போரில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு தண்ணி காட்டிய இஸ்ரேல் நபர்!! ஜேம்ஸ் பாண்ட் படங்கள் தோற்றுப்போகும்!
இஸ்ரேல், பாலஸ்தீனர்கள் இடையே கடுமையான போர் நிலவி வருகிறது. இந்த போரின் போது, துப்பாக்கி குண்டுகளில் இருந்து தன்னை டெஸ்லா கார் தான் காப்பாற்றியதாக இஸ்ரேலை சேர்ந்த ஒருவர் பிரம்மிப்புடன் கூறியுள்ளார். இந்த நிகழ்வை அறிந்த டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் தனது கருத்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பல காலமாக புகைந்து வந்த இஸ்ரேல் - பாலஸ்தீனர்கள் இடையேயான போர் கடந்த சில வாரங்களாக மோதல்களாக உருவெடுத்துள்ளது. இதனால், இஸ்ரேல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி சூடுகள் மற்றும் வெடிக்குண்டு தாக்குதல்களால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், போரின் போது தன்னை தனது டெஸ்லா எலக்ட்ரிக் கார் துப்பாக்கி குண்டுகளில் இருந்து காப்பாற்றியதாக இஸ்ரேலை சேர்ந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் பயங்கரவாதி இயக்கத்தின் துப்பாக்கி குண்டுகளில் இருந்து தப்பித்துள்ள இந்த நபர் மயிரிழையில் உயிர் பிழைத்துள்ளார். இஸ்ரேல் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கிபுட்ஸ் மெஃபால்சிம் பகுதியை சேர்ந்தவரான இந்த நபர், எப்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த போகிறார்களோ என்கிற பயத்துடன் தனது டெஸ்லா மாடல் 3 பெர்ஃபார்மன்ஸ் காரில் சாலையில் சென்றுக் கொண்டிருந்துள்ளார்.
அவர் எதிர்பார்த்ததை போல், ஹமாஸ் பயங்கரவாதிகள் காருக்குள் இருந்த அந்த இஸ்ரேல் நபரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அவர்களின் குறி மொத்தமும் காரின் முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் இருந்துள்ளது. துப்பாக்கி குண்டுகளின் மூலம் காரின் முன்பக்கத்தில் இருக்கும் என்ஜினை மற்றும் காருக்குள் பின்னால் இருக்கும் பெட்ரோல்/ டீசல் டேங்கை சேதமடைய செய்ய வேண்டும் என்பதுதான் அந்த ஹமாஸ் பயங்கரவாதிகளின் திட்டமாக இருந்துள்ளது.

ஏனெனில், அப்போது தான் கார் இயங்காது. காருக்குள் இருப்பவர்கள் பிணைக் கைதிகளாக்கப்படுவர். துப்பாக்கி குண்டினால் பெட்ரோல்/டீசல் டேங்க் வெடித்து காரும், காருக்குள் இருப்பவர்களும் இறந்தாலும் பரவாயில்லை என்பதுதான் அந்த பயங்கரவாதிகளின் எண்ணம். ஆனால் இந்த விஷயத்தில் அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள். இது டெஸ்லா எலக்ட்ரிக் கார் என்பதை.
எலக்ட்ரிக் கார்களில் என்ஜினும் கிடையாது, பெட்ரோல்/ டீசல் டேங்கும் கிடையாது. இதனால், பயங்கரவாதிகளிடம் சிக்கிய அந்த இஸ்ரேல் நபரது டெஸ்லா கார் அத்தனை துப்பாக்கி குண்டுகளை வாங்கிய போதும் தொடர்ந்து இயங்கியுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும், பாதிப்புக்கு உள்ளான அந்த நபர் மூலமாக இஸ்ரேலின் சுதந்திர கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த டுவிட்டர் பதிவில், 530 எச்பி-க்கும் அதிகமான இயக்க ஆற்றல் மற்றும் டெஸ்லாவின் ட்யூயல் டிரைவ் தொழிற்நுட்பத்தினால் பாதிப்புக்குள்ளான நபரால், 150 எச்பி டொயோட்டா டீசல் பிக்அப் டிரக்கில் துரத்தி வந்த பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிக்க முடிந்துள்ளது. துப்பாக்கி குண்டுகளினால் டயர்கள் வெடித்த போதிலும், அவரது டெஸ்லா போதுமான ஆக்ஸலரேஷனை வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
"பஞ்சரான டயர்களுடன் நான் மணிக்கு 180கிமீ வேகத்தில் காரை ஓட்டினேன்" என பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான அந்த நபர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க், "அவர் அதை செய்ததில் மகிழ்ச்சி" என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பயங்கராவாதிகளின் ஒரு சில துப்பாக்கி குண்டுகள் காரின் உடலை துளைத்துக் கொண்டு இந்த இஸ்ரேல் நபரின் கை மற்றும் கால்களை துளைத்துள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கை, கால்களில் துப்பாக்கி குண்டுகளுடன், பஞ்சரான டயர்களை கொண்ட காரை மணிக்கு 180கிமீ வேகத்தில் ஓட்டி, பயங்கரவாதிகளின் துரத்தில் இருந்து தப்பித்து, மருத்துவமனையை தானாக அடைந்து சிகிச்சை பெற்று வருவது எல்லாம் சாதாரண காரியம் அல்ல. நிச்சயமாக இந்த நிகழ்வை இந்த இஸ்ரேல் நபர் அவரது வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டார். இந்த சம்பவத்தில் நாம் டெஸ்லா காரின் தரத்தையும் பாராட்டியாக வேண்டும்.


Click it and Unblock the Notifications
