இனி காசு கொண்டு போக வேணாம்... ரயில் உணவுகளுக்கு UPIமூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்...
இந்தியாவில் ரயில்களில் உணவுகளை வாங்கும் போது க்யூஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதியை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து வசதியான ரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறி மாறி செல்கின்றனர். இதற்காக ஆயிரக்கணக்கான ரயில்கள் தினந்தோறும் இயக்கப்படுகிறது. இந்திய மக்கள் நீண்ட தூரப்பயணத்திற்கு ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.

ரயில் பயணத்தில்தான் ஒருவர் படுத்துத் தூங்கிக்கொண்டே நிம்மதியாகப் பயணிக்க முடியும். அதுவும் குறைந்த விலையில் இந்த பயணம் சாத்தியம், பஸ் போக்குவரத்து என்றாலும் சரி விமான போக்குவரத்து என்றாலும் சரி இந்த வசதி அதில் கிடைக்காது. ரயில்களில் இப்படியான எல்லா வசதிகள் இருந்தாலும், இருக்கும் மிகப்பெரிய குறை உணவு வசதிதான்.

ரயில் பயணிகளுக்கு ஆரம்பக் காலத்தில் உணவு என்பது பெரும் சிக்கலாக இருந்தது பயண நேரத்தில் உணவு சரி வரக் கிடைக்காமல் இருந்த நிலையில் வெளியிலிருந்து உணவு விற்பனையாளர்கள் ரயிலில் உணவுகளை விற்பனை செய்து வந்தனர். இதற்கு அதிகப்பணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் ரயில்வே நிர்வாகமே கேட்ரிங் பிரிவை உருவாக்கியது.

அதன்படி நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களில் பேன்ட்ரி என்ற பெயரில் ஒரு பெட்டி இணைக்கப்பட்டு அதிலேயே உணவு தயார் செய்யப்பட்டு பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. பயணிகள் தங்களுக்குத் தேவையான உணவைப் பணம் கொடுத்து வாங்கி சாப்பிட்டுக்கொள்ளலாம்.

இன்று சதாப்தி, தேஜஸ், துரந்தோ, மற்றும் ராஜ்தானி ரயில்களில் ரயில் டிக்கெட் உடனேயே பயணிகளுக்கான உணவும் சேர்ந்து வசூலிக்கப்படுவதால் பயணிகள் உணவைத் தனியாகக் காசு கொடுத்து வாங்கத் தேவையில்லை. மற்ற பேன்டரி உள்ள ரயில்களில் மக்கள் காசு கொடுத்து தங்களுக்கான உணவை வாங்கிக்கொள்ள வேண்டும்.

பேன்டரி இல்லாத ரயில்களில் ரயில்வே நிர்வாகம் சார்பில் பேஸ் கிச்சன் நடத்துபவர்கள் ஊழியர்கள் மூலம் உணவுப் பொருட்களை விற்பனை செய்வார்கள். இந்நிலையில் ரயில்களில் நீண்ட நாட்களாக இருக்கும் பிரச்சனை ரயில்களுக்குள் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலை என்பது அதிகமாக இருப்பதாகப் புகார்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை அதிகமாக ஊக்கப்படுத்துகிறது. இந்நிலையில் ரயில்களில் உணவுகளுக்காகப் பணம் மட்டுமே செலுத்த முடியும் என்று இருந்த நிலையில் ரயில்வே நிர்வாகம் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் வசதியை சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தினர்.

ஆனால் மக்கள் பலர் அதைப் பயன்படுத்துவதில்லை. இதிலும் பல பிரச்சனைகள் இருக்கிறது. இதையடுத்து தற்போது ரயில்வே நிர்வாகம் க்யூஆர் கோடு மூலம் ரயிலில் விற்பனை செய்யப்படும் உணவிற்காகப் பணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி ஐஆர்சிடிசி மெனு கார்டிலேயே க்யூ ஆர் கோடை அச்சிடுகின்றனர். இது மட்டுமல்லாமல் ஊழியர்களின் ஐடி கார்டிலும் இந்த க்யூ ஆர் கோர்டை பிரிண்ட் செய்கின்றனர். அதைப் பயன்படுத்தி பயணிகளே தங்கள் செல்போன் மூலம் தாங்கள் வாங்கும் உணவுப் பொருட்களுக்கான பணத்தைச் செலுத்த முடியும். இதன் மூலம் ஐஆர்சிடிசியும் உணவுகளுக்கான பொருளின் விலையைக் கண்காணிக்க முடியும் என்பதால் இதை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த வசதி தற்போது Sampoorna Kranti Express ரயிலில் சோதனை முயற்சியாக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது அதை அனைத்து ரயில்களுக்கும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது போக ரயில் பயணிகள் தங்கள் உணவுகளை ரயில் கிளம்புவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு ஆன்லைனில் புக் செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணத்தை ஆன்லைனிலும் புக் செய்யலாம், அல்லது டெலிவரிசெய்யும் போதும் கொடுக்கலாம். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








