இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கார் பற்றிய ரகசியங்கள்
அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வர இருக்கிறார். இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

கார் அணிவகுப்பு
வரும் 24ந் தேதி ஆமதாபாத்த் நகரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அதிபர் டிரம்ப் பங்கேற்கிறார். மேலும், விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரம் மற்றும் புதிய ஸ்டேடியம் திறப்பு விழாவிலும் பங்கேற்க இருக்கிறார். மேலும், 22 கிமீ தூரத்திற்கு சாலை மார்க்கமாக காரில் பயணிக்க இருக்கிறார்.

பலத்த பாதுகாப்பு
இந்தநிலையில், அதிபர் டிரம்ப் இந்திய வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், அதிபர் டிரம்ப்பின் பாதுகாப்பு அதிகாரிகள், அவர் பயன்படுத்தும் கார்கள், அவருக்கான உடைமைகள், அணி வகுப்பு கார்கள், பாதுகாப்பு அதிகாரிகளுக்கான ஆயுதஙகள், வெடிமருந்துகள் ஆகிய அனைத்தையும் இந்தியா கொண்டு வருவதற்கு 7 விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

விமானங்கள் படையெடுப்பு
இதில், அதிபர் டிரம்பின் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவும், அவரது பாதுகாப்புக்கான விசேஷ ஃபோர்டு எஸ்யூவி கார் தனி விமானம் மூலமாக நேற்று ஆமதாபாத் நகருக்கு வந்தடைந்தது. மேலும், மூன்று விமானங்கள் விரைவில் ஆமதாபாத் நகருக்கு வர இருக்கின்றன. தவிரவும், டிரம்ப் பயணிக்கும் ஏர் ஃபோர்ஸ் ஒன் என்ற அதி பாதுகாப்பு வசதிகள் கொண்ட விமானத்துடன் மேலும் 3 விமானங்கள் வர இருக்கின்றன.

காருக்கு தனி விமானம்
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் பயன்படுத்தப்பட இருக்கும் அதிகாரப்பூர்வ கார் தனி விமானம் மூலமாக இந்தியா வர இருக்கிறது. ஆமதாபாத் சாலைகளில் டிரம்ப் மற்றும் மோடி பயணிக்க இருக்கும் சாலைகளில் வைத்து சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அமெரிக்க அதிபரின் கார்தான் இப்போது மீடியாக்களின் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கின்றன.

தி பீஸ்ட் 2.0
அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ கார் தி பீஸ்ட் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா வந்தபோதும், தி பீஸ்ட் கார்தான பயன்படுத்தப்பட்டது. ஆனால், அந்த கார்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுவிட்டன.

பிரம்மாண்ட விமானம்
அதற்கு பதிலாக தி பீஸ்ட் 2.0 என்ற பெயரில் குறிப்பிடப்படும் புதிய கார்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இந்த கார்கள்தான் தற்போது அதிபர் டிரம்ப் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த கார்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த கார்கள் C-17 குளோப்மாஸ்டர் சரக்கு விமானம் மூலமாக அமெரிக்க அதிபர் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போது கொண்டு செல்லப்படுகின்றன.

ரகசியங்கள் நிறைந்த கார்
உலகிலேயே மிக அதிக பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளை கொண்டதாக இந்த கார்கள் கருதப்படுகின்றன. அமெரிக்க அதிபருக்கான கார் மாடல்களை தனது கேடில்லாக் கார்களின் அடிப்படையில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம்தான் உருவாக்கி கொடுத்து வருகிறது.

கேடில்லாக் கார்
ஆமதாபாத் சாலைகளில் அதிபர் டிரம்ப் பயன்படுத்த இருக்கும் தி பீஸ்ட் 2.0 லிமோசின் ரக கார் கேடில்லாக் எஸ்கலா கான்செப்ட் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. பழைய பீஸ்ட் கார் மாடலைவிட இந்த காரில் அதிக தொழில்நுட்பங்களும், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

டிரக் சேஸீ
நடுத்தர வகை டிரக் சேஸீயில் வைத்து இந்த கார் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. கண்ணி வெடித்தாக்குதலிலும் தாக்குப்பிடிக்கும் வலுவான அடிப்பாகம், வலிமையான பாடி பேனல்கள், குண்டு துளைக்காத கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.

எடை
போயிங் 757 விமானம் போன்று இந்த காரில் 8 அங்குல தடிமன் கொண்ட கதவுகள், 5 அங்குல கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கார் 8 டன் எடை கொண்டதாக இருக்கிறது.

சிறப்பு தொழில்நுட்பங்கள்
இந்த காரில் இரவு நேரத்திலும் கண்காணிக்கும் கேமராக்கள், பஞ்சர் ஆனாலும் தொடர்ந்து இயக்கும் வாய்ப்பை வழங்கும் ரன் ஃப்ளாட் டயர்கள், ரசாயனத் தாக்குதல்களின்போது பயன்படுத்துவதற்கான ஆக்சிஜன் சிலிண்டர், சேட்டிலைட் போன் மற்றும் அணுகுண்டு தாக்குதல்களை நடத்துவதற்கான அனுமதியை வழங்கும் குறியீட்டு எண்கள் இடம்பெற்றுள்ளன.
காரின் பின் இருக்கையில் முன்னோக்கிய வலது பக்க இருக்கையாானது அமெரிக்க அதிபருக்காக ரிசர்வ் செய்யப்பட்டுள்ளது. வேறு யாரும் அந்த இருக்கையில் அமர முடியாது.

ஓட்டுனர் விபரம்
தீயணைப்பு கருவிகள், காற்று சுத்திகரிப்பு கருவி, முதலுதவி சிகிச்சை பெட்டி, அவசர சமயங்களில் அதிபருக்கு தேவைப்படும் ரத்தம் ஆகியவையும் வைக்கப்பட்டு இருக்கும். இந்த காரை இயக்கும் ஓட்டுனர்கள் அமெரிக்க புலனாய்வு துறையை சேர்ந்தவர்கள் என்பதுடன், விசேஷ ஓட்டுனர் பயிற்சி பெற்றவர்களாக இருக்கின்றனர்.
காரின் முன்புற க்ரில் அமைப்பிற்கு பின்னால் துப்பாக்கிகளும் பொருத்தப்பட்டுள்ளன. அவசர சமயங்களில் ஓட்டுனருக்கு அருகில் அமர்ந்திருக்கும் பாதுகாவலர் இந்த துப்பாக்கிகளை இயக்க முடியும்.

எஞ்சின் விபரம்
இந்த பிரம்மாண்டமான காரில் 5.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சினுக்கு பயன்படுத்தப்படும் டீசல் விசேஷ கலவையில் தயாரிக்கப்படுவதால், தீப்பிடித்தாலும் எளிதில் அணைத்து விட முடியும் என்று கூறப்படுகிறது. லிட்டருக்கு 3 கிமீ மைலேஜ் தருமாம்.
இதன் எரிபொருள் டேங்க் கூட எளிதில் தீப்பிடிக்காத விசேஷ கட்டமைப்பு கொண்டது.

குறியீட்டுப் பெயர்
பொதுவாக இந்த கார் தி பீஸ்ட் என்று குறிப்பிடப்பட்டாலும், இதனை பாதுகாப்பு அதிகாரிகள் 'ஸ்டேஜ்கோச்' என்று அழைக்கின்றனர். இந்த காரில் இருந்து எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பும் உள்ளது. இதற்காக, ஓட்டுனரிடம் துப்பாக்கியும் கொடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

கடவுளுக்கே வெளிச்சம்
மொத்தத்தில், இந்த காரில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அமெரிக்க புலனாய்வு துறை மற்றும் காரை உருவாக்கிய ஜெனரல் மோட்டார்ஸ் பொறியாளர்களுக்கு மட்டுமே முழுமையாக தெரியும் என்றும் கூறப்படுகிறு. அவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் நிரம்பிய காராக வர்ணிக்கப்படுகிறது.

விலை மதிப்பு
தற்போது பயன்பாட்டில் வைக்கப்பட்டு இருக்கும் தி பீஸ்ட் 2.0 என்ற இரண்டாவது வெர்ஷன் கார்கள் ஒவ்வொன்றின் மதிப்பும் ரூ.12 கோடி என தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக, இரண்டு கார்கள் பயன்பாட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. ஒன்று அவசர சமயத்திற்கான பயன்பாட்டிற்காக வைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








