இந்திய பாலங்களின் ராணி... பாம்பன் ரயில் பாலம் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!
தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் விஷயங்களில் ஒன்று பாம்பன் ரயில் பாலம். ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட அந்த ரயில் பாலம் நூற்றாண்டை கடந்தும் கம்பீரமாக சேவையாற்றி வருகிறது.
பாக் ஜலசந்தி கடல் பகுதியையும், மன்னார் வளைகுடா கடல் பகுதியையும் இணைக்கும் நீரிணையில் இந்த பாலம் அமைந்துள்ளது. சென்ற நூற்றாண்டின் பொறியியல் அற்புதங்களில் ஒன்றாக கருதப்படும் பாம்பன் ரயில் பாலம் குறித்த சில சிறப்புத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

இணைப்பு வசதி
இலங்கைக்கான வர்த்தக தொடர்புகளை எளிதாக்கும் விதத்தில் ராமநாதபுரம் மாவடத்திலுள்ள மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் விதத்தில் பாம்பன் ரயில் பாலத்தை ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. அப்போது, இந்தியாவும், இலங்கையும் ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தின் கீழ் இருந்தன.

முதல் சிறப்பு
இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமை ராமேஸ்வரம் பாம்பன் பாலத்திற்கு உண்டு. சுமார் 2.3 கிமீ நீளம் கொண்ட இந்த ரயில் பாலம்தான் இந்தியாவின் மிக நீளமான கடலில் அமைக்கப்பட்டிருக்கும் ரயில் பாலம். இந்திய பாலங்களின் ராணி என்றும் இதனை வர்ணிக்கின்றனர்.

மற்றொரு பாலம்
ராமேஸ்வரம் தீவுக்கு ரயில் மற்றும் படகு மூலமாக இணைப்பு வசதிகள் இருந்தபோதும், சாலை மார்க்கமாக நேரடி வாகன போக்குவரத்து வசதி இல்லை. இதனை கருதி, 1988ம் ஆண்டு இதன் அருகிலேயே பிரம்மாண்ட பாலம் அமைக்கப்பட்டு திறப்பு விழா கண்டது. இந்திரா காந்தி பாலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

பணிகள்
பாம்பன் ரயில் பாலத்தை அமைப்பதற்கான பணிகள் 1902ம் ஆண்டு துவங்கியது. 1911ம் ஆண்டில் கட்டுமானப் பணிகள் தீவிரமானதுடன், விரைவாக இந்த ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. மிகச் சிறப்பான திட்டமிடல் காரணமாக, குறுகிய காலத்தில் இந்த பொறியியல் அற்புதத்தை உருவாக்கினர்.
Picture credit: myrameswaram

தூக்குப் பாலம்
பாம்பன் ரயில் பாலத்தின் முக்கிய சிறப்பு, கப்பல்கள் செல்வதற்கு வசதியாக நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் தூக்கு பாலம். இரண்டு பிரிவாக தூக்கும் இந்த பாலத்தின் ஒவ்வொரு பக்க இரும்பு பாலமும், 100 டன் எடை கொண்டது. இந்த தூக்கு பாலத்தை தூக்கி, இறக்கும் பணிகளுக்கான சிறப்பு பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
Picture credit: myrameswaram

சவால்கள்
உலகிலேயே அமெரிக்காவின் மியாமி கடற்கரைக்கு அடுத்ததாக அதிக துருப்பிடிக்கும் பகுதியான ராமேஸ்வரம் கடல் பகுதியில், இரும்புத் தூண்கள் மற்றும் கர்டர்களை பயன்படுத்தி இந்த பாலம் அமைக்கப்பட்டது. அடிக்கடி கடல் சீற்றங்கள், கொந்தளிப்பும் பாலம் கட்டும்போது சவால் தந்த விஷயங்களாக இருந்தன.

பொறியாளர்
நூற்றாண்டை கடந்தும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சேவையாற்றி வரும் பாம்பன் ரயில் பாலத்தை ஆங்கிலேயரிடம் பணிபுரிந்த ஜெர்மனி நாட்டு பொறியாளர் ஷெர்சர் என்பவர்தான் தலைமை பொறியாளராக செயல்பட்டார். அவரது நினைவாக, தூக்கு பாலத்தை ஷெர்ஷர் ஸ்பேன் என்று அழைக்கின்றனர்.
Picture credit: Tamil1510/Wiki Commons

தொழிலாளர்கள்
ராமேஸ்வரம் பாலத்தின் கட்டுமானப் பணிகளில் குஜராத் மாநிலம், கட்ச் பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். இமயமலை பகுதிகள் உள்பட மிக முக்கிய ரயில் பாலங்கள் அமைப்பதில், இந்த தொழிலாளர்கள் நல்ல அனுபவம் கொண்டிருந்ததாலேயே அவர்களை ஆங்கிலேய அரசு பயன்படுத்தியது.
Picture credit: Armstrongvimal/Wiki Commons

கட்டுமானப் பொருட்கள்
பாலம் கட்டுவதற்கு தேவையானப் 18,000 டன் ஜல்லி கற்கள் 270 கிமீ தொலைவிலிருந்தும், மணல் 110 கிமீ தொலைவிலிருந்தும் எடுத்து வரப்பட்டது. இந்த பாலத்திற்கு 5,000 டன் சிமென்ட் மற்றும் 18,000 டன் இரும்பு கம்பிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
Picture credit: Saranyachandran/Wiki Commons

திட்ட மதிப்பீடு
இந்தியாவையும், இலங்கையையும் வர்த்தக ரீதியில் இணைத்து தங்களுக்கு ஆதாயம் தேடவே ஆங்கிலேயர்கள் இந்த பாலத்தை கட்ட விரும்பினர். மண்டபத்திலிருந்து, ராமேஸ்வரம் தீவிற்கும், பின்னர் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கும் இடையிலான பாலத்திற்கு ரூ.299 லட்சம் அந்த காலத்தில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.
Picture credit: Armstrongvimal/Wiki Commons

நிராகரிக்கப்பட்ட திட்டம்
திட்ட செலவு மிக அதிகம் என்று கூறி, அந்த திட்டத்தை இங்கிலாந்து பாராளுமன்றம் நிராகரித்தது. அதேநேரத்தில், மண்டபம்- ராமேஸ்வரம் தீவு இடையிலான திட்டத்திற்கு ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்ற அனுமதியளித்தது. அதன்பின்னர், கட்டுமானப் பணிகள் துவங்கின.

ரயில்சேவை
ஆரம்பத்தில் சென்னையிலிருந்து தனுஷ்கோடி வரை ரயில் பாதை இருந்தது. அதுவரை ரயிலில் சென்று, அங்கிருந்து இலங்கையிலுள்ள தலைமன்னாருக்கு கப்பலில் பயணிகள் செல்வர். இதற்கு ஒரே டிக்கெட் பெற்றால் போதுமானது. ஆனால், 1964ம் ஆண்டு தாக்கிய பெரும் புயலால், தனுஷ்கோடி அடியோடு அழிந்தது. பாம்பன் ரயில் பாலத்திலும் சேதம் ஏற்பட்டது. 6 மாத காலத்தில் அந்த பாதிப்புகள் சரி செய்யப்பட்டு, ராமேஸ்வரம் மட்டும் ரயில் இயக்கப்பட்டதுடன், இலங்கைக்கான கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

அகலப்பாதை
மீட்டர்கேஜ் எனப்படும் குறுகிய ரயில் பாதையாக இருந்த பாம்பன் ரயில் பாலம், 2007ம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. அப்போது, பாலத்தின் உறுதித்தன்மையும் கூட்டப்பட்டது. தற்போது சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு நேரடி ரயில் போக்குவரத்து உள்ளது.
Picture credit: Youtube

கப்பல் போக்குவரத்து
மாதத்திற்கு 10 கப்பல்கள் வரை இந்த பாலத்தை கடந்து செல்கின்றன. ஆனால், வாரம் ஒருமுறை மட்டுமே, தூக்குப் பாலம் திறக்கப்படும். அந்த நேரத்தில் மட்டும் கப்பல் போக்குவரத்து நடக்கிறது.
Picture credit: hotelislandstargroups

நூற்றாண்டு கொண்டாட்டம்
கடந்த 2014ம் ஆண்டு பாம்பன் ரயில் பாலம் தனது நூற்றாண்டு விழாவை கொண்டாடியது. இதற்காக, ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது.
Picture credit: Praveenmoses61/Wiki Commons


Click it and Unblock the Notifications








