மத்தவங்களுக்கு புக் பண்ணி கொடுத்து மாட்டிக்காதீங்க! டிக்கெட் புக்கிங்கில் ஐஆர்சிடிசியின் கட்டுப்பாடுகள் என்ன?
ஐஆர்சிடிசியில் நினைத்தபடி எல்லாம் டிக்கெட் புக் செய்ய முடியாது. ஒவ்வொரு ஐடியிலிருந்தும் மாதம் குறிப்பிட்ட அளவு டிக்கெட்களை மட்டுமே புக் செய்ய முடியும், இது குறித்த தகவல்களைக் காணலாம்.
இந்தியா முழுவதும் ரயில் டிக்கெட்களை ஆன்லைனில் புக் செய்ய இருக்கும் ஒரே இணையதளம் ஐஆர்சிடிசி தான். இதில் இந்தியா முழுவதிலும் தினமும் லட்சக்கணக்கான மக்கள் தங்களுக்கான ரயில் பயண டிக்கெட்களை புக்கிங் செய்து வருகின்றனர்.

இந்த தளத்தில் நாம் நமக்கு எவ்வளவு டிக்கெட்களை புக் செய்ய வேண்டுமோ செய்து கொள்ளலாம் என மக்கள் பலர் நினைத்து வருகின்றனர். ஆனால் இந்த தளத்தில் டிக்கெட் புக்கிங் செய்யப் பல கட்டுப்பாடுகள் இருக்கிறது. இதில் உள்ள பயனர்களை ஐஆர்சிடிசி தளம் இரண்டு வகையாகப் பிரித்துள்ளது. தங்கள் ஆதார் கார்டை அப்டேட் செய்தவர்கள் மற்றும் செய்யாதவர்கள் என இரண்டு விதமான பயனர்கள் இருக்கின்றனர்.
ஒவ்வொரு பயனருக்கும் டிக்கெட் புக்கிங்கில் ஒவ்வொரு விதமான கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஆதார் கார்டை லிங்க் செய்த பயனர்கள் மாதம் 24 டிக்கெட்கள் வரை புக்கிங் செய்யலாம். அதுவே ஆதார் கார்டு லிங்க் செய்யாத பயனர்கள் மாதம் 12 டிக்கெட்கள் வரை மட்டமே புக்கிங் செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது.
சாதாரணமாக ஐஆர்சிடிசி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாதம் 12 டிக்கெட்கள் வரை மட்டும் தான் புக்கிங் செய்ய முடியும். ஆதார் எண்ணை ஐஆர்சிடிசி கணக்குடன் இணைத்து விட்டால் மாதம் 24 டிக்கெட் வரை புக் செய்து கொள்ளலாம். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. மாதம் மொத்தம் புக் செய்யப்படும் டிக்கெட்களில் 12 டிக்கெட்கள் வரை குறிப்பிட்ட ஐடியை பயன்படுத்துபவர்கள் டிக்கெட்டில் இல்லாமல் பயணிக்க முடியும்.
ஆதார் எண்ணை ஐஆர்சிடிசி கணக்குடன் இணைத்திருந்தாலும் மாதம் 12 டிக்கெட்டிற்கு மேல் புக் செய்ய வேண்டும் என்றால் அந்த ஐடியை பயன்படுத்துபவர் தன்னையும் ஒரு பயணியாக இணைத்தால் மட்டுமே முடியும். இந்த விதிமுறை இப்படியாகத் தனி நபர் ஐடிகளை கொண்டு ரயில் டிக்கெட்களை புக் செய்து விற்பனை செய்யும் நபர்களை தடுக்க இந்த கட்டுப்பாட்டைக் கொண்டு வந்துள்ளது.
நீங்கள் உங்கள் ஐஆர்சிடிசி கணக்கை ஆதாருடன் இணைக்க ஐஆர்சிடிசி தளத்திற்குச் சென்று My Account மெனுவிற்குள் Link my Aadhar என்ற ஆப்ஷனை தேர்வு செய்து அதில் உங்கள் ஆதார் கார்டை இணைக்க முடியும் ஒரு ஆதார் கார்டு ஒரு ஐடியுடன் மட்டுமே இணையும், இரண்டாவதாக ஒரு ஐடியில் அதே ஆதார் கார்டை இணைக்க முயன்றால் இரண்டாவது ஐடி மட்டுமே இணைக்கப்பட்டு முதல் ஐடியிலிருந்து தானாக அன்லிங்க் ஆகிவிடும்.
இப்படியாக ஆதார் இணைக்கப்பட்ட நபர் டிக்கெட் புக் செய்யும் போது பயணிகள் குறித்த விபரத்தைப் பதிவிடும் போது தானாகவே ஆதார் லிங்க் செய்த நபரின் பெயர் டிராப் டவுனில் வரும் அதைத் தேர்வு செய்து புக் செய்தால் மாதம் 24 டிக்கெட்கள் வரை புக் செய்யலாம். இந்த கட்டுப்பாடுகள் வெகு நாட்களாக ஐஆர்சிடிசி தளத்தில் இருந்தாலும் இது குறித்த போதிய விழிப்புணர்வு பெரும்பாலான மக்களிடம் இல்லை. இதை மக்களுக்கு நினைவுபடுத்தவே இந்த பதிவைச் செய்துள்ளோம்.


Click it and Unblock the Notifications








