இன்சூரன்ஸ் இருந்தும் கிளைம் பண்ண முடியாமல் போன சோகம்... அந்த தப்ப செய்யாம இருந்திருக்கலாம்!
எந்தவொரு வாகனமாக இருந்தாலும் அதற்கு காப்பீட்டு திட்டம் இருப்பது கட்டாயம் ஆகும். இது இல்லாத வாகனங்கள் மீது போலீஸார் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். விபத்து போன்ற அசம்பாவிதங்களின்போது ஏற்படும் கடுமையான இழப்புகளை ஈடுகட்ட காப்பீட்டு திட்டம் பெரும் உதவியாக இருக்கின்றது
இத்தகைய பயன்பாட்டைக் கருத்தில் கொண்டே இன்சூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால், இங்கு ஓர் நபர் இன்சூரன்ஸ் திட்டம் இருந்தும் அதை கிளைம் செய்ய முடியாமல் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றார். தனி நபர் பயன்பாட்டு வாகனத்தை வர்த்தக ரீதியாக பயன்படுத்தியாக கூறி காப்பீட்டு நிறுவனம் கிளைமை நிராகரித்து இருக்கின்றது.

இதை நிராகரிக்க இன்சூரன்ஸ் கம்பெனிக்கு முழு உரிமையும் உள்ளது என மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையமும் கூறியிருக்கின்றது. வாகனங்களின் தன்மை மற்றும் பயன்பாட்டை பொருத்து காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டு திட்டத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன. எதன் அடிப்படையில் காப்பீடு வழங்கப்படுகின்றதோ, அதன்கீழ் மட்டுமே அந்த வாகனங்களின் பயன்பாடும் இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை ஆகும்.
உதாரணமாக பயணிகள் வாகனத்தில் சரக்கை ஏற்றி செல்வது, சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது உள்ளிட்டவை விதிமீறிய செயல்கள் ஆகும். இந்த மாதிரியான சூழலில் அந்த குறிப்பிட்ட வாகனம் ஏதேனும் ஓர் வழியில் இழப்பைச் சந்திக்கும் என்றால், அந்த இழப்பிற்கான கோரிக்கையை காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்காது.

இத்தகைய சிக்கலையே மும்பையைச் சேர்ந்த ஓர் நபர் சந்தித்து இருக்கின்றார். அவர் தன்னுடைய காரின் வாயிலாக கூடுதலாக வருமானம் ஈட்டும் விதமாக வெளியாட்களுக்கு வாடகை விட்டதாகக் கூறப்படுகின்றது. காரை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பதிவு செய்திருக்கும் நிலையில், இத்தகைய செயலில் அவர் ஈடுபட்டிருக்கின்றார்.
மேலும், தனிப் பயன்பாட்டிற்கான கார் என கூறியே அதற்கான காப்பீட்டு திட்டத்தையும் அவர் பெற்றிருக்கின்றார். இந்த நிலையிலேயே ஓர் நபர் வாடகைக்கு எடுக்க வருவதை போல் வந்து, காரை நகட்டி (திருடிச்) சென்றிருக்கின்றார். இந்த சம்பவம் 2021 செப்டம்பர் 29 இல் அரங்கேறியதாகக் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து, காருக்கான இழப்பீட்டை கோரி இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் அவர் கோரிக்கை வைத்திருக்கின்றார்.

ஆனால், விதிகளை மீறி வாகனம் வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்பட்டு இருப்பதாகக் கூறி காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு கோரிக்கையை நிராகரிப்பு செய்திருக்கின்றது. இதனால் தான் மிகுந்த மன வேதனை அடைந்திருப்பதாகக் கூறி சொகுசு காரின் உரிமையாளர் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி இருக்கின்றார். இரு தரப்பின் வாதத்தையும் கேட்டறிந்த மன்றம், காப்பீட்டு நிறுவனத்திற்கு சாதகமான தீர்ப்பை வழங்கி இருக்கின்றது.
"பாலிசி ஆவணத்தில் கொடுக்கப்பட்ட விதிகளை மீறி வாகன உரிமையாளர் அதனை வர்த்தக ரீதியாக பயன்படுத்தி இருக்கின்றார். ஆகையால், காப்பீட்டு நிறுவனத்திற்கு கோரிக்கையை நிராகரிப்பதற்கான முழுமை உரிமையும் உண்டு என கூறி" இந்த வழக்கை மும்பை நுகர்வோர் மன்றம் முடித்து வைத்து இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
இதன் வாயிலாக நாம் தெரிந்துக் கொள்ள வேண்டியது, வாகனத்திற்கான காப்பீட்டை பெறும்போது அனைத்து விதிகளையும் கட்டாயம் படித்து தெரிந்துக் கொள்ள வேண்டும். காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டு கோரிக்கையை எப்படி வேண்டுமானாலும் நிராகரிப்புச் செய்யலாம் என்பதற்கான சான்றே இது ஆகும்.. ஆகையால், எந்த பயன்பாட்டிற்காக வாகனம் வாங்கப்பட்டதோ அந்த பயன்பாட்டிற்கு மட்டுமே வாகனங்களை பயன்படுத்துவதே புத்திச் சாலி தனமானது.


Click it and Unblock the Notifications








