அணுகுண்டுகளுக்கும் அஞ்சாத ஸெல்ஜாவா பாதாள விமானப் படை தளம்!
உலகின் மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட ராணுவ கட்டமைப்புகளில் ஒன்றுதான் ஸெல்ஜாவா விமான படை தளம். பிற விமானப்படை தளங்களை போன்று திறந்த வெளியில் இல்லாமல், முழுவதும் மலையை குடைந்து, பாதாள விமானப் படை தளமாக இது உருவாக்கப்பட்டது.
தற்போது உருக்குலைந்து கிடக்கும் இந்த விமானப் படை தளத்தின் சிறப்புகள் நவீன கால ராணுவ கட்டமைப்புகளை தாண்டி வியக்க வைப்பதாக அமைந்து இருக்கிறது. இந்த விமானப் படை தளம் பற்றிய சிறப்புத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இரண்டாம் உலகப்போர்
இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் ஜெர்மானிய படைகளால் தாக்குதல்களால் நிலைகுலைந்து போன நாடுகளில் ஒன்று யுகோஸ்லேவியா. இந்தநிலையில், இரண்டாம் உலகப்போர் முடிந்து ஹிட்லர் மறைந்த செய்தி கிடைத்தவுடன், யுகோஸ்லேவியாவில் புதிய அரசு உருவானது.

முதல் வேலை
யுகோஸ்லேவியா நாட்டில் அமைந்த புதிய அரசு செய்த முதல் வேலை என்ன தெரியுமா? அயல் நாடுகளின் தாக்குதல்களிலிருந்து நாட்டை காப்பாற்றிக் கொள்வதற்காக ராணுவ பலத்தை பெருக்க பிரம்மாண்ட திட்டம் வகுக்கப்பட்டது.

சுரங்க விமானப் படை தளம்
இந்த திட்டத்தின்படி, வகுக்கப்பட்ட வியூகங்களில் ஒன்றுதான் சுரங்க விமானப் படை தளம். அதாவது, மலையை குடைந்து பிரம்மாண்டமான விமானப் படை தளத்தை அமைக்க யுகோஸ்லேவியா அரசு முடிவு செய்தது.

இடம்
போஸ்னியா அருகே பிஹாக் நகருக்கு அருகில் இருந்த ஜெஸிவிகா மலையின் அடிப்பகுதியில் சுரங்கப் பாதை அமைத்து இந்த புதிய விமானப் படை தளம் அமைக்கப்பட்டது.

பணிகள்
"Objekat 505" என்ற குறியீட்டுப் பெயரில் இந்த சுரங்க விமானப் படை தளம் அமைக்கப்பட்டது. 1948ம் ஆண்டு துவங்கிய பணிகள் 1968ல் முடிவடைந்தது. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் எடுத்துக் கொண்டு இந்த விமானப் படை தளம் அமைக்கப்பட்டது.

பெரும் திட்டம்
இந்த விமானப் படை தளம் 6 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. ஐரோப்பாவின் மிக அதிக திட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்பட் ராணுவ கட்டமைப்பு என்பதுடன், உலகிலேயே அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட விமானப் படை தளங்களில் ஒன்றாகவும் கருதப்பட்டது.

ஒருங்கிணைந்த வசதி
எதிரிகளின் தாக்குதல் தகவல்கள், ராணுவ தகவல்களை ஒருங்கிணைக்கும் மையமாக செயல்படும் விதத்தில் இந்த விமானப் படை தளம் அமைக்கப்பட்டது. முன்கூட்டியே எச்சரிக்கும் ரேடார் கட்டமைப்புடன் அமைக்கப்பட்டது.

நீளம்
இந்த சுரங்கப்பாதைகள் 3.5 கிமீ நீளம் கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தது. உட்புறத்தில் பதுங்கு குழிகளும் இருந்தன. இந்த கதவுகள் நிலையான இறக்கை அமைப்புடைய போர் விமானங்களுக்கு தகுந்தவாறு மாற்றங்களை செய்து திறக்க முடியும்.

அணுகுண்டுக்கும் ஜுஜுபி
ஜப்பானிலுள்ள நாகாசாகி நகரின் மீது வீசப்பட்ட அணுகுண்டுக்கு இணையான அணுகுண்டு தாக்குதல்களில் கூட இந்த விமானப்படை தளம் சேதமடையாத வண்ணம் பாதுகாப்பு அம்சங்களை கொண்டது. அதாவது, 20 கிலோடன் அணுகுண்டு தாக்குதல்களையும் சமாளிக்கும் திறன் கொண்டது.

கட்டமைப்பு
அணுகுண்டு தாக்குதல்களால் பாதிப்பு ஏற்படாத வகையில், விசேஷ வாயிற்கதவுகளை கொண்டது. உட்புறத்தில் ஒவ்வொரு விமானத்திற்கும் தனித்தனியாக நிறுத்துவதற்கான அறைகளுடன் கட்டமைக்கப்பட்டிருந்தது. விமானத்தை பழுது நீக்குவதற்கான கட்டமைப்பு வசதிகளுடன் சுரங்கத்திற்குள்ளேயே இருந்தன.

கான்கிரீட் பூச்சு
இந்த சுரங்கப்பாதை முழுவதும் மேற்புறம் மற்றும் பக்கவாட்டில் கான்கிரீட் பூச்சு மூலமாக சேதமடையாத வகையில், பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

உணவு, குடிநீர்
விமானப் படை வீரர்கள், பணியாளர்கள் என 1,000 பேருக்கு தங்குவதற்கான குடியிருப்புகள் கொண்டதாக இருந்தது. 30 நாட்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றை உட்புறத்திலேயே இருப்பு வைக்க முடியும். மின் உற்பத்திக்காக 2 மின்சார ஜெனரேட்டர்கள் இருந்தன.

எரிபொருள் சப்ளை
விமானங்கள் மற்றும் அந்த தளத்தின் ராணுவ வாகனங்களுக்கு தேவையான எரிபொருள் குழாய் வழியாக போகோஜ் மலையிலிருந்து இந்த சுரங்க விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஓடுபாதைகள்
இந்த விமானப்படை தளத்தில் 5 ஓடுபாதைகள் கொண்டதாக அமைக்கப்பட்டு இருந்தது. சுரங்கத்தின் ஒரு முனையிலிருந்து மற்றொரு வாயில் வழியாக வெளியேறும் விதத்தில் கட்டமைப்பு வசதிகளை கொண்டது. எதிரிகளின் ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் வருவதை கண்டறிந்து பதிலடி கொடுப்பதற்காக ஏவுகணைகளும் பொருத்தப்பட்டு இருந்தன. வாயிற் பகுதிகளில் அதிக கண்காணிப்பு கொண்டதாக இருந்தது.

சுடுவதற்கு அனுமதி
அத்துமீறி உள்ளே புக முனைபவர்களை எந்த அனுமதியும் இன்றி சுட்டுத் தள்ளுவதற்கு பாதுகாவலர்களுக்கு அனுமதி தரப்பட்டிருந்தது. உள்ளே செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகளும், அனுமதி வழிமுறைகளும் கடைபிடிக்கப்பட்டன.

வீழ்ந்த கட்டமைப்பு
உள்நாட்டு போர்களால் யுகோஸ்லேவியா கடுமையாக பாதிக்கப்பட்டது. போஸ்னியா, குரோஷியா உள்ளிட்ட பல நாடுகள் சுதந்திரமாக செயல்பட வேண்டி கலகங்கள் மூண்டது. இதனால், யுகோஸ்லேவியா சிதறுண்டது. அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசும் வீழ்ந்ததோடு, இந்த விமானப்படை தளமும், உள்நாட்டு போரின்போது கடுமையாக சேதமடைந்தது.

தற்போது...
தற்போது இந்த விமானப்படை தளம் கைவிடப்பட்டதால், தற்போது மிக மோசமான நிலையில், இருக்கிறது. தற்போது அங்கு சில வரலாற்று ஆய்வாளர்கள் சென்று அந்த சுரங்கத்தை பார்வையிட்டு அதன் கட்டுமான ஆச்சரியத்தையும், தற்போதைய நிலை குறித்து படங்களை எடுத்து வெளியிட்டு இருக்கின்றனர்.

முயற்சி
பிஹாக் நகராட்சி தற்போது இந்த விமானப்படை தளத்தின் ஓடுபாதைகளை பயன்படுத்தி, உள்நாட்டு விமான போக்குவரத்தை துவங்குவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.

அணுகுண்டும் ஜுஜுபி... ஐஎன்எஸ் விசாகப்பட்டணம் போர்க்கப்பல் - விஷயங்கள்!!
Source: Wikipedia


Click it and Unblock the Notifications








