ஐபிஎல் கோப்பையை யார் வேண்டுமானாலும் எடுத்துனு போகட்டும்! டாடா கர்வ் கார் இவருக்குனு எழுதி வெச்சாச்சு!
ஐபிஎல் 2025 (IPL 2025) கிரிக்கெட் தொடர் ஜூன் 3ஆம் தேதியான இன்றோடு நிறைவடைய உள்ளது. கடந்த மார்ச் 22ஆம் தேதி வழக்கம்போல் கோலாகலமாக துவங்கிய 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இடையில் போர் பதற்ற சூழலினால் 1 வார கால தாமதத்திற்கு பிறகு இன்று நிறைவடைய உள்ளது. உலகளவில் பிரபலமான இந்த டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி ஒரு ஆட்டம் மட்டுமே இன்னும் மீதம் உள்ளது. அதுதான், இறுதிப்போட்டி ஆகும். இதுவரையில் ஐபிஎல் கோப்பையை வெல்லாத இரு அணிகளான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்க்ஸ் அணிகள் அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
வெற்றி பெறும் அணிக்கு கோப்பை வழங்கப்படுவதுடன், அணி வீரர்களுக்கு பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. வெற்றி பெற்ற அணிக்கு மட்டுமில்லாமல், இறுதிப்போட்டியில் தோற்கும் அணிக்கும் ரன்னர்-அப் பரிசுகள் கிடைக்கும். இவை மட்டுமின்றி, இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர், அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இந்த வரிசையில், சிறந்த ஸ்டிரைக்ரேட்டில் (Strikerate) விளையாடிய வீரருக்கும் அசத்தலான பரிசு ஒன்று வழங்கப்பட உள்ளது. அதுதான், டாடா கர்வ் (Tata Curvv) என்கிற கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி கார் (SUV Car) ஆகும். இதனால்தான் 'கர்வ் சூப்பர் ஸ்டிரைக்கர் ஆஃப் தி சீசன்' (Curvv Super Striker Of The Season) விருதுக்கான வீரர்களின் பட்டியல் அவ்வப்போது ஐபிஎல் போட்டியின் நடுவே காட்டப்படுவதை பார்த்திருப்பீர்கள்.
பட்டியலில் இடம்பெறும் அனைவருக்கும் டாடா கர்வ் கார் பரிசாக வழங்கப்பட போவதில்லை. முதலிடத்தை பிடிக்கும் வீரருக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது. ஒட்டுமொத்த சீசனில் குறைந்த பந்தில் அதிக ரன்களை அடித்த பேட்ஸ்மேன் 'கர்வ் சூப்பர் ஸ்டிரைக்கர் ஆஃப் தி சீசன்' விருதை பெற உள்ளார். இதற்கு குறைந்தப்பட்சம் 100 பந்துகளை ஆவது பேட்ஸ்மேன் ஆடியிருக்க வேண்டும்.

இறுதிப்போட்டி இன்னும் நடைபெறவுள்ள நிலையில், தற்போதைக்கு கர்வ் சூப்பர் ஸ்டிரைக்கர் ஆஃப் தி சீசன் விருதை பெறுவதற்கான லிஸ்ட்டில் உள்ள முதல் 5 வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி, நிக்கோலஸ் பூரன், அபிஷேக் சர்மா, ஆயுஷ் மாத்ரே மற்றும் டிம் டேவிட் ஆவர். இந்த வரிசையில் 6வது இடத்தில் உள்ள பஞ்சாப் கிங்க்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யாவையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில், இந்த லிஸ்ட்டில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள வீரர்களின் அணிகள் ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிவிட்டன. 5வது இடத்தில் உள்ள பெங்களூரு அணியின் டிம் டேவிட் காயம் காரணமாக இறுதிப்போட்டியில் ஆட மாட்டார் என்றே தெரிகிறது. ஆக, 6வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணி வீரர் பிரியான்ஷ் ஆர்யாவால் மட்டுமே ஏதேனும் அதிசயம் செய்து முதலிடத்தை பிடிக்க முடியும்.
இந்த லிஸ்ட்டில் 9வது மற்றும் 10வது இடங்களில் உள்ள பில் சால்ட் மற்றும் ஷ்ரேயஸ் ஐய்யருக்கும் டாடா கர்வ் காரை பெறுவதற்கு கொஞ்சம் வாய்ப்புள்ளது. இவர்கள் யாரும் சோபிக்காத பட்சத்தில் தற்சமயம் முதலிடத்தில் இருக்கும் 14 வயதே ஆன ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி பிராண்ட்-நியூ டாடா கர்வ் காரை ஓட்டி செல்வார்.

கர்வ் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து இந்த புதிய எஸ்யூவி கார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் பல்வேறு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் கர்வ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.19.52 லட்சம் வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரருக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கர்வ் காரை பரிசாக வழங்குவதற்கு காரணம், கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து டாடா நிறுவனம் தான் ஐபிஎல் தொடரின் பிரதானமான டைட்டில் ஸ்பான்சர் ஆக உள்ளது. கர்வ் இவி என்கிற எலக்ட்ரிக் காரும் (Electric Car) விற்பனை செய்யப்பட்டாலும், பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் உடனான கர்வ் காரை சிறந்த ஸ்டிரைக்ரேட்டை கொண்ட வீரருக்கு டாடா நிறுவனம் பரிசாக வழங்க உள்ளது.


Click it and Unblock the Notifications
