ஆன்லைன் ரயில் டிக்கெட் புக்கிங் செய்வதில் புது ரூல்ஸ்! ரயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!
ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது குடும்ப உறுப்பினர்கள் தவிர மற்ற நபர்களுக்கு டிக்கெடுக்கலை முன்பதிவு செய்து வழங்க கூடாது என ரயில்வே நிர்வாகம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதை மீறுபவர்களுக்கு மூன்று ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூபாய் 10,000 வரை அபராதம் விதிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் இருக்கும் விதிமுறை குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
இந்தியா முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் பயணம் செய்து வருகின்றன. இந்த ரயில்களில் உள்ள லட்சக்கணக்கான டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளம் உருவாக்கப்பட்டு செயல்பாட்டில் இருக்கிறது. நீங்கள் ஆன்லைன் மூலம் எப்படி டிக்கெட் புக் செய்தாலும் அது ஐஆர்சிடிசி வழியாகவே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இதில் பல்வேறு விதிமுறைகள் இருக்கிறது.

இதன்படி இந்திய ரயில்வே சட்டம் 143 இன் கீழ் ரயில்வே நிர்வாகம் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மட்டுமே 3ம் நபர்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வழங்கலாம் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி இனி தனி நபர்கள் யாரும் 3ம் நபருக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யக்கூடாது என்ற விதிமுறையையும் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
அதாவது ஐஆர்சிடிசி ஏஜெண்டுகளுக்கு மட்டுமே மூன்றாம் நபர்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். நீங்கள் ஒருவேளை உங்கள் செல்போன் மூலம் அல்லது உங்கள் லேப்டாப் மூலம் உங்கள் தனிப்பட்ட கணக்கிலிருந்து டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கோ அல்லது உங்கள் ரத்த பந்த உறவுகளுக்குள் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வழங்க முடியும் என தெரிவித்துள்ளது.

இதையும் மீறி நீங்கள் கமிஷன் அடிப்படையிலோ அல்லது வேறு ஏதேனும் லாப அடிப்படையிலோ உங்கள் தனி நபர் புக்கிங் வசதியிலிருந்து டிக்கெட்டுகளை வேறு நபருக்கு முன்பதிவு செய்து கொடுத்தால் உங்களுக்கு மூன்று ஆண்டு சிறை அல்லது ரூ 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தனி நபர் டிக்கெட் புக்கிங் இல் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளையும் ஏற்கனவே ரயில்வே நிர்வாகம் வைத்திருந்தது.
அதன்படி தனிநபர் டிக்கெட் முன் பதிவு செய்யும்போது ஆதார் சரிபார்க்கப்பட்ட பயணிகளுடன் கூடிய டிக்கெட் என்றால் மாதம் 24 டிக்கெட்டுகளை ஒரே ஐடியில் இருந்து புக் செய்யலாம் எனவும் ஆதார் சரிபார்க்கப்படாத பயணிகளின் டிக்கெட் என்றால் மாதம் 12 டிக்கெட்டுகள் மட்டுமே புக் செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு தற்போது அமலில் இருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பல தனிநபர் ஐடிகளை வைத்துக்கொண்டு அதை மற்றவர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய பயன்படுத்தி வருகிறார்கள். இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை இதற்கு முன்னரே விதித்திருந்தது. ஆனால் தண்டனை குறித்த விபரங்கள் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது தண்டனை குறித்த விபரங்களையும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது மட்டுமல்லாமல் உங்கள் தனி நபர் ஐடியில் இருந்து 3ம் நபருக்கு டிக்கெட்டுகளை புக் செய்து கொடுக்கும் விபரத்தை ரயில்வே நிர்வாகம் ஆதாரத்துடன் கண்டறிந்தால் உங்களது ஐடி முடக்கப்படவும் ரயில்வே நிர்வாகத்திற்கு அதிகாரம் உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இதனால் எதிர்காலத்தில் நீங்கள் ரயில் டிக்கெட் உங்கள் ஐடியில் இருந்து புக் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படலாம்.
ஒருவேளை உங்களுக்கு தனிநபர் ஐடி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய தெரியவில்லை அல்லது நேரமில்லை என்ற காரணம் இருந்தால் நீங்கள் உடனடியாக அருகில் உள்ள ரயில்வே நிர்வாகத்தின் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் விநியோகஸ்தரிடம் சென்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இது சட்டவிரோதம் கிடையாது. அவர்கள் நேரடியாக ஐஆர்சிடிசி யின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களாக இருப்பார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மூன்றாம் நபருக்கு தனிநபர் ஐடியில் இருந்து டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யக்கூடாது என்ற விதிமுறை நீண்ட நாட்களாக அமலில் இருந்தாலும், இது குறித்து தண்டனை விபரங்களை தற்போது ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் பல்வேறு எச்சரிக்கைகளையும் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதனால் இனி நீங்கள் உங்கள் ஐடியில் இருந்து மற்றவர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்து கொடுக்காதீர்கள். அங்கீகரிக்கப்பட டீலர்களிடம் சென்றாலே தீர்வு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications









