பாஸ்போர்ட்டே இல்லாமல் வெளிநாடு பயணித்த 178 பயணிகள்! இண்டிகோ விமானத்தில் நடந்த அதிசயம்!
மும்பையில் இருந்து அசாம் மாநிலத்திற்கு சென்ற விமானம் ஒன்று கடும் பனிப்பொழிவு காரணமாக தரையிறங்க முடியாமல் வங்கதேச நாட்டிற்கு சென்று தரை இயங்கிய சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனால் 178 பேர் பாஸ்போர்ட்டே இல்லாமல் வங்கதேசத்திற்கு சென்று திரும்பி உள்ளனர். இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மும்பையில் இருந்து இண்டிகோ விமானம் 6இ 5319 என்ற எண் கொண்ட விமானம் அசாம் மாநிலம் கவுஹாத்திக்கு செல்வதற்காக நேற்று மும்பை விமான நிலையத்தில் தயாராகிக் கொண்டிருந்தது. இந்த விமானத்தில் சுமார் 178 பயணிகள் டிக்கெட் விலை புக் செய்து விமானத்தில் ஏறி இருந்தார்கள். இந்த பயணிகள் எல்லாம் அசாம் மாநிலம் கவுஹாத்தியிலுள்ள விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டும்.

நேற்று இரவு விமானம் மும்பையில் இருந்து கிளம்பி கவுஹாத்திக்கு செல்வதற்காக டேக் ஆப் செய்தது. இந்நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக அசாம் மாநிலம் கவுஹாத்தியிலுள்ள விமான நிலையத்தில் விமானியால் விமானத்தை தரை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் விமானி விமானத்தை கொல்கத்தா விமான நிலையத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்தார். ஆனால் கொல்கத்தா விமான நிலையத்திலும் வானிலை மிக மோசமாக இருந்ததால் அங்கும் தரையிறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
பின்பு அவர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் விமான நிலையத்தில் விமானத்தில் தரை இறக்கலாம் என முடிவு செய்து அதற்கான கோரிக்கையை அனுப்பும் போது புவனேஸ்வரில் உள்ள விமான ஓடுதளம் அவர்கள் தரையிறங்க கோரிய நேரத்தில் மூடப்பட்டிருந்ததாகவும் அதனால் விமானம் தரையிறங்குவதற்கான ஏற்பாடுகள் எதுவும் அங்கே செய்ய முடியாது என்ற சூழ்நிலை இருப்பதாகவும் தகவல் வந்தது.

இதையடுத்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானி விமானத்தை வங்கதேச நாட்டில் உள்ள டாக்கா விமான நிலையத்தில் தரையிறக்க முடிவு செய்தார். இதற்கான அனுமதியையும் கோரினார் அதற்கான அனுமதி கிடைத்த நிலையில் விமானம் வங்கதேச நாட்டில் உள்ள டாக்கா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. ஆனால் விமானத்திலிருந்து ஒரு பயணியும் விமானத்திலிருந்து கீழே இறங்க கூடாது என்ற நிபந்தனையின் கீழ் தான் இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இது குறித்த தகவல் பயணிகளுக்கு தெரிவிக்கப்பட்டதுபின்னர் விமானம் டாக்கா விமான நிலையத்தில் சரியாக அதிகாலை 4 மணிக்கு தரை இறங்கியது. அங்கிருந்து வானிலை சரியாவதற்காக பயணிகள் காக்க வைக்கப்பட்டார்கள். அந்த நேரத்தில் பயன்களுக்கான உணவுகள் எல்லாம் வழங்கப்பட்டன. மேலும் பயணிகளிடம் ஏன் கவுஹாத்தி விமான நிலையத்தில் தரையிறக்க முடியவில்லை என்பதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டது.
பின்னர் இண்டிகோ நிறுவனம் வங்கதேச நாட்டிலேயே தனது விமான பணியாளர்களை எல்லாம் மாற்றி விட்டு புதிய விமான பணியாளர்கள் மற்றும் பைலட் மூலம் அதன் விமானம் டேக் ஆஃப் செய்யப்பட்டு கவுஹாத்திக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கு சுமார் 4 மணி நேரம் வரை அவர் பயணிகள் விமானத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
வானிலை சூழ்நிலைகள் சரியான பின்பு விமானம் வங்கதேச நாட்டில் உள்ளதாக விமான நிலையத்திலிருந்து டேக் ஆஃப் செய்யப்பட்டு மீண்டும் கவுஹாத்தி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இந்த விமானத்தில் காங்கிரஸ் பிரமுகர் சுராஜ் சிங் தாகூர் என்பவர் பயணித்துக் கொண்டிருந்தார். அவர்தான் தனது எக்ஸ் தளத்தில் இந்த சம்பவம் குறித்து பகிர்ந்து இருந்தார் . மேலும் அவர் குறைந்த விலையில் சர்வதேச சுற்றுலா சென்றுள்ளதாக பதிவு செய்திருந்தார்.
இவர் மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடா யாத்ரா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டார். பொதுவாக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் என்றால் பாஸ்போர்ட் என்பது கட்டாயமான விஷயமாக இருக்கும். ஆனால் இந்த 178 பயணிகள் பாஸ்போர்ட் இல்லாமலேயே வங்கதேசத்திற்கு பயணம் செய்து வந்துள்ளனர். இது மிக அரிதாக நடக்கும் ஒரு விஷயம் தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக ஒரு நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றால் பாஸ்போர்ட் இருக்க வேண்டும். கஸ்டம்ஸ் அதிகாரிகளின் சோதனைகள் எல்லாம் இருக்கும். இதையெல்லாம் தாண்டி தான் வெளிநாடு பயணம் செய்ய முடியும். ஆனால் இந்த 178 பயணிகள் உள்நாட்டு விமானத்திலேயே வெளிநாட்டு பயணம் செய்து பாக்கியசாலிகளாக மாறி உள்ளனர்.


Click it and Unblock the Notifications








