வங்க கடலில் மொத்த ஆதிக்கமும் இனி நம்மள்து தான்! போர்னு வந்துட்டால் சீறி பாய போர்க்கப்பல் தயார்!
உலகிலேயே வலிமையான கடற்படையை கொண்ட நாடுகளுள் நமது இந்தியாவும் ஒன்றாகும். இருப்பினும், இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் இரு போர்க்கப்பல்களை மத்திய அரசு இந்திய கப்பற்படையில் சேர்த்துள்ளது. அந்த இரு போர் கப்பல்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
ஆகஸ்ட் 26ஆம் தேதி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) முன்னிலையில் இரு போர்க்கப்பல்கள் இந்திய கப்பல் படையில் இணைக்கப்பட்டன. ஐ.என்.எஸ் உதய்கிரி (INS Udaygiri) மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி (INS Himgiri) என்கிற பெயரில் அழைக்கப்படும் இந்த இரு போர்க்கப்பல்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கிழக்கு கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலமாக, வங்காள விரிகுடா கடலில் இந்திய கடற்படையின் ஆதிக்கம் வலுபெற்று உள்ளது. ஒரே கடற்படை தளத்தின் கீழ் செயல்பட உள்ள இந்த போர்க்கப்பல்கள் இரண்டும் வெவ்வேறான கப்பல் கட்டும் தளங்களில் உருவாக்கப்பட்டவை ஆகும். இந்திய கடற்படையின் திட்டம் 17ஏ-இன் ஒரு பகுதியாக இந்த இரு போர்க்கப்பல்கள் படையில் சேர்க்கப்பட்டு உள்ளன.
இந்திய கடற்படையின் நில்கிரி வகுப்பின் கீழ் இந்த போர்க்கப்பல்கள் வருகின்றன. இதனால்தான், இந்த போர்க்கப்பல்களின் பெயர்களில் 'கிரி' என்கிற வார்த்தை இடம்பெற்றுள்ளது. போர் சூழல் வந்தால், இந்திய கடற்படையின் 'ஷிவலிக்' (Shivalik) வகுப்பு போர்க்கப்பல்களை பின்தொடர்ந்து நில்கிரி போர்க்கப்பல்கள் செல்லும். அதற்காக நில்கிரி போர்க்கப்பல்களை சாதாரணமானவைகளாக எடுத்து கொள்ள வேண்டாம்.

நில்கிரி போர்க்கப்பல்கள் வலிமையான உலோகங்களில் உருவாக்கப்பட்டவைகளாக உள்ளன. அதேநேரம், வேகமாக இயங்குவதிலும், பல்வேறு விதமான திட்டங்களுக்கு பயன்படுத்தக் கூடியதாகவும் நில்கிரி போர்க்கப்பல்கள் விளங்குகின்றன. ஐஎன்எஸ் உதய்கிரி போர்க்கப்பலை பொறுத்தவரையில், இதனை மும்பையை சேர்ந்த மசாகன் டக் (Mazagon Dock) என்கிற கப்பல் கட்டும் நிறுவனம் உருவாக்கி உள்ளது.
இந்த ஐஎன்எஸ் உதய்கிரி போர்க்கப்பலை கடந்த 2025 ஜூலை 1ஆம் தேதியே சம்பந்தப்பட்ட கப்பல் கட்டும் நிறுவனம் இந்திய கடற்படைக்கு வழங்கிவிட்டது. இந்த போர்க்கப்பலை உருவாக்கியது என்னமோ மசாகன் டக் நிறுவனமாக இருப்பினும், கப்பலை வடிவமைத்தது இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகம் ஆகும். இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகம் வடிவமைத்த 100வது போர்க்கப்பல், ஐஎன்எஸ் உதய்கிரி ஆகும்.

ஐஎன்எஸ் ஹிம்கிரி போர்க்கப்பலை பொறுத்தவரையில் இதனை கொல்கத்தாவை சேர்ந்த கார்டன் ரீச் (Garden Reach) என்கிற கப்பல் கட்டும் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த போர்க்கப்பலின் சோதனை பணிகளும் உற்பத்தி நிறுவனத்தால் கடந்த 2025 மார்ச் மாதத்திலேயே நிறைவு பெற்றுவிட்டது. அதனை தொடர்ந்து, கடந்த ஜூலை 31ஆம் தேதியில் இந்திய கடற்படையிடம் ஐஎன்எஸ் ஹிம்கிரி டெலிவிரி (Delivery) செய்யப்பட்டது.
ஐஎன்எஸ் உதய்கிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி என இரு போர்க்கப்பல்களும் ஏறக்குறைய தலா 6,700 டன்கள் எடை கொண்டவைகளாக உள்ளன. எடையில் மட்டுமில்லாமல் இந்த போர்க்கப்பல்கள் இரண்டும், இந்திய கடற்படையில் உள்ள ஷிவலிக் போர்க்கப்பல்களை காட்டிலும் கிட்டத்தட்ட 5 மடங்கு அளவில் பெரியவை ஆகும். இந்த போர்க்கப்பல்கள் இரண்டும் டீசல் (Diesel) மற்றும் எரிவாயு மூலமாக இயங்கக்கூடியவைகளாக உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஐஎன்எஸ் உதய்கிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி போர்க்கப்பல்கள் இரண்டும் கிட்டத்தட்ட 75% இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்டவை ஆகும். இதன் மூலம், கடற்படையை வலுப்படுத்தியது மட்டுமின்றி, மேட்-இன்-இந்தியா தயாரிப்புகளை பயன்படுத்துவதையும் 'அட்மனிர்பார் பாரத்' (Aatmanirbhar Bharat) திட்டத்தின் மூலமாக மத்திய அரசு மீண்டும் உறுதிச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications









