ரஃபேல் விமான ஊழல் காசை கொள்ளை அடித்தது யார்? அந்த விமானத்தால் ராணுவத்திற்கு பயன் என்ன?
ரஃபேல் போர் விமானம் குறித்து சமீபத்தில் பல்வேறு விதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ரஃபேல் டீலில் எக்கச்சக்கமான பணம் ஊழல் செய்யப்பட்டுள்ளது. ரஃபேல் ஒப்பந்தத்தில் வெளிப்படை தன்மையில்லை என எதிர்க
ரஃபேல் போர் விமானம் குறித்து சமீபத்தில் பல்வேறு விதமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ரஃபேல் டீலில் எக்கச்சக்கமான பணம் ஊழல் செய்யப்பட்டுள்ளது. ரஃபேல் ஒப்பந்தத்தில் வெளிப்படை தன்மையில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இவ்வளவு முக்கியமாக பேசப்படும் ரஃபேல் விமானத்தில் அப்படி என்னதான் இருக்கிறது? அந்த விமானம் நமது இந்திய விமான படையில் இருப்பதால் நமக்கு என்ன பலம்? பிரான்ஸ் நாட்டில் இருந்து இதை ஏன் வாங்க வேண்டும்? என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

டசால்ட் ரஃபேல் என்பது பிரான்ஸ் நாட்டின் ட்வின் இன்ஜின் விமானம். இதை பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் வடிவமைத்துள்ளது. கடந்த 1970ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் விமானப்படை மற்றும் கப்பல் படை அவர்களிடம் உள்ள விமானங்களை விட அதிக பலம் பொருந்திய விமானத்தை தயாரிக்க முடிவு செய்தனர். ஆனால் அதற்காக அதிக அளவில் பணம் செலவிட வேண்டியிருந்தது.

இதன் காரணமாக இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளை ஒன்றிணைத்து இவர்களுடன் சேர்ந்து பிரான்ஸூம் சேர்ந்து இந்த விமானத்தை தயாரிக்க முடிவு செய்தனர்.

பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு கடந்த 1986ம் ஆண்டு இந்த விமானம் முற்றிலுமாக வடிவமைக்கப்பட்டு முதல் முறையாக பறக்க விடப்பட்டது. எனினும் 1996ம் ஆண்டுதான் இந்த விமானம் முறையாக பயன்பாட்டிற்கு வந்தது. ரஃபேல் விமானம் மொத்தம் 3 விதமான வேரியன்ட்களில் உள்ளது.

ரஃபேல் சி ஒரு சீட் லேண்ட் பேஸ் வேரியன்ட், ரஃபேல் பி டுவின் சீட் லேண்ட் பேஸ் வேரியன்ட், ரஃபேல் எம் ஒரு சீட் கேரியர் பேஸ்டு வேரியன்ட் ஆகியன தற்போது உள்ளன. தற்போது இந்த விமானத்தை ஐரோப்பிய நாடுகளை தவிர இந்தியா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளுக்கும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2000-வது ஆண்டு அட்டல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது வெளிநாடுகளிடம் இருந்து உயர் ரக போர் விமானங்களை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தார். இது கடந்த 2007ம் ஆண்டு காங்., ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 126 விமானங்களை வாங்குவது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் அது ஒப்பந்ததுடன் நின்று போனது. செயல்பாட்டிற்கு வரவில்லை.

இதன்பின் கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்ற பின்பு 2015ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிற்கு சென்றிருந்தார். அப்போது இந்தியாவிற்காக 36 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதுகுறித்து அப்போதே செய்திகள் வெளியாகின. கடந்த 2016ம் ஆண்டு செப்., மாதம் இதற்கான இறுதி ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது.

இந்த 36 விமானங்களுக்காக இந்திய அரசு சுமார் 65,000 கோடியை வழங்க ஒப்புக்கொண்டது. இது சர்வதேச மதிப்பில் 7.8 பில்லியன் யூரோக்களாகும். இதில் 15 சதவீத தொகையை இந்தியா முன்பணமாக வழங்கியுள்ளது.

இந்த பணத்தின் மூலம் இந்தியாவிற்கு ரஃபேல் விமானம் மட்டும் இல்லாமல் விமானத்தில்உள்ள ஆயுதங்கள், மெட்டார் மிஷல் ஆகியனவும் கிடைக்கும் இந்த மெட்டார் மிஷல் உலகிலேயே சிறந்த மிஷலாக கருதப்படுகிறது.

இந்த ரஃபேல் விமானத்தால் அதிக உயரத்தில் பறக்க முடியும். குறிப்பாக காஷ்மீரில் உள்ள லே பகுதியிலும் இந்த விமானத்தை மற்ற விமானங்கள் பறக்காத உயரத்தில் பறக்க வைக்க முடியும்.

இதில் பொருத்தப்பட்டுள்ள ரேடார் கருவி சட்ட விரோத செயல்களை கண்காணித்து விமானத்திற்குள் தகவல்களை சொல்லும். தாக்குதல்களை கண்டறிந்து அதை துல்லியமாக தடுக்க முடியும். மேலும் இந்த விமானத்திற்காக 50 ஆண்டுகள் பிரான்ஸ் அரசு தொழிற்நுட்ப உதவிகளையும் வழங்கும்.

தற்போது ஒப்பந்தங்கள் இறுதியாகி, விமானங்களை தயார் செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையில் ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் குற்றச்சாட்டுக்களை எழுப்பின.

தற்போது 36 ரஃபேல் விமானங்கள் சுமார் 7.8 பில்லியன் யூரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 65 ஆயிரம் கோடி என்ற மதிப்பீட்டில் வாங்கவுள்ளதாக ஒப்பந்தம் வெளியாகிருந்தது. ஆக ஒரு விமானத்தின் மதிப்பு சுமார் 1800 கோடி. ஆனால் காங்.,ஆட்சி காலத்தில் இதே விமானத்தை சுமார் 500 கோடி அளவிலேயே வாங்க முடிவு செய்யப்பட்டதாகவும், தற்போது அதை 1800 கோடிக்கு வாங்குவதில் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதற்கு பதிலளித்த பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், காங்., ஆட்சி காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்ததை விட அதிக ஆயுதங்கள் தாங்கியதாக இந்த விமானங்கள் இருக்கும் எனவும், உலக அளவில் அதிக நவீன பலம் பொருந்திய விமானமாக இது இருக்கும் எனவும், இதன் காரணமாகவே இதற்கு அதிக விலை எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்தியா வாங்கவுள்ள 36 விமானங்களில் 28 விமானங்கள் சிங்கிள் சீட்டர் விமானம் எனவும், 8 விமானங்கள் டபுள் சீட்டர் விமானங்கள் எனவும், இதற்கான விலையிலும் மாறுபாடு உள்ளது எனவும், இந்த இரண்டு விமானங்களிலும் என்னென்ன வசதிகள் இருக்கிறது? இதன் திறன் என்ன என்பதை நாட்டின் பாதுகாப்பு கருதி வெளியிட முடியாது எனவும் விளக்கமளித்தார்.

காங்., ஆட்சி காலத்தில் விமானத்தை வாங்குவதற்காக மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டது எனவும், இந்த ஒப்பந்தத்தின் படி அந்த விமானங்களை இயக்க இந்திய ராணுவத்தினருக்கு பிரான்ஸ் ராணுவம் பயிற்சி வழங்கவும், இதில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களையும் பிரான்ஸ் நாட்டிடம் இருந்தே வாங்கவும் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவிற்கு வரும் ஒரு சிங்கிள் சீட்டர் ரஃபேல் விமானத்தின் விலை 91.07 மில்லியன் யூரோக்கள் (ரூ.769 கோடி), இரட்டை சீட்டர் ரஃபேல் விமானத்தின் விலை 94 மில்லியன் யூரோ (ரூ.794 கோடி)

மேலும் அவர் குறிப்பிடுகையில் பிரான்ஸ் இடமிருந்து இந்தியா மட்டும் இந்த விமானத்தை வாங்கவில்லை. எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகளும் இந்த விமானத்தை வாங்கியுள்ளதாவும், இதில் எகிப்து ரஃபேல் விமானத்தை 127 மில்லியன் யூரோவுக்கும் (ரூ.1072 கோடி), கத்தார் ஒரு விமானத்தை 262 மில்லியன் யூரோவுக்கும் (ரூ.2213 கோடி) வாங்கியுள்ளதாக அறிவித்தார்.

ஆனால் கத்தார் மற்றும் எகிப்து வாங்கிய விமானங்களில் உள்ள வசதிகள், கட்டமைப்புகள் குறித்து எந்த தகவலையும் அந்நாடுகள் தெரிவிக்கவில்லை எனவும், அதே போல இந்தியாவும் பொது வெளியில் நிச்சயமாக இந்தியா வாங்கவுள்ள விமானங்களில் உள்ள வசதிகள், கட்டமைப்புகள் குறித்து தெரிவிக்காது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதன் பின்னர் ரஃபேல் குறித்த செய்திகள் வெகுவாக குறைந்திருந்தது. இந்நிலையில் தற்போது ரஃபேல் விமானத்தை கட்டமைப்பதில் இந்திய ஒப்பந்ததாரராக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசிற்கு சொந்தமான எச்ஏஎல் நிறுவனம் இருக்கும் போது, அனில் அம்பானிக்கு ஏன் இந்த ஒப்பந்தத்தை பிரான்ஸ் அரசு வழங்க வேண்டும். இதில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய அரசுதான் ரிலையன்ஸ் நிறுவனத்தை பரிந்துரை செய்ததாக பிரான்ஸ் நாட்டின் பிரதமர் சமீபத்தில் பேசியுள்ளார். இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதற்கு ராணுவ அமைச்சகம் சார்பில், எச்எஎல் இடம் பொதுமான வசதிகளும், திறமையும் இல்லை. இதனால்தான் பிரான்ஸ் அரசு ரிலையன்ஸிற்கு இந்த ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக கூறியது.

இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம்தான் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டது எனவும் அந்நிறுவனத்திற்கு இதுவரை எந்த விமானத்தை தயாரித்த அனுபவமும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

இதில் ஊழல் நடந்திருக்கிறதா? எவ்வளவு நடந்திருக்கிறது? ரஃபேல் விமானங்கள் நியாயமான விலையில்தான் வாங்கப்படுகிறதா? என்பது குறித்த தெளிவான முடிவுகள் எதுவும் இல்லை. விமானங்களில் உள்ள வசதிகள் மற்றும் விமானத்தின் கட்டமைப்பு குறித்து தெரிந்தால் மட்டுமே அந்த விலை நியாயமா? ஊழல்கள் நடந்துள்ளதா? என்பதை அறிய முடியும்.

இதற்கிடையில் தற்போது பா.ஜ அரசு செய்துள்ள ஒப்பந்தம் முந்தைய காங்., அரசு செய்த ஒப்பந்தத்தை விட சிறந்த ஒப்பந்தமாகும் எனவும், இந்திய விமான படை எதிர்பார்க்கும் அத்தனை தேவைகளையும் இந்த ரஃபேல் விமானம் நிவர்த்தி செய்யும் எனவும், எதிர்பார்த்ததை விட சிறப்பான கட்டமைப்புகளை இந்த விமானம் பெற்றுள்ளதாகவும் இந்திய விமானப்படையில் உள்ள பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ரஃபேல் விமானம் ஒப்பந்தத்தின்படி வரும் 2019ம் ஆண்டு தங்களது முதல் விமானத்தை இந்தியாவிற்கு வழங்க வேண்டும். 2022ம் ஆண்டில் அத்தனை விமானங்களையும் இந்தியாவிற்கு கொண்டு வந்திருக்க வேண்டும்.

தற்போது சில விமானப்படையினரிடம் கேட்ட போது ரஃபேல் விமானங்கள் கண்டிப்பாக இந்திய ராணுவத்திற்கு மிக அவசியமானது என்றும், விமானப்படை சுமார் 126 விமானங்களை கோரியதாகவும், தற்போது 36 விமானங்கள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளதாகவும் சிலர் கூறினர். இந்த எண்ணிக்கை அதிகரித்தால் விமானப்படையினருக்கு போதுமான வசதிகள் கிடைக்கும்.
More from DriveSpark
இந்தியாவின் முதல் ஹைப்பர் கார் மாடலாக வர இருக்கும் வஸிராணி ஷூல் எலெக்ட்ரிக் ஹைப்பர் காரின் கான்செப்ட் மாடல் பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications








