சூப்பர்... ஒரே ஒரு மாணவிக்கு பாடம் நடத்துவதற்காக ஆசிரியர் செய்த காரியம்... மனசார வாழ்த்தும் மக்கள்
ஒரே ஒரு மாணவிக்கு பாடம் நடத்துவதற்காக ஆசிரியர் செய்த காரியம், மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய காரை வாங்க நாம் செலவிடும் தொகை, நம் வாழ்க்கையின் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்று. எனவே கார்களை கண்ணும், கருத்துமாக பார்த்து கொள்பவர்கள் இங்கு ஏராளம். குறிப்பாக கார்களில் ஸ்கிராட்ச் விழுந்து விடக்கூடாது என்பதில் பலர் தெளிவாக உள்ளனர். ஸ்கிராட்ச்களில் இருந்து கார்களை பாதுகாப்பதற்கு பல்வேறு வழிமுறைகளையும் அவர்கள் கையாள்கின்றனர்.

பெரும்பாலும் வாகன நிறுத்துமிடங்களில்தான், கார்களில் அதிகளவு ஸ்கிராட்ச்கள் விழுகின்றன. இதனால் வாகன நிறுத்துமிடங்களில் கார்களை விடுவதற்கே பலர் தயக்கம் காட்டி வருகின்றனர். அப்படியே வாகன ஸ்டாண்டுகளில், காரை விடுவதாக இருந்தாலும், காலியாக இருக்கும் ஒரு இடத்தில்தான் அதனை நிறுத்துகின்றனர்.

வாகன நிறுத்துமிடங்களின் காலியான பகுதியில் காரை பார்க்கிங் செய்வதன் மூலம், மற்ற வாகனங்களால் ஸ்கிராட்ச் ஏற்படும் அபாயத்தை ஓரளவிற்கு குறைத்து கொள்ள முடியும். காரில் கீறல்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக இப்படி ஒவ்வொருவரும் பல்வேறு வழிமுறைகளை கையாள்கின்றனர். ஆனால் காரில் ஸ்கிராட்ச் விழுவதை பொருட்படுத்தாமல் ஆசிரியர் ஒருவர் சூப்பரான காரியம் ஒன்றை செய்துள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளையும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது ஆட்டி படைத்து வருகிறது. கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை பாதுகாக்க, முன்கள பணியாளர்களான மருத்துவர்களும், செலிலியர்களும் போராடி வருகின்றனர். மேலும் சுகாதார பணியாளர்கள், போலீசார் ஆகியோரின் சேவையும் பாராட்டுக்குரியதாக உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இந்த வகையில் ஆன்லைனில் பாடம் நடத்திய ஈரான் ஆசிரியை ஒருவர் சமீபத்தில் அனைவராலும் பாராட்டப்பட்டார்.

உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆசிரியை மட்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததற்கு காரணம் உள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும், படுக்கையில் இருந்தபடி, ஒரு கையில் செல்போனையும், மறு கையில் புத்தகத்தையும் பிடித்து கொண்டு அவர் பாடம் நடத்தினார்.

இந்த புகைப்படம் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலானதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு நெட்டிசன்கள் பாராட்டு மழை பொழிந்தனர். தன் மாணவர்கள் மீது அந்த ஆசிரியைக்கு இருக்கும் அக்கறையை எடுத்துக்காட்டும் வகையில் இச்சம்பவம் அமைந்திருப்பதாக நெட்டிசன்கள் நெகிழ்ந்தனர்.

இந்த வரிசையில் அதே ஈரானில் இருந்து மற்றொரு புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் ஆசிரியர், ஒரே ஒரு மாணவிக்கு பாடம் நடத்துவதற்காக, அவரின் கிராமத்திற்கு காரில் சென்றதாக கூறப்படுகிறது. அது போக்குவரத்து வசதிகள் முறையாக இல்லாத குக்கிராமம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக அந்த ஆசிரியர் காரில் சென்று பாடம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில், முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், கரும்பலகை இல்லாத காரணத்தால், தனது வெள்ளை நிற காரையே அந்த ஆசிரியர் ஒயிட்போர்டாக பயன்படுத்தியுள்ளார். காரில் கீறல்கள் விழலாம், கார் பாதிக்கப்படக்கூடும் என்பதையெல்லாம் அவர் ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளவில்லை.

மாணவிக்கு பாடம் நடத்துவது ஒன்றே அவரது குறிக்கோளாக இருந்துள்ளது. எத்தனை பேர் தங்கள் காரில் இப்படி செய்ய முன்வருவார்கள்? என்பது தெரியவில்லை. ஈரானை சேர்ந்த இந்த இரண்டு ஆசிரியர்களின் கடமை உணர்ச்சியும், மாணவர்கள் மீது அவர்களுக்கு இருக்கும் அக்கறையும் மற்ற அனைவருக்கும் முன்மாதிரி என்றால் மிகையல்ல.


Click it and Unblock the Notifications








