பெட்ரோல், டீசலுக்கு குட்பை... தண்ணீரில் இயங்கும் கார் எஞ்சின்... எஞ்சினியர்கள் அசத்தல்
பெட்ரோல், டீசல் இல்லாமல் தண்ணீரை எரிபொருளாக கொண்டு இயங்கும் புதிய கார் எஞ்சினை எஞ்சினியர்கள் உருவாக்கி இருக்கின்றனர்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களுக்கான மாற்று எரிபொருளை உருவாக்குவதில் ஆட்டோமொபைல் துறையினர் மிக தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். எரிபொருளானது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மட்டுமின்றி, அது மலிவு விலையில் எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் இருக்க வேண்டும் என்பது மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.

பேட்டரியில் இயங்கும் மின்சார கார்கள் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் கார்கள்தான் சிறந்த மாற்றுத் தீர்வாக இப்போது கருதப்படுகிறது. ஆனால், பெட்ரோல், டீசல் கார்களை ஒப்பிடுகையில் விலை இருமடங்கு கூடுதலாக இருப்பது இதன் மிகப்பெரிய பாதக அம்சமாகவும், கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு கால அவகாசமும் தேவைப்படுகிறது.

இந்த நிலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மலிவு விலையில் எரிபொருளை கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்காவில் உள்ள மேமான் ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேலை சேர்ந்த யெசுடா ஷ்மியூலி (81) என்ற மெக்கானிக் துவங்கிய இந்த நிறுவனம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி அருகே செயல்பட்டு வருகிறது.

இவர் தனது மகன்கள் ஐதன் மற்றும் டோரன் ஆகியோர் துணையுடன் தற்போது இந்த சிறிய ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். மேலும், ஜோ நகாஷ், யெடியா யாரி, மால்கம் ஹோனிலெயின் உள்ளிட்ட பலரின் உதவியுடன் இந்த நிறுவனத்தை யெசுடா நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், மேமான் நிறுவனத்தின் தீவிர ஆராய்ச்சியின் பலனாக பிஸ்டனில் இயங்கும் கார் எஞ்சினில் குறிப்பிட்ட மாறுதல்களுடன் தண்ணீர் மற்றும் எத்தனால் அல்லது வேறு எந்த வகை ஆல்கஹால் கலவையிலான எரிபொருளில் இயங்கும் வகையில் மாற்றி அசத்தியுள்ளனர்.
இந்த பிஸ்டன் கார் எஞ்சின் 70 சதவீதம் தண்ணீர் மற்றும் 30 சதவீதம் ஆல்கஹால் கலவையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய எஞ்சின் தொழில்நுட்பத்தின் மூலமாக கார் மட்டுமின்றி, பெரிய டிரக்குகள், ரயில் எஞ்சின்கள், கப்பல்கள், விமானங்களை கூட இயக்க முடியும் என்று மேமான் நிறுவனத்தின் யெசுடாவும் அவரது மகன்களும் தெரிவிக்கின்றனர்.

இந்த நிறுவனத்தின் தலைவராக செயல்படும் ஐதன் ஷ்மியூலி கூறுகையில்,"எனது தந்தை இஸ்ரேலில் இருந்தபோது சிறு வயதில் எண்ணெய் எரிபொருளால் ஏற்படும் போர் மற்றும் அதற்கான தட்டுப்பாடு குறித்து மிகுந்த கவலை கொண்டார். இதற்கான தீர்வு காணும் முனைப்பிலும் ஈடுபட்டார்.

அமெரிக்காவில் குடியேறிய பிறகு பிரிண்டிங் தொழிலில் ஈடுபட்டார். ஆனால், அவருக்குள் இருந்த மாற்று எரிபொருள் குறித்த தாகம் காரணமாக, இந்த ஆராய்ச்சி நிறுவனத்தை துவங்கினார். தண்ணீரில் உள்ள ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்துவது குறித்த ஆய்வில் ஈடுபட்டு தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளோம்," என்று கூறியுள்ளார்.

இஸ்ரேலில் உள்ள பிரபலமான டெக்னியான் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் யெசுடா பயின்றதுடன், ஜீப் உற்பத்தி பிரிவிலும் பணிபுரிந்துள்ளார். இந்த அனுபவத்தை வைத்துதான் தற்போது இந்த கார் தொழில்நுட்பத்தை தனது மகன்களுடன் சேர்ந்து உருவாக்கி இருக்கிறார்.

தண்ணீர் மற்றும் ஆல்கஹால் கலவையை எரிபொருளாக கொண்டு இயங்கும் இந்த எஞ்சின் மிக அதிக டார்க் மற்றும் பவரை வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது. மேலும், எரிபொருள் சிக்கனம் மிகுந்ததாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
முதல் கட்டமாக டீசல் எஞ்சின்களுக்கு மாற்றாக இந்த புதிய எரிபொருள் எஞ்சினை மாற்றாக நிலைநிறுத்த முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாக ஷ்மியூலி தெரிவித்துள்ளார். ஏனெனில், பெரிய வகை டிரக்குகள், ஜெனரேட்டர்கள் மற்றும் கனரக எந்திரங்களில் பயன்படுத்தப்படும் டீசல் எஞ்சின்களுக்கு நிகரான திறனை பேட்டரியில் இயங்கும் மின்சார மோட்டார்கள் வழங்க இயலாது. அந்த குறையை எங்களது புதிய எஞ்சின் தீர்க்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

எங்களது புதிய எரிபொருள் மூலமாக பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் சல்ஃபர் ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு உள்ளிட்ட நச்சுப் புகைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். எங்களது தொழில்நுட்பம் முழுமையாக சோதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காப்புரிமை மூலமாக பாதுகாப்பு பெற இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக பல முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகள் மேமான் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளனர். இந்த நிலையில், மேலும் பல முதலீட்டாளர்கள் இந்த திட்டத்தில் இணைய வேண்டும் என்று மேமான் நிறுவனத்தின் ஸ்தாபகர் யெசுடா விருப்பம் தெரிவித்துள்ளார்.
Source: jpost

இந்த தொழில்நுட்பத்தை போன்றே, நம் திருச்சியை சேர்ந்த ஒருவர் தண்ணீரில் ஓடும் பைக்கை கண்டுபிடித்து சாதித்துள்ளார். அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

திருச்சி மாவட்டம், கருமண்டபம் பகுதியில் உள்ள மாருதி நகரைச் சேர்ந்த லக்ஷ்மணன், என்பவர்தான் இந்த தண்ணீரில் ஓடும் பைக்கைக் கண்டுபிடித்துள்ளார். தண்ணீர் என்பது ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய மூலக்கூறுகளால் இணைந்தது. ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்த முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, ஆகையால் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை மட்டும் பிரித்து எடுத்து அதில் வாகனத்தை இயக்க வைக்கும் முயற்சியில் லக்ஷ்மணன் ஈடுபட்டார்.

எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான இவர் சிறு வயதிலிருந்தே புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொண்டவர். இதன்காரணமாக, பைக் மெக்கானிஸம் மற்றும் ஆட்டோ மொபைல் துறையில் டிப்ளமோ கோர்ஷை முடித்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அவரது நீண்ட நாள் கனவு திட்டமான தண்ணீரில் ஓடும் பைக்கைக் கண்டுபிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

தண்ணீரில் ஓடும் பைக் மூலம் அந்த பகுதியை வளம் வரும் லக்ஷ்மணன் இதுகுறித்து கூறியதாவது, "ஒரு லிட்டர் தண்ணீரில் கெமிக்கல் ஊற்றப்பட்டு, ஹைட்ரஜன் தனியாக ஆக்ஸிஜன் தனியாகப் பிரித்து எடுக்கப்படுகிறது. பின்னர், பிரித்தெடுக்கப்பட்ட ஹைட்ரஜன் மூலம் கரண்ட் உருவாக்கப்படுகிறது. இதற்காகவே பிரத்யேமாக உருவாக்கப்ட்ட எஞ்ஜினை இந்த மின்சாரத்தைக் கொண்டு இயக்கப்படுகின்றது.

இந்த திட்டத்துக்காக கடந்த பதிமூன்று ஆண்டுகளாக நான் பணியாற்றி வருகிறேன். 1996ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் நீண்ட ஆய்வுக்குப் பின் தற்போது தான் வெற்றியடைந்துள்ளது. இந்த தண்ணீரில் இயங்கும் சைக்கிள் குறித்து ஆராய்ச்சி செய்யவே, ஆட்டோ மொபைல்ஸ், மெக்கானிஸம் ஆகிய டிப்ளமோ படிப்புகளைக் கற்று இந்த சைக்கிளை கண்டுபிடித்துள்ளேன்" என்றார்.

வெளிநாடுகளில் செய்யப்படும் பிரபலமாவது போன்று, லஷ்மணன் போன்ற இந்தியர்களின் புதுமையான கண்டுபிடிப்புகள் வெளியுலகிற்கு வருவது கடினமாக இருக்கிறது. அப்படி வந்தாலும், அதற்கு அங்கீகாரம் பெறுவதில் பல்வேறு முட்டுக்கட்டைகள் இருக்கின்றன. இதுபோன்ற கண்டுபிடிப்புகளுக்கு அரசு ஊக்கம் அளித்து மேம்படுத்துவதற்கும், நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதற்கு அங்கீகாரம் அளித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் முக்கியத்தும் அளிக்க வேண்டும் என்பதே எல்லோரது விருப்பமாக உள்ளது.
Source: News18 Tamilnadu


Click it and Unblock the Notifications








