பகானி ஹூவைரா சூப்பர் கார் பற்றிய விந்தையான தகவல்கள்!
ஃபெராரி, லம்போர்கினி போன்ற பிரபல சூப்பர் கார் நிறுவனங்கள் போன்றே, இத்தாலியை சேர்ந்த பகானி நிறுவனமும் உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது. அதேநேரத்தில், ஃபெராரி, லம்போவைவிட பகானி கார்கள் கூடுதல் தனித்துவம் கொண்டதாக இருக்கிறது.
டிசைன், சிறப்பம்சங்கள், தொழில்நுட்பம் என பல வகைகளில் இந்த பகானி ஹூவைரா கார் வேறுபடுகிறது. இந்தநிலையில், இந்த காரில் இருக்கும் சில ஆச்சரியப்படத்தக்க விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

அறிமுகம்
பகானி ஸோண்டா காருக்கு மாற்றாக, கடந்த 2011ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 2012லிருந்து பகானி ஹூவைரா விற்பனைக்கு அறிமுகம் கொண்டு வரப்பட்டது. 2012ம் ஆண்டிற்கான சிறந்த ஹைப்பர் கார் என்ற விருதை டாப் கியர் இதழ் வழங்கி கவுரவித்தது.

அதிவேக கார்
டாப் கியர் இதழின் டெஸ்ட் டிராக்கை அதிவேகத்தில் கடந்த தயாரிப்பு நிலை கார் மாடல் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது பகானி ஹூவைரா. 2011ல் டாப் கியர் டெஸ்ட் டிராக்கை ஏரியல் ஆட்டம் வி8 கார் 1:15.1 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்திருந்த நிலையில், பகானி ஹூவைரா கார் 1:13.8 நிமிடத்தில் டெஸ்ட் டிராக்கை கடந்து சாதனை படைத்தது.

லிமிடேட் எடிசன்
மொத்தமாக 100 பகானி ஹூவைரா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான செய்திகளின்படி, அனைத்து கார்களுக்கும் முன்பதிவு செய்யப்பட்டு, விற்பனை முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

விசேஷமான பாடி
டைட்டானியம், கார்பன் ஃபைபர், உயர்தர அலுமினிய பாடி பேனல்களை கொண்ட இந்த கார் பட்டனை தட்டினால், பாடி பேனல்களை தூக்கி விட்டு, சாவகாசமாக காற்று வாங்கும் படங்களை இன்டர்நெட்டில் அதிகம் பார்த்திருப்பீர்கள். இந்த காரின் விசேஷ அமைப்புகளில் ஒன்றுதான் பாடி பேனல்களை தனித்தனியாக மேலே விரித்துக் கொள்ளும் அமைப்பு.

மயக்கும் ஹூவைரா
பகானி ஹூவைரா வைத்திருக்கும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இரண்டு பகானி ஹூவைரா கார்களை ஆர்டர் செய்து வாங்குகின்றனராம். 1.4 மில்லியன் டாலர் முதல் 2 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட இந்த ஹைப்பர் காரில் ஒன்று வாங்கினாலே பெரிய விஷயம் இல்லையா?

காரணம்
இரண்டு கார்களை வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்ததற்கு, இந்த காரின் வேரியண்ட்டுகளை பார்க்கும்போது சிலருக்கு இரண்டு வேரியண்ட்டுகளின் சிறப்பம்சங்களும், தொழில்நுட்ப விஷயங்களும் பிடித்துப் போய் முன்பதிவு செய்துவிடுவதாக பகானி தெரிவித்துள்ளது.

சிறப்பம்சங்கள்
கார்பனடேனியம் மோனோகாக் சேஸீ, இலை வடிவிலான சைடு மிரர்கள், லெதர் இருக்கைகள், அசத்தலான இன்டீரியர் அமைப்பு, சக்திவாய்ந்த எஞ்சின் என பட்டியல் நீள்கிறது. இதெல்லாம் ஹைப்பர் காரில் இருக்கிற விஷயம்தானே என்கிறீர்களா? சரி, இந்த காரின் போல்ட் விலை என்ன தெரியுமா?

காஸ்ட்லி போல்ட்டுகள்
இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு போல்ட்- நட்டின் விலை 80 டாலர்களாம். காரில் இருக்கும் போல்ட்டுகளின் மதிப்பு மட்டும் 1.12 லட்சம் டாலர்களாம். மொத்தம் 1,400 போல்ட்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

போல்ட்டுகளின் விசேஷம்
இந்த போல்ட்டுகளின் மற்றொரு விசேஷம், அதிவேகத்தில் கார் வளைவுகளில் திரும்பும்போது சிறப்பான உறுதித்தன்மையை அளிப்பதோடு, விபத்தில் சிக்கி மோதும்போது, இரண்டு பாகங்களாக கார் தனித்தனியாக பிரிந்துவிடும் விசேஷ தொழில்நுட்பம் கொண்டது.

எஞ்சின்
பகானி ஹூவைரா காரில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி நிறுவனத்தின் இரட்டை டர்போசார்ஜர் கொண்ட 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. அதிகபட்சமாக 720 பிஎச்பி பவரையும், 1,100 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

செயல்திறன்
0- 100 கிமீ வேகத்தை வெறும் 3.0 நொடிகளில் தொட்டுவிடும் இந்த கார், அதிகபட்சமாக மணிக்கு 370 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டது.

பெட்ரோல் டேங்க்
இந்த காரில் இருக்கும் பெட்ரோல் டேங்க்கும் விசேஷமானது. ஆம், இந்த பெட்ரோல் டேங்க் குண்டு துளைக்காத விசேஷ அம்சம் கொண்டது. எனவே, கோடீஸ்வரர்கள் பயமில்லாமல் வெளியில் எடுத்துச் செல்ல முடியும்.

பாகங்கள்
இந்த காரின் பெரும்பாலான பாகங்கள் மிகவும் விசேஷமாக வடிவமைக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, பாடி பேனல் ஒன்று சேதமடைந்துவிட்டால், அதேபோன்றதொரு பாடி பேனலை பகானி நிறுவனத்திடம் ஆர்டர் செய்ய வேண்டும். அந்த பாகத்தை மட்டும் தனியாக தயாரித்து அனுப்புகிறது பகானி. எனவே, காரை ஓட்டும்போது கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியிருக்கிறதாம்.

தொல்லைகள்
பகானி ஹூவைரா உரிமையாளர் ஒருவர் கூறுகையில், சாலையில் காரை படம் பிடிக்கிறேன் என்று சொல்லி, சமயத்தில் காரை இடித்து விடுகின்றனர். இந்த அச்சத்திலேயே பல முறை வேகமாக செல்ல வேண்டியிருக்கிறது.

எஞ்சின் சர்வீஸ்
சில ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் கார் மாடல்களை சர்வீஸ் செய்யும்போது, எஞ்சினை தனியாக கழற்றி சர்வீஸ் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், இந்த காரில் எஞ்சினை கழற்றாமலே சர்வீஸ் செய்ய முடியுமாம்.

நீண்ட கால பணிகள்
கடந்த 2003ம் ஆண்டு பகானி ஹூவைரா காரின் வடிவமைப்புப் பணிகள் துவங்கின. 2011ம் ஆண்டில்தான் இந்த கார் இறுதிக்கட்டத்தை எட்டியது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் எடுத்துக் கொண்டு இந்த காரை வடிவமைத்துள்ளனர். ஏன் இத்தனை ஆண்டுகாலம் என்று கேட்டால், சிம்பிள் பதில் கொடுக்கப்படுகிறது.

நுணுக்கமான வடிவமைப்பு
இந்த காரின் 'ஏரோ ப்ளாப்' எனப்படும் காரின் பேனல்கள், கதவுகள் தனித்தனியாக தூக்கிக் கொள்ளும் அமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிக்குத்தான் அதிக காலம் பிடித்ததாம். அதாவது, அதிவேகமான இந்த காரின் ஏரோடைனமிக்ஸும் பாதிக்கக்கூடாது, இதேபோன்று பாடி பேனல்கள் தனித்தனியாக விரியும் வசதியும் வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக உருவாக்கியுள்ளனர்.

வாடிக்கையாளர் வட்டம்
ஒவ்வொரு கார் நிறுவனமும், வாடிக்கையாளர்களின் வயது, பட்ஜெட் போன்ற விஷயங்களை மனதில் வைத்து, ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் சமூகத்திற்காக உருவாக்கப்பட்ட மாடல் என்று கூறுகின்றனர். ஆனால், இன்று வரை பகானி கார்களின் வாடிக்கையாளர் வட்டத்தை அனுமானிக்க முடியவில்லையாம். அந்தளவு கலவையான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறதாம்.

தனிநபர் விமானத்துக்கு இணையான பராமரிப்பு செலவு கொண்ட புகாட்டி வேரான்- சுவாரஸ்யத் தகவல்கள்!


Click it and Unblock the Notifications








