இஸ்ரோக்கு ராக்கெட் மட்டும்தான் விட தெரியும்னு நெனச்ச நாடுகளுக்கு அதிர்ச்சி! இனி இந்தியா கால்ல விழுந்தே ஆகணும்!
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை (Automobile Industry) தற்போது வெகு வேகமாக வளர்ந்து வருகிறது. உலகிலேயே அதிக கார்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. ஆனால் இன்னமும் இங்கு ஒரு சில குறைகள் இருக்கவே செய்கின்றன. கார்களுக்கான ஒரு சில உதிரி பாகங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தாக வேண்டிய கட்டாயத்தில்தான் இந்தியா உள்ளது. கார்களில் பயன்படுத்தப்படும் சென்சார்கள் இதற்கு ஒரு உதாரணம். தற்போதெல்லாம் கார்கள் முன்பு போல் இல்லை. அதிநவீனமாக மாறியுள்ளன.
இதற்கு கார்களில் பயன்படுத்தப்படும் பல்வேறு சென்சார்கள்தான் மிகவும் முக்கியமான காரணமாக உள்ளன. ஆனால் இந்த சென்சார்களை இந்தியா பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிதான் செய்து கொண்டுள்ளது. இறக்குமதி மூலம் தருவிக்கப்படுகிறது என்பதால், இந்தியா மிகவும் அதிக தொகையை செலவு செய்ய வேண்டியுள்ளது.

எனவே கார்களில் பயன்படுத்தப்படும் சென்சார்களை இந்தியாவிலேயே தயாரித்தால், செலவு வெகுவாக குறையும். இது 2 விதங்களில் நமக்கு நன்மை பயக்கும். ஒன்று இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் விலை ஓரளவிற்கு குறையும். அத்துடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால், இந்தியாவின் பொருளாதார நிலை மேம்படும்.
எனவே கார்களில் பயன்படுத்தப்படும் சென்சார்களை தயார் செய்வதற்கு, இந்தியாவின் ஆட்டோமொபைல் துறைக்கு உதவ, இஸ்ரோ (ISRO - Indian Space Research Organisation) முன்வந்துள்ளது. இஸ்ரோ தலைவரான சோம்நாத் (Somanath), கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் (Bangalore), இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பெங்களூர் தொழில்நுட்ப மாநாட்டின்போதுதான், இஸ்ரோ தலைவர் சோம்நாத் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில், ''இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான சென்சார்கள் இறக்குமதிதான் செய்யப்படுகின்றன. ஆனால் ராக்கெட்களில் பயன்படுத்தப்படும் உலகத்தரம் வாய்ந்த சென்சார்களை இஸ்ரோ முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கியுள்ளது.
இந்தியாவால் ராக்கெட்களுக்கான சென்சார்களை தயாரிக்க முடியும்போது, கார்களுக்கான சென்சார்களையும் தயாரிக்க முடியும். இந்த விஷயத்தில் இந்தியாவின் உள்நாட்டு ஆட்டோமொபைல் துறைக்கு உதவி செய்ய இஸ்ரோ தயாராக உள்ளது. இந்த திட்டத்தை முன்னெடுத்து செல்ல, ஆட்டோமொபைல் துறையுடன் விவாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம்'' என்றார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இஸ்ரோ உலகையே பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையிலான பல்வேறு விண்வெளி திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. மங்கள்யான் (Mangalyaan) மற்றும் சந்திரயான் (Chandrayaan) போன்ற திட்டங்கள் எல்லாம், இந்தியர்கள் பெருமை கொள்ள வேண்டியவை ஆகும். அப்படிப்பட்ட இஸ்ரோவின் உதவியுடன், இந்தியாவிலேயே கார்களுக்கான சென்சார்கள் தயாரிக்கப்பட்டால், நன்றாக இருக்கும்.
இது நடக்கும்பட்சத்தில், இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை, கார்களுக்கான சென்சார்களுக்காக வெளிநாடுகளை சார்ந்து இருக்கும் நிலை குறையும். அத்துடன் கார்களின் விலையும் கூட ஓரளவிற்கு குறையும் என நாம் உறுதியாக நம்பலாம். மேலும் சென்சார்களை தேவையான அளவு கையிருப்பிலும் வைத்து கொள்ள முடியும்.
பொதுவாக ஒரு ஹாலிவுட் படத்தின் பட்ஜெட்டில், மிகப்பெரிய விண்வெளி திட்டங்களை இஸ்ரோ வெற்றிகரமாக செயல்படுத்தி விடும். எனவே இஸ்ரோ சிக்கனத்திற்கும் பெயர் பெற்றது. இஸ்ரோ உதவியுடன் இந்தியாவில் குறைவான விலையில் சென்சார்கள் தயாரிக்கப்பட்டால், அவற்றை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். இது உலக அளவிலான ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் என்பது உறுதி.
இந்தியா தற்போதைய நிலையில் பெரும்பாலான கார் சென்சார்களை ஜப்பான், தென் கொரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. அத்துடன் ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிடம் இருந்தும் கார்களுக்கான சென்சார்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








