டிரஃபிக் ரூல்ஸை மதிக்கிறதே கிடையாது! இந்தியாவிற்கு உலக அளவில் ஏற்பட்ட அவமானம்!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் உலக அளவில் நிகழும் சாலை விபத்துக்கள் மற்றும் ஓட்டுநர் குறித்த தகவல்களைச் சேகரித்து உலகின் சிறந்த ஓட்டுனர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது? இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்? இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சாலை விபத்துகளில் ஏராளமான மக்கள் உயிரிழந்து கொண்டே இருக்கின்றனர். உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 13.5 லட்சம் மோசமான சாலை விபத்துக்கள் நடக்கிறது.இந்த எண்ணிக்கை இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துக்களையும் சேர்த்து.

உலக அளவில் தினமும் சாலை விபத்துகளில் மட்டும் 3700 பேர் தங்கள் உயிரை இழக்கின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கம்பேர் மார்க்கெட் ஆஸ்திரேலியா என்ற நிறுவனம் உலக அளவில் உள்ள ஓட்டுநர்களின் தகவல் மற்றும் சாலை விபத்துக்கள் குறித்து ஒரு ஆய்வு ஒன்றை நடத்தியது.
இந்த ஆய்வின் முடிவாக உலகில் திறமையான ஓட்டுநர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நாடு ஜப்பான். இந்த நாட்டில் தான் ஓட்டுநர்கள் மிகப் பாதுகாப்பான முறையில் வாகனத்தை ஓட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, கனடா, ஸ்பெயின் ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இருக்கிறது.

இந்த பட்டியலில் மொத்தமே 20 நாடுகள் இருக்கும் நிலையில் இந்தியா இந்த பட்டியலில் 17வது இடத்தை பிடித்துள்ளது. இது இந்தியாவில் மிக மோசமான டிரைவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிடும் விதமாக இருக்கிறது. இந்த செய்தி இந்திய மக்களுக்கு நிச்சயம் ஒரு சோகமான செய்தி தான்.
இந்த ஆய்வில் ஒவ்வொரு நாட்டிலும் ஆண்கள் பெண்கள் என ஒவ்வொருவரும் எவ்வளவு விபத்துக்களை ஏற்படுத்துகின்றனர் என ஒரு புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஜப்பானில் ஆண்களும் பெண்களும் கிட்டத்தட்ட1 லட்சம் பேருக்கு 2.7 விபத்துக்கள் தான் ஏற்படுத்துவதாக இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

அதே நேரம் இங்கிலாந்தில் 1 லட்சம் மக்களுக்கு 6.4 விபத்துக்கள் தான் நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான விபத்து எண்ணிக்கையில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஆண்கள் 1 லட்சம் பேருக்கு 34.9 விபத்துக்களை ஏற்படுத்துவதாகவும், பெண்கள் 1 லட்சம் பேருக்கு 9.9 விபத்துக்களை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்கா மட்டுமல்ல இந்த ஆண்-பெண்ணிடையேயான வித்தியாசம் உலகில் மற்ற சில நாடுகளிலும் இருக்கிறது. குறிப்பாகப் பிரேசில், கொலம்பியா, இந்தியா போன்ற நாடுகளிலும் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக விபத்துக்களை ஏற்படுத்துவதாக இந்த அறிக்கை கூறுகிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்தியா போன்ற நாடுகளில் பெண்களை விட ஆண்கள் தான் அதிக எண்ணிக்கையில் வாகன ஓட்டிகளாக இருக்கின்றனர். பெண்கள் குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கின்றனர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து ஜெர்மனி போன்ற நாடுகளில் விபத்துகளின் எண்ணிக்கை என்பது 1 லட்சம் மக்களுக்கு 7.6 தான் இருக்கிறது. இந்த நாடுகள் எல்லாம் அடுத்தடுத்த நாடுகளாக இருப்பதால் பெரும்பாலும் இங்கு ஒரே மாதிரியான டிரைவிங் பழக்க வழக்கங்கள் தான் உள்ளன.
இந்த கம்பேர் மார்க்கெட் ஆஸ்திரேலியா ஆய்வு குறித்து அந்நிறுவனத்தின் பொது மேலாளர் கூறும் போது :"ஓட்டுநர் திறன் என்பது பாலினத்தின்படி பிரிப்பதில் பிரச்சனை இருக்கிறது. பால் இனத்தின் படி இதைப் பிரிக்க முடியாது. இது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் திறன் மற்றும் அவரது அனுபவத்தின் வாயிலாகக் கிடைக்கக் கூடியது. இதனால் இது ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வேறுபடும்"எனக் கூறினார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கம்பர் மார்க்கெட் ஆஸ்திரேலியா என்ற அமைப்பு வெளியிட்ட இந்த ஆய்வறிக்கை இந்திய மக்களுக்கும் இந்திய அரசுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக ஒலித்துள்ளது. இந்தியாவில் ஓட்டுநர்களின் திறனை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் நிச்சயம் இருக்கிறது. இதன்மூலம் தான் சாலை விபத்துகளை பெரும் அளவு குறைக்க முடியும். இதற்காக இந்திய அரசு கொள்கை ரீதியாக சில முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.


Click it and Unblock the Notifications









