வெளியானது அதிரடி உத்தரவு... இனி கஸ்டமர்கள் தலையில் வாகன டீலர்கள் மிளகாய் அரைக்க முடியாது... செக் வெச்சுட்டாங்க
கார், பைக் போன்ற வாகனங்களை விற்பனை செய்யும் டீலர்களுக்கு 'செக்' ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய நாடாளுமன்றத்தால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்புகளில் ஒன்று இந்திய போட்டி ஆணையம் (Competition Commission of India - CCI). வாடிக்கையாளர்களின் நலன்களை பாதுகாப்பது, இந்த ஆணையத்தின் முக்கியமான பணிகளில் ஒன்றாகும். இந்திய போட்டி ஆணையத்திற்கு ஏராளமான துறைகளில் இருந்து புகார்கள் செல்லும். இதில், ஆட்டோமொபைல் துறையும் ஒன்றாகும்.

வாடிக்கையாளர்கள் புதிய கார் மற்றும் பைக் போன்ற வாகனங்களை வாங்கும்போது டீலர்ஷிப்களால் அரங்கேற்றப்படும் ஒரு விதிமீறல் தொடர்பான புகார், இந்திய போட்டி ஆணையத்திற்கு அடிக்கடி செல்கிறது. பொதுவாக கார் மற்றும் பைக் போன்ற புதிய வாகனங்களை வாங்கும்போது டீலர்ஷிப்களால் வாடிக்கையாளர்கள் பல்வேறு வழிகளில் ஏமாற்றப்படுவதாக மிக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

குறிப்பிட்ட நிறுவனத்தில்தான் இன்சூரன்ஸ் (காப்பீடு) எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கட்டாயப்படுத்தப்படுவது இதில் ஒன்று. ''இங்குதான் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும், இந்த நிறுவனத்தில்தான் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்'' என வாடிக்கையாளர்கள் கட்டாயப்படுத்துவதாக நீண்ட காலமாக புகார்கள் இருந்து வருகின்றன.

இல்லாவிட்டால் இன்சூரன்ஸ் க்ளைம் செய்யும்போது நிறைய பிரச்னைகள் ஏற்படும் என வாடிக்கையாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு அதிக வாடிக்கையாளர்கள் இன்ஸ்சூரன்ஸ் எடுப்பதன் மூலம், வாகன டீலர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து கமிஷன் செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பிரச்னைக்கு இந்திய போட்டி ஆணையம் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. புதிய கார், பைக் போன்ற வாகனங்களை வாங்கும்போது டீலர்ஷிப்களில் இன்சூரன்ஸ் எடுப்பது கட்டாயம் கிடையாது என இந்திய போட்டி ஆணையம் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது. இன்சூரன்ஸ் தொடர்பாக வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்துவது தவறான விஷயம் என இந்திய போட்டி ஆணையம் கூறியுள்ளது.

தாங்கள் விரும்பும் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து சேவையை பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என இந்திய போட்டி ஆணையம் தெரிவித்துள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனங்கள்-ஆட்டோமொபைல் டீலர்ஷிப்களுக்கு இடையே இருப்பதாக கூறப்படும் கூட்டணி, அவர்களுக்கு வேண்டுமானால் பலன் அளிக்கலாம்.

ஆனால் பணம் செலவழித்து புதிய வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பலன் கிடைப்பது சந்தேகம்தான். டீலர்கள் பரிந்துரைக்கும் இன்சூரன்ஸ் நிறுவனத்தை விட, வாடிக்கையாளர்கள் சுயமாக தேர்வு செய்யும் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், வாடிக்கையாளர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவேதான் டீலர்ஷிப்களில் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது கட்டாயம் கிடையாது என இந்திய போட்டி ஆணையம் தற்போது அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை தடுப்பதற்கு, புதிய வாகனம் வாங்கும்போது என்னென்ன தேர்வுகள் உள்ளன? என்பது தொடர்பாக வாடிக்கையாளர்கள் அறிந்திருக்க வேண்டும் எனவும் இந்திய போட்டி ஆணையம் கூறியுள்ளது.

அத்துடன் தாங்கள் விரும்பும் இன்சூரன்ஸ் நிறுவனத்தை தேர்ந்து எடுக்கும் நிலையில் வாடிக்கையாளர்கள் இருக்க வேண்டும் என இந்திய போட்டி ஆணையம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற பிரச்னைகளை தவிர்ப்பதற்கு, ஷோரூம் வளாகத்தில், ''எந்தவொரு இன்சூரன்ஸ் சேவை நிறுவனத்திடம் இருந்தும் வாடிக்கையாளர்கள் இன்சூரன்ஸ் சேவைகளை பெறலாம்'' என்ற அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய போட்டி ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவு கார் மற்றும் பைக் போன்ற வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்திய போட்டி ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து, பல்வேறு டீலர்ஷிப்களும், இன்சூரன்ஸ் விஷயத்தில் தவறு நடக்காமல் பார்த்து கொள்ளும்படி தங்களது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








