நாய், பூனை மட்டுமல்ல யானை, ஒட்டகத்தையும் ரயிலில் கூட்டிட்டு போக வாய்ப்பு! டிக்கெட் எப்படி எடுக்கனும்?
ரயில் பயணங்களில் இனி செல்லப்பிராணிகளையும் அழைத்துச் செல்வதற்குத் தனியாக டிக்கெட் வழங்க ஐஆர்சிடிசி ஆலோசனை நடத்தி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
இந்திய ரயில்களில் டிக்கெட் விநியோகத்தை ஐஆர்சிடிசி கையாண்டு வருகிறது. தற்போது மக்கள் அனைவரும் ஐஆர்சிடிசி தளத்தின் மூலம் தங்கள் பயணத்திற்கான டிக்கெட்டை எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் இந்த டிக்கெட் மக்கள் பயணிப்பதற்காக மட்டும் தான் செல்ல பிராணிகளை ரயில்களில் அழைத்துச் செல்ல அனுமதி கிடையாது.

இதனால் பலர் செல்லமாக வளர்க்கும் நாய்க்குட்டி, பூனைக்குட்டி போன்ற செல்ல பிராணிகளை ரயிலில் அழைத்துச் செல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர். தற்போது நிலவரப்படி செல்லப்பிராணிகளை ரயிலில் அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் இரண்டு வழிகள் தான் இருக்கிறது. ஒன்று கூபே கோச் உள்ள ரயிலில் கூபேவை புக் செய்தால் அதில் அழைத்துச் செல்லலாம்.
மற்றொரு வழி ரயில்களில் பார்சல் புக்கிங் கவுண்டரில் உங்கள் செல்லப்பிராணிகளை அதற்கான கூண்டில் அடைத்து அதைக் கூண்டுடன் பார்சல் கோச்சில் ஏற்றி அனுப்ப முடியும். இந்த இரு வழிகளை தவிர வேறு வழிகள் இல்லை. இதை மனதில் வைத்துத் தான் ரயில்வே அமைச்சகம் செல்லப்பிராணிகளுக்குாகன டிக்கெட்டை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கான தனி விதிமுறைகளை வகுத்து வருகிறது. இதில் செல்லப்பிராணிகள் என்றால் வெறும் நாய், பூனை மட்டுமல்ல, யானை, குதிரை, ஒட்டகம், எனப் பெரிய வகை விலங்குகளும், பறவை, முயல் போன்ற சிறிய வகை விலங்குகளும் பொருந்தும். அதன்படி செல்லப்பிராணிகளை ரயிலில் அழைத்துச் செல்ல பல ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பாக அந்த செல்லப்பிராணிகளுக்குச் சரியான நேரத்தில் தடுப்பூசிகளைப் போட்டதற்கான சான்றிதழ் இருக்க வேண்டும். இது மட்டுமல்ல பயண தேதியிலிருந்து 24-48 மணி நேரத்திற்கு முன்னதாக டாக்டரிடம் எடுக்கப்பட்ட ஃபிட்னஸ் சான்றிதழும் வழங்கப்பட வேண்டும். பயணத்தின் போது தனது செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்பவர்கள் அதற்கான உணவு, தண்ணீர், செல்லப்பிராணிகளுக்கு பிடித்தமானபொம்மைகளையம் பயணத்தின் போது உடன் வைத்திருக்க வேண்டும்.

பயண நேரத்தில் அது மற்றவர்களைத் தொந்தரவு செய்யாத வகையில் அதன் உரிமையாளர் பார்த்துக்கொள்ள வேண்டும் என விதிமுறை உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் தயாராகி வருகிறது. ஒரு சில நாட்களில் இது வெளியாகும் என எதிர்பார்க்கலாம். மேலும் ஐஆர்சிடிசி செல்லப்பிராணிகளை ரயிலில் அழைத்த செல்ல பிரத்தியேக வெப்சைட் ஒன்றையும் உருவாக்கி வருகிறது. உங்கள் ரயில் பயணத்தில் செல்ல பிராணிகளையும் அழைத்துச் செல்ல விரும்பினால் அந்த வெப்சைட்டில் செல்ல பிராணிகளுக்கான டிக்கெட்டையும் எடுத்துச் செல்ல முடியும்.
முன்னதாக ரயில்களில் செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்ல முழு கூபேவை புக்கிங் செய்தனர். இது அதிகமான செலவாகும். இனி அவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டியதில்லை. குறைந்த செலவிலேயே செல்லப்பராணிகளையும் உங்கள் பயணத்தில் உங்களுடனேயே கூட்டிச் செல்ல முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்படியாகச் செல்லப்பிராணிகளை ரயிலில் அழைத்துச் செல்வது வரவேற்கத் தக்க விஷயமாக இருந்தாலும் இது சக பயணிகளுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய விஷயமா என்பதையும் காண வேண்டும். இவர்கள் எடுத்துச் செல்லும் செல்ல பிராணிகள் சக பயணிகளைத் தொந்தரவு செய்தால் அதற்கு யார் பொறுப்பு? என்பதையும் முறையாக விதிமுறைகளில் கொண்டு வரவேண்டும்.


Click it and Unblock the Notifications
