E20 பெட்ரோலால் நாலா பக்கமும் இடி? சர்க்கரை, முட்டை விலை முதல் கார் ரிப்பேர் செலவு வரை.. அடுத்தடுத்த ஷாக்!!

இந்தியாவில் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்படும் E20 நடைமுறை நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள நிலையில், அதன் தாக்கம் வாகனங்களின் மைலேஜ் மற்றும் செயல்திறனுடன் மட்டும் முடிந்துவிடுகிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் தேவை அதிகரிப்பது முதல் பழைய பெட்ரோல் வாகனங்களின் பராமரிப்பு செலவு வரை, நுகர்வோருக்கு பல்வேறு வழிகளில் கூடுதல் செலவு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக சர்க்கரை மற்றும் முட்டை விலை உயர்வு விவாதத்திலும் எத்தனால் உற்பத்தி முக்கிய காரணியாக முன்வைக்கப்படுகிறது. அதே நேரத்தில், E20 பெட்ரோலைப் பயன்படுத்தும் பழைய வாகனங்களில் மைலேஜ் குறைவு மற்றும் கூடுதல் பழுதுபார்ப்பு செலவு தொடர்பாகவும் நுகர்வோர் அமைப்புகளின் ஆய்வுகள் கவலைகளை எழுப்பியுள்ளன.

E20 Petrol

சர்க்கரை விலை உயர்வு

எத்தனால் தயாரிப்பதற்கு கரும்பு சார்ந்த மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் எத்தனால் கலப்பு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதால், எத்தனால் உற்பத்திக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் சர்க்கரை உற்பத்தி மற்றும் எத்தனால் உற்பத்திக்கு இடையிலான சமநிலை குறித்து தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.

சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவின் சராசரி சில்லறை சர்க்கரை விலை கடந்த ஜூலை 20ம் தேதி கிலோ ரூ.48.18 என்ற நிலையில் இருந்து ஆகஸ்ட் 20ம் தேதி ரூ.55.70 ஆக உயர்ந்துள்ளது. இது 16 சதவீத உயர்வாக உள்ளது. எனினும், இந்த விலை உயர்வுக்கு எத்தனால் உற்பத்தி மட்டுமே காரணம் என்று கூற முடியாது. சந்தை நிலவரம், மழையால் உற்பத்தி பாதிப்பு மற்றும் வினியோகம் உள்ளிட்ட பல காரணங்களும் சர்க்கரை விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

முட்டை விலையிலும் தாக்கம்?

இதைவிட சுவாரஸ்யமான மற்றொரு தொடர்பு E20 பெட்ரோலுக்கும், கோழி முட்டைக்கு உள்ளது. இந்தியாவில் எத்தனால் உற்பத்திக்காக மக்காச்சோளத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால், கோழிப்பண்ணைகளுக்கான தீவனத்தில் மக்காச்சோளமும் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. இதனால், கோழி தீவனத்தின் செலவு அதிகரித்து, முட்டை உயர்விலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக தொழில்துறை தரப்பில் கூறப்படுகிறது. சமீபத்திய தகவலின்படி, முட்டையின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 35 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மக்காச்சோளம் எத்தனால் உற்பத்திக்கு அதிகமாக திருப்பப்படுவது கோழித் தீவனச் செலவு உயர்வுக்கு ஒரு காரணியாகக் குறிப்பிடப்படுகிறது.

பழைய கார்களுக்கு அதிக செலவு?

E20 விவாதத்தில் நேரடியாக வாகன உரிமையாளர்களை பாதிக்கும் விஷயமும் உள்ளது. புதிய தலைமுறை பெட்ரோல் வாகனங்கள் அதிக எத்தனால் கலப்புக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட பெட்ரோல் கார்கள் மற்றும் பைக்குகள் E20 பெட்ரோலுக்கு இணக்கமானதாக இல்லை.

எத்தனால் பெட்ரோலைவிட குறைவான ஆற்றல் அடர்த்தியைக் கொண்டிருப்பதால், குறிப்பிட்ட அளவு எரிபொருளில் கிடைக்கும் ஆற்றல் குறையக்கூடும். இதனால் சில பழைய வாகனங்களில் மைலேஜ் குறைய வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசே நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. அண்மையில் LocalCircles நடத்திய ஆய்வில், 2022 அல்லது அதற்கு முன்பு வாங்கிய பெட்ரோல் வாகனங்களின் உரிமையாளர்களில் கணிசமானோர் E20 பயன்பாட்டுக்குப் பிறகு மைலேஜ் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூனில் வெளியான மற்றொரு LocalCircles ஆய்வில், 2023-க்கு முன்பு வாங்கப்பட்ட பெட்ரோல் வாகனங்களின் உரிமையாளர்களில் 66 சதவீதம் பேர் 10 சதவீதத்திற்கும் அதிகமான மைலேஜ் குறைவை தெரிவித்துள்ளனர். மேலும், 55 சதவீதம் பேர் வழக்கத்தைவிட எஞ்சின் பாகங்களில் அதிக தேய்மானம் மற்றும் பழுதுநீக்கும் அவசியம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால், பழைய கார் மற்றும் பைக் உரிமையாளர்களின் கவலையை அதிகரிக்கின்றன.

ரிப்பேர் செலவு?

E20 பயன்பாட்டால் அனைத்து பழைய வாகனங்களிலும் கட்டாயம் பாதிப்பு ஏற்படும் என்று கூற முடியாது. வாகனத்தின் வயது, எஞ்சின் வடிவமைப்பு, எரிபொருள் அமைப்பில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் போன்றவை முக்கியமான விஷயங்களாக கூற முடியும். ஆனால், பழைய வாகனங்களில் எரிபொருள் அமைப்பு, கேஸ்கெட்டுகள், இன்ஜெக்டர்கள் உள்ளிட்ட பாகங்களில் கூடுதல் தேய்மானம் ஏற்பட்டால் அவற்றை மாற்றுவதற்கான செலவு உரிமையாளருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். ocalCircles ஆய்வில், பழைய பெட்ரோல் வாகன உரிமையாளர்களில் ஒரு பகுதியினர் E20 பயன்பாட்டுக்குப் பிறகு மைலேஜ் குறைவு மற்றும் பழுது நீக்குவதற்காக ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை செலவு செய்ததாக தெரிவித்துள்ளனர்.

அரசின் நிலைப்பாடு?

E20 காரணமாக அனைத்து பழைய வாகனங்களிலும் எஞ்சின்களிலும் பெரிய அளவிலான பிரச்னை ஏற்படும் என்பதை அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. E20 பெட்ரோல் தொடர்பாக அரசு மற்றும் வாகனத் துறை தரப்பில் தொடர்ந்து ஆய்வுகள் மற்றும் மதிப்பீடுகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, சர்க்கரை, முட்டை விலை உயர்வு மற்றும் பழைய கார் எஞ்சின்களில் பாதிப்பு ஏற்படும் என்ற அனைத்து விஷயங்களையும் E20 பெட்ரோலுடன் நேரடியாக இணைக்க முயல்வது சரியான பார்வையாக இருக்காது. அதேநேரத்தில், எத்தனால் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் தேவை, உணவுப் பொருட்களின் விலை, பழைய வாகனங்களின் மைலேஜ், பராமரிப்பு செலவுகள் என்பது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்புவதை மறுக்க முடியாது.

E20 பயன்?

E20 பெட்ரோலை பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருப்பதன் நோக்கம் கச்சா எண்ணெய் இறக்குமதியைகுறைத்து, எரிபொருள் தேவையில் உள்நாட்டு வளங்களை பயன்படுத்தி கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், விவசாயிகளுக்கு மாற்று வருவாய் பெருக்குவதை நோக்கமாக கொண்டும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் எந்தவொரு பெரிய கொள்கை மாற்றத்திலும் அதன் மறைமுக தாக்கங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

எத்தனால் உற்பத்திக்கு தேவையா மூலப்பொருட்களான கரும்பு மற்றும் மக்காச்சோளத்துக்கான தேவை அதிகரிக்கிறது. இதனால் உணவுப் பொருட்களின் விலையில் என்ன தாக்கம் ஏற்படுகிறது என்பதும் கண்காணிக்கப்பட வேண்டும். மறுபுறத்தில் E20 பெட்ரோல் பயன்படுத்துவதால், பழைய வாகனங்களில் ஏற்படும் கூடுதல் பராமரிப்பு செலவு மற்றும் மைலேஜ் குறைவு போன்றவற்றிற்கும் உரிய தீர்வு காணும் வகையில் குறைவான எத்தனால் கலப்புடைய E10 அல்லது எத்தனால் கலப்பு இல்லாத E0 பெட்ரோலை மாற்றுத் தேர்வாக வழங்குவதற்கும் தீர்வு காணப்பட வேண்டும்.

E20 பெட்ரோல் மீதான விவாதம் இனி வாகனத்திற்கான எரிபொருள் செலவு, பராமரிப்பு செலவு மட்டுமின்றி முடிந்துவிடாது. பெட்ரோல் செலவு, மைலேஜ், வாகன பராமரிப்பு, சர்க்கரை விலை, முட்டை விலை என ஒரு குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட்டில் பல்வேறு வழிகளில் இதன் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Article Published On: Wednesday, August 26, 2026, 15:51 [IST]
English summary
Is e20 petrol impact sugar egg price old car repair cost
மேலும்... #petrol price #e20
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out