இந்தியாவில் மிக நீளமான சுரங்கப்பாதை திறப்பு- சுவாரஸ்யத் தகவல்கள்!
இந்தியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை, செனானி- நாஷ்ரி சுரங்கப்பாதை குறித்த சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
காஷ்மீரில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்தியாவின் மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். சர்வதேச தரத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டு இருக்கும் இந்த சுரங்கப்பாதை குறித்த சுவாரஸ்யத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர்களாக செயல்படும் ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்கு இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 44-ல் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

செனானி மற்றும் நாஷ்ரி ஆகிய இடங்களுக்கு இடையே மலையைக் குடைந்து அமைக்கப்பட்டு இருக்கும் இந்த சுரங்கப்பாதை 10.9 கிமீ நீளம் கொண்டது. ஏற்கனவே, 41 கிமீ தூரம் சுற்றிக் கொண்டு வர வேண்டிய தூரம் இப்போது நான்கில் ஒரு பங்காக குறைந்துள்ளது.

இந்த சுரங்கப்பாதையின் மூலமாக இரண்டு மணிநேரம் பயண நேரம் குறையும். காடு, மலைகளை அழிக்காமல், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல், சுற்றுச்சூழலுக்கு மிக உகந்ததாகவும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சுரங்கப்பாதையின் மூலமாக மிக மோசமான மலைச் சாலையை கடக்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த சுரங்கப்பாதையின் மூலமாக பாதுகாப்பான பயணத்தையும் பெற முடியும்.

பனிப்பொழிவு காலங்களில் இந்த சாலையில் நிலச்சரிவு, பனிப்புயல் காரணமாக அவ்வப்போது போக்குவரத்து நிறுத்தப்படும். ஆனால், மிக மோசமான வானிலை நிலவும் பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த சுரங்கப்பாதை எந்தவொரு தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றதாக இருப்பதால், போக்குவரத்து தடைபடாது.

டிரான்ஸ்வெர்ஸ் வென்டிலேஷன் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, வாகனப் புகையிலிருந்து வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்பட்டு, பயணிப்போர் சுவாசிக்க போதுமான ஆக்சிஜன் கிடைப்பதற்கான மிக நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த வசதி கொண்ட உலகின் 6-வது சுரங்கப்பாதை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சுரங்கப்பாதையின் முக்கிய வழித்தடம் 13 மீட்டர் விட்டமுடையது. இந்த வழித்தடத்தில் இரு திசைகளிலும் போக்குவரத்து நடக்கிறது. விபத்து, தீவிபத்து போன்ற அவசர சமயங்களில் இந்த சுரங்கப்பாதையிலிருந்து பத்திரமாக வெளியேறுவதற்கு வசதியாக 6 மீட்டர் விட்டமுடைய மற்றொரு சுரங்க வழித்தடமும் இணையாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

பழுதான வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதியும் உண்டு. இந்த சுரங்கப்பாதையில் பயணிப்போர் தடையில்லாமல் மொபைல்போன்களை பயன்படுத்த முடியும். இந்த சுரங்கப்பாதையில் மிகச் சிறப்பான சிக்னல் வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த சுரங்கப்பாதை முழுவதும் சிசிடிவி மூலமாக கண்காணிக்கப்படுகிறது. உள்ளே எந்த பிரச்னை என்றாலும் இருந்த இடத்திலிருந்தே கண்டுபிடித்து சரி செய்ய முடியும். இதற்காக விசேஷ கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சுரங்கப்பாதையின் மூலமாக போக்குவரத்து தங்கு தடை இல்லாமல் நடக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. அத்துடன் சுற்றுலாத் துறையும் வெகுவாக மேம்படும் என்று கருதப்படுகிறது. இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதன் மூலமாக நாள் ஒன்றுக்கு ரூ.27 லட்சம் மதிப்புடைய எரிபொருள் செலவு மிச்சப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.100 கோடி மதிப்புக்கு எரிபொருள் சேமிப்பு கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது.

உலகத் தரத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்துவதற்கு இலகு ரக வாகனங்களுக்கு ரூ.55, நடுத்தர வாகனங்களுக்கு ரூ.90, கனரக வாகனங்களுக்கு ரூ.190 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சுரங்கப்பாதை ஏழு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது. கட்டுமான பொறியாளர்கள், தொழிலாளர்கள், புவியியல் வல்லுனர்கள் என பல்வேறு தரப்பினர் ஒன்றிணைந்து இந்த சுரங்கப்பாதையை கட்டி முடித்துள்ளனர். இந்தியாவின் பொறியியல் அற்புதங்களில் ஒன்றாகவும் குறிப்பிடப்படுகிறது.


Click it and Unblock the Notifications








