இந்தியால பெட்ரோல் விலை ஒரே அடியா லிட்டருக்கு 30 ரூபாய் ஏற போகுதா! வண்டில இப்பவே டேங்க்கை ஃபுல் பண்ணீருங்க!
உலகில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசலின் (Diesel) மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை (Crude Oil) அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் மட்டும் இந்தியா 232.5 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது.
இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் பயன்பாட்டில் இது 87.70 சதவீதம் ஆகும். அதாவது கச்சா எண்ணெய் தேவையில் 87.70 சதவீதம் அளவிற்கு இந்தியா இறக்குமதியை மட்டுமே நம்பியுள்ளது. வரும் காலங்களில் இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை இன்னும் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதே இதற்கு காரணம். இப்படிப்பட்ட சூழலில், இஸ்ரேல் - ஈரான் போர் (Israel - Iran War), நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருவது இந்தியாவிற்கு மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக, ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை (Price), கடந்த சனிக்கிழமை (ஜூன் 14), 78 அமெரிக்க டாலர்களாக உயர்ந்தது. இது கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவிற்கான உச்சம் ஆகும். ஈரானில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 15-20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் இஸ்ரேல் உடன் தற்போது நடைபெற்று வரும் போர் காரணமாக, ஈரான் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை பாதியாக குறைத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வரும் நாட்களில் ஈரானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் அளவு குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
இது நடந்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மேலும் உயரும். ஒருவேளை ஓபெக் (OPEC - Organization Of The Petroleum Exporting Countries) கூட்டமைப்பு, கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தால், ஈரான் மூலம் ஏற்படும் இழப்பை ஈடுகட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ஓபெக் கூட்டமைப்பு, கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவில்லை என்றால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 90-130 அமெரிக்க டாலர்கள் வரை உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது நடந்து விட்டால், உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயரலாம்.
இந்தியாவை பொறுத்தவரையில் தற்போதே பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில்தான் உள்ளது. தமிழக தலைநகர் சென்னையில் (Chennai), இன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 100.80 ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் ஒரு லிட்டர் டீசல் 92.39 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி கொண்டுள்ளது.
ஒருவேளை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 130 அமெரிக்க டாலர்கள் என்ற உச்ச நிலையை எட்டினால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 10-30 ரூபாய் வரை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு உயரும்? என்பதை துல்லியமாக கணிப்பது சவாலானது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கியுள்ளதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விடும் என்ற அச்சம் வாகன உரிமையாளர்களை சூழ்ந்துள்ளது. எனவே வாகன ஓட்டிகள் நிறைய பேர் தற்போதே தங்கள் வாகனங்களின் எரிபொருள் டேங்க்கை முழுமையாக நிரப்ப தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் காரணமாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. ஏனெனில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், அது வாகன ஓட்டிகளுக்கு மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அத்துடன் பால், காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கும் அது காரணமாக அமையும். எனவே மாற்று வழிகளில் இறக்குமதி மற்றும் வரி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வதை மத்திய அரசு தடுக்க வேண்டும். இதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க தொடங்கி விட்டதாக வெளியாகி வரும் தகவல்கள் சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளன.
இந்தியாவிற்கு அதிக அளவிலான கச்சா எண்ணெய்யை வினியோகம் செய்யும் நாடுகளில் ரஷ்யா (Russia) ஒன்றாக உள்ளது. ஒருவேளை இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக, கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டால், மாற்று வழியாக ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








