இரண்டு வீலில் பறந்த ஜாகுவார்... பார்ப்போரை அச்சத்தில் உறைய வைத்த சாகசம்..

Written By: Krishna

ஜாகுவார் கார் சாலையில் சென்றாலே, அதன் மீதுதான் அனைவரது பார்வையும் இருக்கும். சாலையில் செல்வோரின் கண்களை எல்லாம் ஒரு நிமிடம் ஆடாமல், அசையாமல் அப்படியே நிலை நிறுத்திப் பார்க்க வைத்து விடும் வசீகர ஆற்றல் ஜாகுவார் மாடல் கார்களுக்கு உண்டு.

சும்மாவே அப்படியென்றால், அந்தக் காரில் மயிர் கூச்செரியும் சாகசங்களை நடத்திக் காட்டினால் எப்படியிருக்கும்? வியப்பின் விளிம்புக்கே சென்று விடுவோம் நாம்.

ஜாகுவார் கார்

அப்படி ஒரு வித்தை ஜாகுவார் எஃப் பேஸ் காரில் அண்மையில் நடத்திக் காட்டப்பட்டது. பிரிட்டனில் நடைபெற்ற குட்வுட் ஆட்டோ ஸ்பீடு திருவிழாவில்தான் இந்த அதிசயக் காட்சி அரங்கேறியது.

பார்ப்பவர்கள் அனைவருக்கும் படு த்ரில்லான ஒரு அனுபவத்தைக் கொடுத்தது இந்த ஷோ. பிரபல கார் ஸ்டன்ட் டிரைவர் டெர்ரி கிராண்ட் வண்டியை ஓட்டினார். அவருடன் அமர்ந்து வந்தது புகழ்பெற்ற டூவிலர் ஸ்டன்ட் ஆர்டிஸ்ட் லீ போவர். முதலில் இருவரும் சாதாரணமாகத்தான் வண்டிக்குள் அமர்ந்திருந்தனர்.

ஜாகுவார் சாகசம்

அடுத்த சில நிமிடங்களில் ஜாகுவார் எஃப் பேஸ் காரின் இரு வீல்கள் தரையில் இல்லாமல் ஆகாயத்தில் மிதந்து வந்தது. ஆமாங்க... வெறும் இரண்டு வீல்களில் காரை இயக்கி சாகசம் காட்டப்பட்டது.

வாவ் என பார்ப்பவர்கள் புருவத்தை உயர்த்தத் தொடங்கிய அடுத்த நிமிடமே இன்னொரு ஆச்சரியத்தை நடத்திக் காட்டினார் லீ போவார். இருக்கையை விட்டு எழுந்து காரின் பக்கவாட்டின் மேல் ஏறி நின்றார் அவர். இரு வீல்களில் பயணம், காரின் மேல் நின்று சாகசம் என மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு வித்தையைக் காட்டினார்கள் அவர்கள் இருவரும்.

எல்லாவற்றுக்கும் உச்சமாக, மேலே நின்று கொண்டிருந்த லீ போவர், திடீரென காரின் மேல் தலைகீழாக நிற்கத் தொடங்கினார். அப்போது ஜாகுவார் எஃப் பேஸ் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில், பார்ப்பவர்களை அச்சத்தில் உறைய வைக்கும் காட்சியை நிகழ்த்தி காட்டினார் லீ போவர்.

ஸ்டன்ட் ஷோ முடிந்து நான்கு வீல்களில் கார் ஓடத் தொடங்கிய பிறகுதான் அனைவருக்கும் நிம்மதி பெருமூச்சு வந்தது. செம த்ரில்லான அனுபவத்தை தந்த அவர்கள் இருவரோ, மிகக் கூலாக காரை விட்டு இறங்கியதுதான் அதைவிடப் பெரிய ஆச்சரியம்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Jaguar F-Pace Two Wheel Act Leaves People Thrilled At Goodwood.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark