இன்னும் ஒரே மாசம் தான் இஸ்ரோ புது சாதனை பண்ண போகுது! விண்ணில் பாய்கிறது புதிய ராக்கெட்!
இஸ்ரோ விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான சோதனைக்காக அடுத்த அக்டோபர் மாதம் ஒரு ராக்கெட் ஏவுதலை நடத்த முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் திட்டத்திற்காக நடத்தப்படும் இரண்டு சோதனைகளில் இது முதல் சோதனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக சந்திரயான் 3, ஆதித்யா எல்1 என அடுத்தடுத்து நிலவு மற்றும் சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்கலன்களை அனுப்பி வெற்றிகரமான ராக்கெட் ஏவுதல்களை எல்லாம் நடத்தியுள்ளது. இதையடுத்து உலக அரங்கில் இஸ்ரோவின் பக்கம் விஞ்ஞானிகளின் பார்வை எல்லாம் திரும்பி உள்ளது.

சந்திரயான் 3 திட்டத்தில் இஸ்ரோ உலக நாடுகளில் வேறு எந்த நாடும் சாதிக்க முடியாத அளவிற்கு நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக லேண்டரை தரையிறக்கி சாதனை படைத்தது. இந்த சந்திரயான் 3 திட்டம் இன்னும் நிறைவடையவில்லை. இதற்கான சோதனை தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. தற்போது உறக்கத்தில் இருக்கும் லேண்டர் மற்றும் ரோவர் விரைவில் விழித்து மீண்டும் தனது பணிகளை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் ஆதித்யா எல்1 விண்கலம் தொடர்ந்து சூரியனை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் சென்று சூரியனை ஆய்வு செய்து பூமிக்கு தரவுகளை அனுப்பவுள்ளது. சுமார் 4 மாதமாக இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதத்திற்குள் இந்த விண்கலம் எல்1 என்ற தளத்தை அடைந்து அங்கிருந்து தனது ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இஸ்ரோ தனது அடுத்த கட்ட சாதனைக்கு தயாராகி விட்டது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் தற்போது இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி மூன்று விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு அங்கு அவர்கள் 3 நாட்கள் சோதனைகள் நடத்தி பின்பு பத்திரமாக பூமிக்கு திரும்பிய வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி விண்வெளிக்கு இஸ்ரோ மனிதர்களை அனுப்பினால் இதுதான் முதல்முறையாக இருக்கும். இதனால் இந்த திட்டம் எந்த வகையிலும் தோல்வி அடையாமல் இருக்க விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முன்பு இரண்டு முறை சோதனையாக மனிதர்கள் இல்லாத ஏவுதலை நடத்தி பார்க்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
அதில் ஒரு ஏவுதலில் மனிதர்களைப் போல ரோபோக்களை அனுப்பி அவை மனிதர்கள் செய்யும் ஆய்வுகளை எல்லாம் செய்து மீண்டும் பத்திரமாக பூமிக்கு திரும்பி வருகிறதா என சோதனை செய்ய உள்ளனர். முதல் சோதனையில் வெறும் ராக்கெட் மட்டும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து அவை பத்திரமாக மீண்டும் பூமிக்கு வருகிறதா என சோதனை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இஸ்ரோ இந்த சோதனையை அடுத்த மாதம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. வரும் அக்டோபர் மாதம் ககன்யான் திட்டத்திற்கான முதல் சோதனை ஏவுதல் நடைபெறும் என பரவலாக பேசப்படுகிறது. இது துவங்கிவிட்டால் அடுத்த 2024 ஆம் ஆண்டில் இரண்டாம் கட்ட சோதனையும் 2024ம் ஆண்டு இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் முயற்சியும் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
திட்டத்தின் படி இஸ்ரோ பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்திற்கு சென்று அங்கு மூன்று நாட்கள் அதன் கேப்சூலை நிலை நிறுத்தி அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு பின்னர் அவர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்புவது தான் இந்தத் திட்டத்தின் தலையான நோக்கமாக இருக்கிறது. இது ஒன்றும் அவ்வளவு சாதாரண காரியம் அல்ல மனிதர்கள் விண்வெளிக்கு செல்லும் போது பாதுகாப்பு நிறைந்ததாக இருக்க வேண்டும்.
இதற்காக தற்போது உள்ள ராக்கெட் டிசைன்கள் சில மாற்றங்களை செய்து ராக்கெட் லாஞ்சின் போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக தப்பிக்க எஸ்கேப் கேப்சூளூம் தனியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் விண்வெளியில் இருக்கும் போது தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எப்படியான நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என பல்வேறு பயிற்சிகள் அளிக்க பெங்களூருவிலும் வெளிநாட்டிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா இந்த ககன்யான் திட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றால் உலக அரங்கில் விண்வெளி ஆய்வில் உள்ள மற்ற விண்வெளி ஆய்வு மையங்களை போல இஸ்ரோவும் சிறந்த விண்வெளி ஆய்வு மையமாக உலகில் மாறும் இதைத்தான் தற்போது எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த திட்டத்திற்காக மத்திய அரசு சுமார் 9000 கோடி ரூபாய் பணத்தை செலவு செய்ய தயாராக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பல்வேறு சாதனைகளை தொடர்ந்து படைத்துக் கொண்டே வருகிறது. அந்த வழியில் தற்போது அகநான்திட்டத்திற்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். இந்த திட்டமும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என சர்வதேசாரங்கள் பேசப்பட்டு வருகிறது இதற்காக நாம் சில காலம் காத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications