டிடிஎஃப் வாசனால் இனி சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் எடுத்து பைக் ஓட்ட முடியுமா?
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஜெயிலில் இருந்து ஜாமினில் விடுதலையான நிலையில் அவர் மீண்டும் சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் எடுத்து பைக் ஓட்ட போவதாக பேட்டியளித்துள்ளார். இது உண்மையிலேயே சாத்தியமா? டிடிஎஃப் வாசனால் இனி சர்வதேச டிரைவிங் லைசன்ஸ் எடுத்து பைக் ஓட்ட முடியுமா? என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
தமிழகத்தில் பிரபல யூட்யூபராக இருப்பவர் டிடிஎஃப் வாசன். இவர் சூப்பர் பைக்குகளில் வெளியூர்களுக்கு டூர் சென்று அதை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இவர் அதிக வேகமாக பைக் ஓட்டி பிரபலமாக மாறி உள்ளார். கொரோனா காலகட்டத்தில் இவர் வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில் இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் குவிந்தன இவர் அதிக வேகமாக வாகனத்தை ஒட்டி அதை வீடியோவாக எடுத்து போட்டு இன்றைய இளைய சமுதாய இளைஞர்களை தவறான பாதையில் வழிநடத்தி செல்கிறார் என குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. மேலும் இவர் மீது சட்ட விரோதமாக வாகனம் ஓட்டியதற்காக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவர் அந்த வழக்குகளை எதிர்கொள்வதையும் ஏதோ ஹீரோயிஷம் செய்வது போல சமூக வலைதளங்களில் காட்டிக்கொண்டார்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இவர் சென்னையிலிருந்து மகாராஷ்டிராவிற்கு தனது சுஸூகி ஹயபுஸா பைக்கில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பைக் காஞ்சிபுரம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது இவர் பைக்கில் வீலிங் செய்ய முயன்ற போது பைக் விபத்துக்குள்ளாகியது. இதில் அவர் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டார். நல்ல வேலையாக இவர் டிரைவிங் கியர் எல்லாம் அணிந்து இருந்ததால் காயம் பெரிய அளவில் இல்லை. ஆனால் இவரது கை உடைந்து போயிருந்தது.

இந்நிலையில் இவர் மீது காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் இவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக இவர் சிறையில் தான் இருந்தார். இந்நிலையில் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என பல்வேறு முறை முறையிட்டு அதை நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஜாமின் மூலம் டிடிஎஃப் வாசன் சென்னை புழல் சிறையிலிருந்து வெளியே வந்ததும் பத்திரிகையாளர்கள் இவரிடம் பேட்டி கேட்டனர். அப்பொழுது அவர் தனக்கு ஜெயிலுக்கு சென்றதை விட தனது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட செய்தி கேட்டு தான் தான் மிகவும் வருத்தப்பட்டதாக தெரிவித்தார். அவர் ஜெயிலில் இருந்த காலத்தில் இவரது டிரைவிங் லைசென்ஸ் 10 ஆண்டுகள் வரை ரத்து செய்து போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இனி பைக் ரைடு செய்வீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது, தான் நிச்சயம் பைக் ரைடு செய்வேன் என்றும் டிரைவிங் லைசன்ஸ் இல்லாவிட்டால் சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் எடுப்பேன் என்றும் அல்லது தற்போது உள்ள டிரைவிங் லைசென்ஸிற்க்கு மேல்முறையீடு செய்து அதைப் பெற முயற்சிப்பேன் என்றும் பேட்டியளித்துள்ளார். டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டாலும் சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் எடுத்து பைக் ஓட்டலாமா என பலர் ஆச்சரியமாக கேள்வி கேட்டு வருகின்றனர்.
ஆனால் இது சாத்தியமே இல்லாதது தான் சர்வதேச டிரைவிங் லைசென்ஸ் என்பது ஒரு இந்திய குடிமகன் இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு சென்று அங்கு வாகனத்தை ஓட்டும் போது அவர் அந்நாட்டு விதிமுறைகளின் கீழ் வாகனத்தை ஓட்ட வேண்டும். இது ஏதோ வெளிநாட்டு அரசு வந்து வழங்கும் உரிமம் கிடையாது.
இந்த உரிமத்தை இந்திய அரசு தான் சர்வதேச ஓட்டுனர் உரிமம் என்ற தனி ஓட்டுனர் உரிமத்தை வழங்குகிறது. இந்த சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை பெற செல்லத் தக்க இந்திய ஓட்டுனர் உரிமம் இருக்க வேண்டும். இது இருந்தால்தான் சர்வதேச ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பமே செய்ய முடியும்.
அதனால் டிடிஎஃப் கூறுவது போல் இவர் சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை எடுத்துவிட்டு பைக் ஓட்டிவிடலாம் என்ற பேச்சு நடைமுறைக்கு உதவாது. இவரால் சர்வதேச ஓட்டுனர் உரிமம் எடுக்க முடியாது. ஆனால் ஆனால் இவரது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும். அதற்கான உரிமை இவருக்கு இருக்கிறது. ஆனால் இவர் மேல்முறையீடு செய்யும் போது அதை விசாரித்த பின்னரே இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டூ-வீலர் வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் இந்திய மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றி தான் சாலையில் வாகனம் ஓட்ட வேண்டும். இதை மீறினால் விபத்து ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இதனால் டிடிஎஃப் வாசன் போன்ற நபர்கள் செய்யும் விஷயங்களை உதாரணமாக எடுத்துக் கொண்டு நீங்களும் அதை முயற்சி செய்ய வேண்டாம்.


Click it and Unblock the Notifications
