கடுமையான மன உளைச்சலில் விமானிகள்... மனது உருகும் வீடியோ வெளியிட்ட இன்டிகோ பைலட்..
கடல் தாண்டி பறக்கும் பறவைகளைப் போல தினமும் விமானத்தில் பறந்துக் கொண்டிருந்த விமானிகள் கொரோனாவால் கடும் மன உலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் வீடியோ பற்றிய தகவலை இந்த பதிவில் காணலாம்.

கொரோனா வைரசின் தீவிரம் மேலும் அதிகாரிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதிலும் ஊரடங்கு (144 தடை) உத்தரவு அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களின் நடமாட்டத்தைக் குறைத்து, ஒவ்வொருவரையும் அவரவர்களின் வீட்டுக்குள்ளேயே முடக்க வேண்டுடம் என்பதற்காகவே இதனை மத்திய அரசு இந்தியா முழுவதும் கொண்டு வந்துள்ளது.

மத்திய அரசின் இந்த உத்தரவை அடுத்து அந்தந்த மாநிலங்கள் அதன் எல்லையை (வாசக் கதவுகளை) அடைத்துவிட்டன. தொடர்ந்து, போக்குவரத்தை முற்றிலும் முடக்கும் விதமாக அவசர வாகனத்தைத் தவிர மற்ற அனைத்துவிதமான வாகனங்களின் இயக்கத்திற்கும் தடை விதித்தன.

ஆரம்பத்தில் ஷேர் ஆட்டோக்கள், கால் டாக்ஸிகள் என மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வாகனங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டு வந்தநிலையில், திடீரென பேருந்து, ரயில் மற்றும் விமானம் என அனைத்துவிதமான போக்குவரத்திற்கும் தற்காலிக மூடு விழா அறிவிக்கப்பட்டது.

இதனால், தினம் தினம் வெவ்வேறு இடங்களைப் பார்த்து வந்த ஓட்டுநர்கள் தற்போது வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் தற்போது கடும் மன உலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். ஒரு பக்கம் வருவாய் இழப்பு, மறுபக்கம் வீட்டுக்குள்ளேயே அடைந்துக் கிடப்பது இவ்வாறு பல இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அவர்கள் தவித்து வருகின்றனர்.

ஓட்டுநர்களின் இந்த நிலையை விவரிக்கும் விதமாக இந்திய விமானிகள் சிலர் ஓர் உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ, சிறகை இழந்த பறவைகள் பறக்க முடியாமல் எப்படி தவிக்குமோ, அதேநிலையை விமானிகளும் பெற்றிருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

மேலும், அந்த வீடியோவில் வரும் அனைவரும் 'விரைவில் நாங்கள் பரப்போம்' என்ற முழக்கத்தையே முன் வைத்தவாறு இருக்கின்றனர். இதைவைத்து பார்க்கையில், பறவைகள் போல் தினம் தினம் வானில் பறந்து வந்த விமானிகள், தற்போது வீட்டை விட்டுகூட வெளியேற முடியாத நிலையில் இருப்பதால் கடும் மன உலைச்சலுக்கு ஆளாகியிருப்பது தெரிய வருகின்றது.

தற்போது, இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை இன்டிகோ விமான நிறுவனத்தின் விமானியான பிரதீப் கிருஷ்ணன் உருவாக்கி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விமானிகளுக்கு ஏற்பட்டிருக்கும் இதே நிலைதான் உலகின் அனைத்து துறையும் சார்ந்தவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

இதனால் பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பது மட்டுமின்றி வருமானம் இன்றியும் தவித்து வருகின்றனர். மேலும், அத்தியாவசிய பொருட்களின் தேவையும் கேள்விக் குறியாகியுள்ளது.
இம்மாதிரியான சூழ்நிலையை வெளிப்படுத்தும் விதமாகவே இன்டிகோ விமானிகள் ஒரு சேர வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவில் இப்போது அத்தியாவசிய மற்றும் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானங்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால், இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து 80-90 மில்லியன் அளவிலான இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இழப்பு வரும்காலங்களில் இன்னும் அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. இதே இழப்பைதான் சர்வதேச விமான போக்குவரத்தும் சந்தித்து வருகின்றது. இதன் பின்விளைவாக ஒவ்வொரு நாடும் வரும் நிதியாண்டுகளில் மிகப்பெரிய இக்கட்டான சூழ்நிலையைச் சந்திக்க இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








