உத்தர பிரதேசத்தில் தான் எல்லாம் நடக்குது!! குவியும் வெளிநாட்டவர்கள் - பரபரப்புக்கு கொஞ்சம் கூட குறை இருக்காது!
உத்தர பிரதேசத்தில் விரைவில் மோட்டோ ஜிபி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே செப்.21ஆம் தேதி முதல் சர்வதேச வர்த்தக கண்காட்சி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது. டெல்லிக்கு அருகே நொய்டாவில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சி தொடர்பான கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
தலைநகர் டெல்லிக்கு அருகே அமைந்திருப்பதாலே உத்தர பிரதேசத்தின் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா மாநகரங்கள் இந்தியாவில் வேகமாக வளர்ச்சிக் கண்டுவரும் நகரங்களாக விளங்குகின்றன. குறிப்பாக, கிரேட்டர் நொய்டா மிக முக்கியமான வாரத்தை எட்டியுள்ளது. மோட்டோஜிபி மற்றும் சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் அடுத்த 1 வாரத்திற்குள் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ளன.

இதனால், அடுத்த 1 வாரத்திற்கு மொத்த கிரேட்டர் நொய்டாவும் வழக்கத்தை காட்டிலும் பரபரப்பாக இருக்கும். ஏற்கனவே சாலைகளில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை அங்கு அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், சில சாலைகளை மூடி, போக்குவரத்தை திசை திருப்பும் பணிகளில் ஏற்கனவே கிரேட்டர் நொய்டா போலீஸார் ஈடுப்பட ஆரம்பித்துவிட்டனர்.
செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு கிரேட்டர் நொய்டாவில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் மோட்டோஜிபி பந்தயம் முதல்முறையாக நடைபெறவுள்ளதால், மோட்டோஜிபிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கிரேட்டர் நொய்டாவுக்கு வெளியே அமைந்திருக்கும் புத் சர்வதேச பந்தய களத்தில் வருகிற செப்டம்பர் 22இல் துவங்கி 24ஆம் தேதி வரையில் 3 நாட்களுக்கு மோட்டோஜிபி நடைபெறவுள்ளது.

இதற்கு முன்னதாக, நாளை (செப்.21) முதல் சர்வதேச வர்த்தக கண்காட்சி கிரேட்டர் நொய்டாவில் துவங்கவுள்ளது. இந்தியா மட்டுமின்றி, உலக வர்த்தகர்கள் பலர் கலந்துக் கொள்ள இந்த கண்காட்சி கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்திய எக்ஸ்போ மையம் மற்றும் மார்ட்டில் செப்டம்பர் 25ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையில் பிஸ்னஸ் நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த நேரங்களில் வர்த்தகர்கள் கலந்துக் கொள்வார்கள்.
மாலை 3 மணியில் இருந்து இரவு 8 மணி வரையில் பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிடலாம். ஆனால், விவிஐபி-களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளினால், முதல் நாளான செப்.21இல் பொதுமக்கள் காலை 11 மணி முதல் 2 மணிக்கு உள்ளாக கண்காட்சி நடைபெறும் பகுதிக்கு வந்துவிட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. விருப்பப்படுவோர் upinternationaltradeshow.com என்ற உத்தர பிரதேச மாநிலத்தின் இணையத்தள பக்கத்தில் உங்களது விபரங்களை பதிவு செய்துக் கொள்ளலாம்.

உங்களது தயாரிப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்த வேண்டுமென்றாலும், மேலே குறிப்பிடப்பட்ட லிங்க் மூலமாக பதிவு செய்யலாம். பதிவு செய்பவர்கள் வகைப்படுத்தப்பட்டு, அனைவருக்கும் இ-பேட்ஜ் வழங்கப்படுகிறது. அதாவது, இ-பேட்ஜை நீங்கள் இணையம் வாயிலாக பெற்று, அதனை கண்காட்சிக்கு கொண்டுவர வேண்டும். இந்த கண்காட்சியில் கலந்துக் கொள்வது முற்றிலும் இலவசம் ஆகும்.
சர்வதேச வர்த்தக கண்காட்சியை 2 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்வையிடுவர் என கணிக்கப்பட்டு உள்ளது. வேளாண் & தோட்டக்கலை தொழில்களை சார்ந்தவர்களில் இருந்து சினிமா, மருத்துவ துறை உள்பட ஐடி துறையில் வேலை பார்ப்பவர்கள் வரையில் என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இந்த சர்வதேச வர்த்தக கண்காட்சிக்கு வருகை தர உள்ளனர்.

இதற்கிடையில் பார்வையாளர்களை கவரும் விதமாக இசை, நடன நிகழ்ச்சிகளும், ஓவியம் தீட்டுதல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட உள்ளன. மேலும், கண்காட்சியில் பங்கேற்பவர்கள் இந்தியாவின் பல வகையான உணவுகளை ருசித்துப் பார்க்க முடியும். ஆனால் அதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சர்வதேச வர்த்தக கண்காட்சி மற்றும் மோட்டோஜிபி இரண்டும் உத்தர பிரதேச மாநில அரசாங்கத்தின் மேற்பார்வையில் நடைபெறவுள்ளன. இவ்வாறு நாட்டின் முக்கியமான நிகழ்ச்சிகள் அதிகளவில் உத்தர பிரதேசத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக, உத்தர பிரதேச மாநில அரசுக்கு கூடுதல் பொறுப்பு ஏற்படுவது மட்டுமின்றி, மாநில வளர்ச்சியும் வேகமெடுக்கிறது.


Click it and Unblock the Notifications









