இந்தியாவின் சொந்த ஜிபிஎஸ் சிஸ்டம் தயார்: சோதனைக்கு பிறகு அனுமதி!
இந்தியாவின் சொந்த ஜிபிஎஸ் சிஸ்டம் கனவு நனவாகிறது. ஆம், அமெரிக்காவின் ஜிபிஎஸ் போன்ற நவீன நேவிகேஷன் வசதி விரைவில் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வருகிறது.
இதற்காக, ஏழாவது மற்றும் கடைசி செயற்கைகோள் நேற்று விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அடுத்த சில மாதங்கள் சோதனை ஓட்டத்திற்கு பின், சுதேசி நேவிகேஷன் சிஸ்டம் பொது பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

சொந்த நேவிகேஷன் திட்டம்
அமெரிக்காவின் ஜிபிஎஸ் நேவிகேஷனை் சிஸ்டம்தான் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தற்போது நம் நாட்டிற்கான சொந்த நேவிகேஷன் வசதியை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வழங்க இருக்கிறது. கடந்த 12 ஆண்டுகால ஆராய்ச்சி மற்றும் முயற்சியில் இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வருகிறது.

செயற்கைகோள்கள்
ஐஆர்என்எஸ்எஸ் என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்ட இந்த திட்டத்திற்காக ஏழு செயற்கைகோள்களை இந்தியா பயன்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக, ஏழாவது மற்றும் கடைசி செயற்கைகோளான ஐஆர்என்எஸ்எஸ் 1ஜி, நேற்று ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-33 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

தயார்
தற்போது ஏழு செயற்கைகோள்களுடன் இந்தியாவின் சொந்த நேவிகேஷன் சிஸ்டம் தயார் நிலையில் இருக்கிறது. அடுத்த சில மாதங்கள் சோதனை ஓட்டம் மற்றும் கண்காணிப்புக்கு பிறகு, இந்த நேவிகேஷன் சிஸ்டம் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பெயர்
ஐஆர்என்எஸ்எஸ் 1ஜி செயற்கைகோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட உடன், இந்தியாவின் சொந்த நேவிகேஷன் சிஸ்டத்திற்கு, NAVIC என்று பெயரிடப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். கடலாடிகளை மனதில் வைத்து Naviks என்று பொருள்படும் வகையில் இந்த பெயரிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். நாட்டு மக்களுக்கு விலை மதிப்பில்லாத பரிசை இஸ்ரோ விஞ்ஞானிகள் வழங்கியிருப்பதாகவும் கூறினார்.

இதர நாடுகள்
இந்திய எல்லைப்பகுதியிலிருந்து 1,500 கிமீ தொலைவு வரை இந்த ஜிபிஎஸ் நேவிகேஷன் சிஸ்டம் செயல்படும். எனவே, அண்டை நாடுகளும் இந்தியாவின் நாவிக் நேவிகேஷன் சிஸ்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

துல்லியம்
இலக்கிலிருந்து 10 மீட்டர் 20 மீட்டர் தொலைவுக்குள் இடத்தை காட்டும் துல்லியத்தில் நமது நாட்டு நாவிக் நேவிகேஷன் சிஸ்டம் செயல்படும். எனவே, அமெரிக்காவின் ஜிபிஎஸ் நேவிகேஷனை விட இது மிகவும் துல்லியமான தகவல்களையும், வழிகாட்டுதல் பணிகளையும் செய்யும்.

பயன்பாடு
வான் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, தரை போக்குவரத்து என மூன்றிற்கும் இது பயன்படும். மாலுமிகள், மீனவர்கள், விமான பைலட்டுகள், கார் நேவிகேஷன் சிஸ்டம் என்று இந்தியாவின் அனைத்து வகை போக்குவரத்து துறைகளின் உயிர் நாடியாக நாவிக் நேவிகேஷன் சிஸ்டம் விளங்கும்.

கார்களில்...
கார்களில் வாய்மொழி மற்றும் திரைவழி வழிகாட்டு தகவல்களை பெறுவதற்கு நாவிக் நேவிகேஷன் பயன்படும்.

மீனவர்களுக்கும்...
குறிப்பாக, மீனவர்கள் இனி மிக துல்லியமாக இந்திய எல்லைகளை கண்டறிந்து கொள்ளவும், வழிகாட்டுதல் தகவல்களையும் பெறவும் இயலும். இதனால், எல்லை தாண்டி மீன் பிடிப்பது உள்ளிட்ட பல இடர்பாடுகள் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமான போக்குவரத்து...
விமானங்களை மிக துல்லியமாகவும், சரியாகவும் தரையிறக்குவதற்கு இந்த புதிய நாவிக் நேவிகேஷன் சிஸ்டம் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது விமானிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

ராணுவ பயன்பாடு
பொது பயன்பாடு தவிர்த்து, பேரிடர் மீட்புப் பணிகள் மற்றும் ராணுவ பயன்பாட்டுக்கும் இந்த புதிய நாவிக் நேவிகேஷன் பயன்படும். ராணுவ பயன்பாட்டுக்காக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த விசேஷ நாவிக் நேவிகேஷன் வசதி வழங்கப்படும். ஏவுகணைகளை ரகசியமாகவும், துல்லியமாகவும் செலுத்த முடியும். எனவே, போர் சமயங்களில் இந்த புதிய நேவிகேஷன் சிஸ்டத்தின் பயன்பாடு மிக அளப்பறியதாக இருக்கும்.

பெருமை
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐரோப்பாவிற்கு அடுத்து சொந்த நேவிகேஷன் வசதியை பெற்றிருக்கும் 5-வது நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணிக்கை
அமெரிக்காவின் ஜிபிஎஸ் சிஸ்டம், ரஷ்யாவின் க்ளோனாஸ் சிஸ்டம், சீனாவின் பெய்டவ் சிஸ்டம், ஐரோப்பாவின் கலிலியோ நேவிகேஷன் சிஸ்டம்கள் குறைந்தது 28 முதல் 35 செயற்கைகோள்களுடன் இயங்கி வருகிறது. ஆனால், இந்தியாவின் நேவிகேஷன் சிஸ்டம் வெறும் 7 செயற்கைகோள்களுடன் இயங்க உள்ளது.

அவசர கால செயற்கைகோள்கள்
தற்போது விண்ணில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் செயற்கைகோள்களில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், பிரச்னையை சமாளிக்க இரண்டு செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

முதலீடு
விண்ணில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ஏழு செயற்கைகோள்களின் மதிப்பு ரூ.1,420 கோடி என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த செயற்கைகோள்கள் 12 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. 24 மணிநேரமும் சேவையை வழங்கும்.

கட்டுப்பாட்டு மையம்
பெங்களூரிலுள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இந்த நாவிக் நேவிகேஷன் சிஸ்டம் கட்டுப்படுத்தப்படும்.

கனவுகள் நனவாகிறது...
அண்டை நாடுகளிடம் பல விஷயங்களுக்கு சார்ந்திருந்த நிலையில், தொழில்நுட்பத்தில் வல்லரசாக மிக வேகமாக உயர்ந்து வருகிறது இந்தியா. ராக்கெட்டுகளை ஏவுவதில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தியா தற்போது சொந்த நேவிகேஷன் மூலமாக, நாட்டின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்துள்ளது.

பிஎஸ்எல்வியை கண்டு அலறும் அமெரிக்க ராக்கெட் நிறுவனங்கள்!


Click it and Unblock the Notifications








