இந்தியாவில் தொழில்நுட்பத்தில் தயாரான ஐஎன்எஸ் கமோர்டா போர்க்கப்பல்!
அண்டை நாடுகளாலும், தீவிரவாதிகளாலும் அச்சுறுத்தல் மிகுந்து வரும் இவ்வேளையில் மிக நீளமான கடற்கரையை கொண்ட நம் நாட்டின் பாதுகாப்பிற்கு வலுவான கடற்படையும், போர்க்கப்பல்களும் அவசியமாகியுள்ளது. இதுவரை வெளிநாடுகளில் இருந்து போர்க்கப்பல்களை வாங்கி வந்த இந்தியா தற்போது போர்க்கப்பலை சொந்தமாக தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில், முதல்முறையாக இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் கமோர்டா போர்க்கப்பலை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி இருதினங்களுக்கு முன் விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த போர்க்கப்பலின் சிறப்புத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

இந்திய தொழில்நுட்பம்
இந்திய தொழில்நுட்பத்தில் போர்க்கப்பலை தயாரிப்பதற்கான வகுக்கப்பட்ட புராஜெக்ட்28 என்ற குறியிடப்பட்ட திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட முதல் போர்க்கப்பல் இது. கடந்த 2006ம் ஆண்டு இந்த போர்க்கப்பலை கட்டும் பணிகள் துவங்கின. கடந்த 2010ம் ஆண்டு பணிகள் நிறைவுபெற்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த போர்க்கப்பலின் கடல் சோதனைகள் துவங்கின. கடந்த ஜூலை மாதம் 12ந் தேதி கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

தனியார் கட்டுமான நிறுவனம்
நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டறிந்து தாக்கி அழிப்பதற்காக இந்திய கடற்படை வடிவமைப்பு இயக்குனரகம் வடிவமைத்திருக்கும் 4 போர்க்கப்பல்களில் முதலாவது கப்பல் ஐஎன்எஸ் கமோர்டா. கோல்கட்டாவை சேர்ந்த கார்டன் ரீச் என்ற தனியார் கப்பல் கட்டும் நிறுவனம் இந்த கப்பலை கட்டிக் கொடுத்துள்ளது.

அந்தமான் தீவு பெயர்
அந்தமான் தீவுகளில் ஒன்றின் பெயரைத்தான் இந்த போர்க்கப்பலுக்கு சூட்டியுள்ளனர். இந்திய கப்பற்படையின் கிழக்குப் பிராந்திய பாதுகாப்புப் பணியில் பயன்படுத்தப்பட உள்ளது.

கட்டுமானச் செலவு
இந்த போர்க்கப்பல் ரூ.3,051 கோடி மதிப்பில் தயாரிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகள் கட்டுமானப் பணிகள் தாமதமடைந்ததால் ரூ.7,800 கோடி மதிப்பில் இந்த போர்க்கப்பல் கட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடிவம்
110 மீட்டர் நீளம் கொண்ட இந்த புதிய போர்க்கப்பல் 3,500 டன் எடை கொண்டது. இதில், கிர்லோஸ்கர் நிறுவனம் தயாரித்து கொடுத்த 5,095 எச்பி பவரை அளிக்கம் 4 டீசல் எஞ்சின்கள் மூலம் இயங்கும். அதிகபட்சமாக மணிக்கு 25 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லும்.

பயன்பாடு
நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்த போர்க்கப்பல் வான் இலக்குகளையும் தாக்கும் வசதிகொண்டது. இந்த போர்க்கப்பல் ஹெலிகாப்டர்களையும் தாங்கி செல்லும் வசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிரிகளின் ரேடார் கண்களில் சிக்காத வகையில் இதன் பீம்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பணியாளர்கள்
இந்த புதிய போர்க்கப்பலில் மனோஜ் ஜா தலைமையிலா 12 கடற்படை அதிகாரிகள், 173 கடற்படை வீரர்கள் பணியாற்றுகின்றனர். இந்த புதிய போர்க்கப்பலின் மூலம் இந்திய கடற்படையின் பலம் மேலும் அதிகரித்துள்ளது.

வர்த்தக முக்கியத்துவம்
இதுவரை வெளிநாடுகளில் இருந்து போர்க்கப்பல்களை வாங்கி வந்த இந்தியா இனி வெளிநாடுகளுக்கு போர்க்கப்பலை விற்பனை செய்யும் நிலையை எட்டியுள்ளதாக இந்த போர்க்கப்பலை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். மேலும், பல புதிய போர்க்கப்பல்களை கடற்படையில் சேர்க்க இருப்தாகவும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








