யானை படுத்தால் எலி சறுக்கி விளையாடும் என்று சொல்வார்கள்!! 90 ஆண்டுகால கார் நிறுவனத்தை கலாய்த்த எலான் மஸ்க்!
ஜாகுவார் (Jaguar), வாழ்ந்துக் கெட்ட குடும்பம் என்கிற ரேஞ்சுக்கு ஆகிவிட்டது. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் கார் பிராண்ட் என்றாலே ரோல்ஸ்-ராய்ஸுக்கு அடுத்து எல்லாருக்கும் ஞாபகம் வருவது ஜாகுவாரை தான். அந்த அளவிற்கு புகழ்பெற்ற நிலையில் இருந்த ஜாகுவார் இன்று கிட்டத்தட்ட திவாலாகும் நிலையில் உள்ளது. புதிய கார்கள் எதுவும் பெரியதாக ஜாகுவாரில் இருந்து விற்பனைக்கு வருவதுபோல் தெரியவில்லை. இதனால் இன்றைய கால தலைமுறையினர் பலருக்கு ஜாகுவார் என்கிற கார் பிராண்டையே மறந்து போகும் அளவிற்கு சமீப காலமாக இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் உள்ளன. இந்த நிலையில், தற்போது அதிரடியான ஒரு நடவடிக்கையில் ஜாகுவார் இறங்கியுள்ளது.
ஆனால் என்ன செய்வது... அதுவும் தற்போது மக்கள் மத்தியில் கேலி, கிண்டல்களுக்கு உள்ளகி உள்ளது. டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் வரையில் ஜாகுவாரை கலாய்த்துள்ளனர். இதற்கு ஜாகுவாரும் சளைக்காமல் தனது பதிலை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறது. என்ன நடந்தது? வாருங்கள் அதனை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

இங்கிலாந்தின் கோவண்ட்ரி பகுதியில் 1935ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கார் நிறுவனம், ஜாகுவார் ஆகும். ஆரம்பத்தில் எஸ்.எஸ் கார்ஸ் என அழைக்கப்பட்டு வந்த நிலையில், 10 வருடங்கள் கழித்து அதாவது 1945ஆம் ஆண்டில் ஜாகுவார் கார்ஸ் என நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டது. 'ஜாகுவார்' இந்த பெயருக்காகவும், ஜாகுவார் விலங்கு பாய்வது போல் அமைந்த நிறுவனத்தின் லோகோவுக்காகவும் தான் ஜாகுவார் கார்கள் உலகம் முழுவதும் பிரபலமாகின.
இருப்பினும், இது எல்லாம் 2012ஆம் ஆண்டு வரையில்தான். 2013 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து மற்றொரு பிரிட்டிஷ் கார் நிறுவனமான லேண்ட் ரோவர் உடன் ஜாகுவார் கூட்டணி சேர்ந்தது. இதனால் தற்போது ஜாகுவார் லேண்ட் ரோவர் என்றே இந்த நிறுவனத்தை அழைக்கின்றனர். லேண்ட் ரோவர் நிறுவனமாவது பரவாயில்லை, அதன் ரேஞ்ச் ரோவர் மற்றும் டிஃபெண்டர் கார்கள் மூலமாக ஓரளவிற்கு சிறப்பான வணிகத்தை செய்து வருகிறது.
ஆனால், ஜாகுவாரின் விற்பனை பெரிய அளவில் சரிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான், கடந்த நவம்பர் 19ஆம் தேதி வரலாற்றில் மிக முக்கியமான முடிவை ஜாகுவார் எடுத்தது. கிட்டத்தட்ட 90 ஆண்டுகால பழமையான நிறுவனத்தின் லோகோ மற்றும் பிராண்ட் தத்துவத்தை மாற்றியுள்ளனர். எலக்ட்ரிக் கார்களுக்கு மாறுவதில் தீவிரமாக உள்ள வெளிநாட்டு கார் நிறுவனங்களுள் ஜாகுவாரும் ஒன்றாகும்.
இதற்கான வேலைகளில் ஏற்கனவே ஈடுப்பட ஆரம்பித்துவிட்ட ஜாகுவார், அதன் ஒருபகுதியாகவே தற்போது நிறுவனத்தின் முக்கியமான அடையாளங்களை மாற்றி கொண்டுள்ளது. முக்கியமாக, நிறுவனத்தின் லோகோவில் இருந்த ஜாகுவார் விலங்கை நீக்கி உள்ளனர். ஏற்கனவே கூறியதுபோல், ஜாகுவார் நிறுவனத்தின் அடையாளமே இந்த விலங்கு தான். அதையே நீக்கிய பிறகு ஜாகுவார் நிறுவனத்தின் மீது பலத்தரப்பட்ட விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.
எக்ஸ் தளத்தில், புதிய லோகோவையும், பிராண்ட் தத்துவத்தையும் வெளிக்காட்டும் வகையில் ஜாகுவார் வெளியிட்டுள்ள வீடியோவிற்கு கிண்டல் செய்யும் வகையில் பலர் பல்வேறு விதமான கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். ஜாகுவார் நிறுவனத்தின் புதிய பிராண்ட் தத்துவமாக, "மிகுந்த நவீனத்துவம்: எதையும் காப்பி அடிக்காதீர்கள்" என்பது மாற்றப்பட்டுள்ளது. இதனை வெளிக்காட்டும் ஜாகுவாரின் டீசர் வீடியோவில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் யாவும் கண்ணை கவரும் வண்ணங்களில் உள்ளன.
வீடியோவில் கார் எதுவும் காட்டப்படவில்லை என்பதால், உண்மையில் இது கார் நிறுவனத்தின் விளம்பர வீடியோ தானா? என பலரும் கிண்டல் செய்துள்ளனர். டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க், "இன்னும் நீங்கள் கார்களை உற்பத்தி செய்கிறீர்களா?" என கிண்டலாக கேட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவின் மியாமியில் டிசம்பர் 2ஆம் தேதி கண்காட்சியில் தங்களது புதிய கார்களை காட்சிக்கு நிறுத்த உள்ளதாக ஜாகுவார் அதன் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிராண்ட் தத்துவத்தை ஜாகுவார் மாற்றியது ஒன்றும் தவறில்லை. ஏனெனில் காலத்திற்கு ஏற்ப செயல்படுவது வியாபாரத்தில் முக்கியமாகும். ஆனால், நிறுவனத்தின் அடையாளமான லோகோவை மாற்றியது தவறாகும். ஏற்கனவே இருந்த லோகோவை காட்டிலும் அசத்தலான லோகோவை கொண்டுவந்திருந்தால், இத்தனை கேலி, கிண்டல்களுக்கு ஜாகுவார் ஆளாகியிருக்காது. ஆனால், முன்பு இருந்ததை விட லோகோவை ஜாகுவார் எளிமையாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications








