ஸ்டார் ஹோட்டலாக மாறுகிறது ஐஎன்எஸ் விராத் போர்க்கப்பல்!
இந்திய கடற்படை சேவையிலிருந்து விரைவில் விடைபெற இருக்கும் ஐஎன்எஸ் விராத் விமானம் தாங்கி போர்க்கப்பலை 5 நட்சத்திர விடுதியாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்த நட்சத்திர விடுதி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மிக நீண்டகாலமாக இந்திய கடற்படையில் சேவையாற்றி வரும் ஐஎன்எஸ் விராத் விமானம் தாங்கி போர்க்கப்பலின் நட்சத்திர விடுதி திட்டம் குறித்த சுவாரஸ்யத் தகவல்களை ஸ்லைடரில் தொடர்ந்து காணலாம்.

500 அறைகள்
இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலை 500 அறைகள் கொண்ட 5 நட்சத்திர விடுதி மற்றும், மியூசியமாகவும் மாற்றுவதற்கு ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.

கட்டணம்
அதிகபட்சமாக கமாண்டர் அறையில் ஓர் இரவு தங்குவதற்கு ஒரு லட்சம் முதல் இரண்டு லட்ச ரூபாய் வரை கட்டணம் இருக்கும்.

ஹெலிபேட்
இந்த போர்க்கப்பலின் மேல்புறத்தில் ஹெலிகாப்டரை தரை இறக்குவதற்கான வசதி இருப்பது விஐபி.,கள் வந்து செல்வதற்கு பெரும் சாதகமான அம்சம்.

மாநாட்டு கூடம்
அறைகள் தவிர்த்து, பெரிய அளவிலான கூட்டங்களை நடத்துவதற்கான அரங்கமும் இந்த போர்க்கப்பலில் இருக்கும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

முயற்சி
இந்த போர்க்கப்பலை கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், இதற்கு கூடிய விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என்றும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் இந்த நட்சத்திர விடுதி போர்க்கப்பல் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்படும். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் இந்த கப்பலில் அருமை, பெருமைகளை காணலாம்.

பழமையான போர்க்கப்பல்
ராயல் நேவி என்று அழைக்கப்படும் இங்கிலாந்து கடற்படையில் எச்எம்எஸ் ஹெர்மிஸ் என்ற பெயரில் 1959ம் ஆண்டு சேவைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலை, கடந்த 1987ம் ஆண்டு இந்தியா வாங்கியது. அதனை ஐஎன்எஸ் விராத் என்ற பெயரில் இந்திய கடற்படை சேவையில் அறிமுகம் செய்தது.

வடிவம்
இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் 743 அடி நீளம் கொண்டது. 23,900 டன் எடை கொண்டது. அதிகபட்சமாக 143 விமானப் படை வீரர்களும், 950 கப்பல் ஊழியர்களும் பணிபுரிகின்றனர். வரும் 2020ம் ஆண்டு வரை பயன்பாட்டில் வைப்பதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், பராமரிப்பு மற்றும் இயக்குதல் செலவீனம் மிக அதிகமாக இருப்பதால், கடற்படை சேவையிலிருந்து விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

தொழில்நுட்ப விபரம்
இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் மணிக்கு 52 கிமீ வேகம் வரை செல்லும். 10,500 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த கப்பலில் போர் விமானங்களை செலுத்துவதற்காக 14 டிகிரி சாய்தள ஓடுதள மேடை அமைந்துள்ளது.

விமானங்கள்
இந்த போர்க்கப்பலில் 26 விமானங்களை நிறுத்த முடியும். இந்த போர்க்கப்பலில் 16 சீ ஹாரியர் போர் விமானங்களும், 4 வெஸ்ட்லேண்ட் சீ கிங் எம்கே 42 பி-சி ஹெலிகாப்டர்களும், 2 எச்ஏஎல் சேட்டக் ஹெலிகாப்டர்களும், 4 எச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டர்களும் நிறுத்தப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








