இனி வீட்டு கொல்லபுறத்துக்கு போற மாதிரி அடிக்கடி விண்வெளிக்கு போயிட்டு வரப்போறாங்க! இஸ்ரோவின் புதிய சாதனை!
இஸ்ரோ இன்று முற்றிலும் மறு பயன்பாட்டிற்கு ஏற்ற புஷ்பக் என்ற ராக்கெட்டை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடந்த இந்த சோதனையால் இனி இந்தியாவால் மிகக் குறைந்த செலவில் விண்வெளிக்கு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தற்போது பல்வேறு விதமான ஆய்வுகளை செய்து வருகிறது. இதில் முக்கியமானதாக வரும் 2035-ம் ஆண்டு இந்தியாவுக்கான பிரத்தியேக விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இப்படியாக விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கப்பட்டால் இந்தியாவில் இருந்து அடிக்கடி அந்த விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று வர வேண்டிய தேவை இருக்கிறது.

தற்போது இந்தியாவில் ஒவ்வொரு முறை விண்வெளிக்கு செல்லும் போதும் ஒவ்வொரு ராக்கெட்டை தனியாக தயாரித்து அதை விண்வெளிக்கு அனுப்ப வேண்டிய தேவை இருக்கிறது. இந்நிலையில் இஸ்ரோ இந்த பிரச்சினையை சரி செய்வதற்காக மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை தயாரிக்க முடிவு செய்தது. அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் இது போன்ற ராக்கெட்டுகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் இஸ்ரோவும் இது போன்ற ராக்கெட்டை செய்வதற்காக பணியை துவங்கியது. இந்த ராக்கெடிற்கு புஷ்பக் என்ற பெயரும் வைத்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் லேண்டிங் செய்து சோதனை செய்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் இரண்டாம் கட்ட சோதனையை செய்துள்ளனர். முதற்கட்ட சோதனையில் வெறும் லேண்டிங் மட்டுமே சோதனையாக செய்யப்பட்டது.

ஆனால் இன்று நடந்த சோதனையில் காலை 7 மணிக்கு இந்த புஷ்பக் ராக்கெட் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் பூமியிலிருந்து சுமார் 4.2 கிலோமீட்டர் உயரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. திட்டமிட்டபடி இந்த ராக்கெட் குறிப்பிட்ட பொசிஷனில் இருந்து கீழே வீசப்பட்டது. அதன் பின்னர் இந்த ராக்கெட்டை ஆக்டிவேட் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள் இதை பத்திரமாக அவர்கள் திட்டமிட்ட இடத்தில் லேண்ட் செய்ய முயற்சி செய்தனர்.
முதல் சோதனையிலும் இது போலவே சோதனை செய்யப்பட்டாலும் அப்பொழுது சரியான பொசிஷனில் கீழே வீசப்பட்ட ராக்கெட் எந்தவித பொசிஷன் மாறுதலும் இல்லாமல் லேண்டிங் பணியை மட்டும் செய்தது. ஆனால் இந்த முறை வேறு பொசிஷனுக்கு ராக்கெட்டை மாற்றி வீசப்பட்டது. ராக்கெட் தன்னைத்தானே மீண்டும் சரியான பொசிஷனிற்க்கு மாற்றிக்கொண்டு லேண்ட் செய்கிறதா என்பதை சோதனை செய்தனர். இந்த சோதனை வெற்றிகரமாக தற்போது முடிந்துள்ளது.

இதன்மூலம் இந்தியா மிகக் குறைந்த விலையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட் சிறிய ரக ராக்கெட்டாக மட்டுமே சோதனை முயற்சிக்காக செய்யப்பட்டுள்ளது. இதன் பெரிய வெர்ஷன் விரைவில் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது இந்தியாவில் உள்ள தொழில்நுட்பத்தின் படி அதிக விலை கொண்ட எலெக்ட்ரானிக் பாகங்களை தயாரித்து விண்வெளிக்கு அனுப்பினால் அதை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருக்கிறது. இந்த மறு பயன்பாட்டு ராக்கெட் மூலம் விண்வெளியில் உள்ள இந்தியாவிற்கு சொந்தமான அதிக விலை கொண்ட எலெக்ட்ரானிக் பாகங்களை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியை செய்ய முடியும்.
இது மட்டுமல்லாமல் இதன் மூலம் பூமியை சுற்றி வரும் சேட்டிலைட்களுக்கு எரிபொருளை கொண்டு செல்வது செயலிழந்து சேட்டிலைட்களை மீட்டு பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவது உள்ளிட்ட பணிகளையும் செய்ய முடியும் என தற்போது இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவால் விண்வெளியில் ஏற்படும் கழிவுகளின் அளவு வெகுவாக குறைக்கப்படும் எனவும் இஸ்ரோ கருத்து தெரிவித்துள்ளது.
இந்த மறு பயன்பாட்டு ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்வெளிக்கு செல்ல பயன்படுத்தும் தொகை மிக பெரிய அளவு மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் தனித்தனியாக ராக்கெட்டை வடிவமைக்க வேண்டிய தேவை இல்லை. ஒரே ராக்கெட்டை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். எரிபொருள் மட்டுமே மிகப் பெரிய செலவாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோ தயாரித்துள்ள இந்த மறு பயன்பாட்டு ராக்கெட் உள்ளே தற்போது உள்ள விண்வெளியில் ஏவுவதற்கான தொழில்நுட்பம் விண்வெளி பகுதியில் பறந்து செல்வதற்கான தொழில்நுட்பம் பூமிக்கு அருகே வந்து விமானம் போல பரப்பதற்கான தொழில்நுட்பம் தானியங்கியாக குறிப்பிட்ட இடத்தில் லேண்ட் செய்வதற்கான தொழில் நுட்பம் என அனைத்தும் உள்ளே புகுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு இஸ்ரோ பல்வேறு விதமான சாதனைகளை தொடர்ந்து செய்து கொண்டே வருகிறது. ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக சூரியனுக்கு அருகே சென்று நிலை நிறுத்தப்பட்டது முதல் ககன்யான் சோதனை வெற்றி பெற்றது வரை பல்வேறு சாதனைகளை செய்துள்ள நிலையில் இஸ்ரோவின் இந்த தொழில்நுட்பம் நிச்சயம் மிகப்பெரிய மைல் கல்லாக அமையும்.


Click it and Unblock the Notifications









