ஷாக்! டூவீலர் மீது மோதிட்டு நிக்காம போனது அவரா! பக்கத்து சீட்ல இருந்த பொண்ணு கிட்ட சொன்ன விஷயம்லா ரொம்ப ஓவர்!
இன்றைய காலகட்டம் சமூக வலை தளங்களின் இன்ஃப்ளூயன்சர்களுக்கானது (Social Media Influencers). இன்ஸ்டாகிராம் (Instagram), ஃபேஸ்புக் (Facebook) மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது நிறைய பேர் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளனர். இதில், ஒரு ரகத்தினரால் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் இன்னொரு தரப்பினரோ, தங்கள் நடவடிக்கைகள் மூலம், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்கின்றனர். டிடிஎஃப் வாசன் (TTF Vasan) போன்றவர்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். இந்த வரிசையில் தற்போது ஒரு இன்ஃப்ளூயன்சர் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அவர் ரஜத் டலால் (Rajat Dalal) ஆவார். பாடிபில்டரான இவர், இன்ஸ்டாகிராம் தளத்தில் ஃபிட்னஸ் வீடியோக்களை (Fitness Videos) வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராம் தளத்தில் மட்டும் இவரை சுமார் 5.50 லட்சம் பேர் பின் தொடர்ந்து கொண்டுள்ளனர். இப்படி அதிக ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ள ரஜத் டலால், தற்போது சாலை விபத்து ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், ரஜத் டலால் அதிவேகமாக கார் ஓட்டி கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. பரபரப்பான சாலையில், அபாயகரமான முறையில் அவர் காரை ஓட்டுகிறார்.
அது அனேகமாக ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) காராக இருக்கலாம். இது செடான் (Sedan) ரகத்தை சேர்ந்தது. இந்த காரை ரஜத் டலால் மிகவும் அபாயகரமான முறையில் ஓட்டியது, அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த நபரால் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோதான், சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்த வைரல் வீடியோவில், ரஜத் டலாலுக்கு அருகே பெண் ஒருவர் அமர்ந்துள்ளார். வீடியோவை பார்க்கும்போதே, அவர் பயத்தில் இருப்பது தெரிகிறது. ஏனெனில் ரஜத் டலால், மணிக்கு சுமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டினார். இது அதிவேகம் என்பதுடன், அவர் காரை ஓட்டிய விதமும் சரியாக இல்லை.
இதன் காரணமாக ஒரு கட்டத்தில், டூவீலர் ஒன்றின் மீது அவரது கார் மோதியது. இது குறித்து ரஜத் டலாலிடம், முன்னால் அமர்ந்திருந்த பெண் தெரிவித்தார். ஆனால் ரஜத் டலால் அதை எல்லாம் காதில் போட்டு கொள்ளவே இல்லை. இது போன்ற சம்பவங்கள் தினமும் நடக்கும் எனவும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை எனவும் ரஜத் டலால் மிகவும் அலட்சியமாக பதில் அளித்தார்.
ரஜத் டலாலின் இந்த குணம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தற்போது வரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் இது மிகப்பெரிய தவறு என்பதால், நடவடிக்கை பாயும் என நாம் நம்பலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சாலையில் மிகவும் கவனமாக காரை ஓட்ட வேண்டும். அதிவேகம் கூடவே கூடாது. ஒரு வேளை விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டிருப்பினும், எதிர்பாராதவிதமாக சாலை விபத்து (Road Accident) நிகழ்ந்து விட்டால், காரை நிறுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
ஆனால் இவை எதையும் ரஜத் டலால் பின்பற்றவில்லை. எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளமும் வலியுறுத்துகிறது. இவர் மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கை, மற்றவர்களுக்கு எல்லாம் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








