரம்மாண்டமான பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ரோல்ஸ்-ராய்ஸில் இருந்து ரேஞ்ச் ரோவர் வரையில் பல்வேறு சொகுசு கார்கள் இவரிடம் உள்ளன.

அவற்றிற்கு சமீபத்தில் ஆயுத பூஜை போடும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளது. வீடியோவில், எம்.எல்.ஏ எம்டிபி நாகராஜின் பார்க்கிங் ஏரியாவில் இருந்து கொண்டுவரப்படும் அவரது விலையுயர்ந்த கார்கள் நாகராஜின் பங்களா வீட்டிற்கு முன் வரிசையாக நிறுத்தப்பட்டு, மாலை அணிவிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டுள்ளது. அப்போது, எம்.எல்.ஏ எம்டிபி நாகராஜ் அந்த பூஜைகளை கார்களுக்கு எதிரே அமர்ந்தப்படி கவனித்தார்.
பின்னர், அப்படியே பார்க்கிங் பகுதிக்கு கொண்டு செல்லக்கூடாது என்பதற்காக, கார்களில் ஒரு சிறிய ரவுண்ட் சென்றுவந்தனர். எம்.எல்.ஏ எம்டிபி நாகராஜிடம் உள்ள ரூ.12 கோடி மதிப்பிலான ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் சீரிஸ்-8, நீல நிறத்திலான ஃபெராரி எஃப்8 ட்ரைபுடோ, லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி உள்ளிட்ட சொகுசு கார்களுக்கு ஆயுத பூஜை நடத்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கர்நாடக எம்.எல்.ஏ எம்டிபி நாகராஜிடம் ஏகப்பட்ட சொகுசு கார்கள் உள்ளன. அவற்றை எல்லாம் கொண்டுவந்தால், வீட்டிற்குமுன் நிறுத்துவதற்கு இடம் இருக்காது. இதனால்தான், வீட்டிற்கு அருகே தனியாக ஒரு பார்க்கிங் பகுதியில் அவற்றை நிறுத்தி வைத்துள்ளார். ஆயுதபூஜை செய்வதற்கு அவற்றுள் விருப்பமான 4 கார்களை மட்டுமே வீட்டிற்குமுன் கொண்டுவந்துள்ளனர். இதில் இருந்து இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ எந்த அளவிற்கு பணக்காரர் என்பதை அறியலாம்.


Click it and Unblock the Notifications









