ரயில் டிக்கெட் எடுக்க இனி பணம் கொடுக்க வேண்டாம் செல்போனில் ஸ்கேன் செய்தால் போதும்
ரயில் நிலையங்களில் முன்பதிவில்லாத டிக்கெட்களை பெறப் பணம் கொடுக்க தேவையில்லை. டிக்கெட் வெண்டிங் மிஷினில் க்யூஆர்கோடு மூலம் பணம் கட்டும் வசதி சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் கீழே காணலாம்.

இந்தியாவில் போக்குவரத்து வசதிகளில் ரயில் போக்குவரத்து என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ரயிலில் தான் வசதியாகவும், சொகுசாகவும் குறைந்த விலையில் பயணிக்க முடியும். என்பதால் நீண்ட தூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.

இன்று ரயில்களில் முன்பதிவு செய்து தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கிறார்கள். முன்பதிவு செய்வதற்கு ஐஆர்சிடிசி தளம் இருக்கிறது. இந்த தளத்தில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி டிக்கெட்களை பெற முடியும். ஆனால் முன்பதிவில்லாத ரயில்களுக்கு ரயில் நிலையத்திற்குச் சென்றே டிக்கெட்களை பெற முடியும். கொரோனா காரணமாகப் பல ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் அகற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது பெரும்பாலான ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டு விட்டன.

மேலும் பாசஞ்சர் ரயில்களும் இயக்கத்தைத் துவங்கிவிட்டது. இதனால் முன்பதிவில்லாத டிக்கெட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் முன்பதிவில்லாத டிக்கெட் மற்றும் பிளாட்பார டிக்கெட்களை வழங்க டிக்கெட் கவுண்டர் மட்டுமல்லாமல் பெரும்பாலான ரயில் நிலையங்களில் டிக்கெட் வெண்டிங் மிஷின் உள்ளது.

அனைத்து வெண்டிங் மிஷின்களுக்கு அருகிலும் ஒரு ஆப்ரேட்டர் இருப்பார். மக்கள் அவரிடம் சென்று தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு டிக்கெட் கேட்டால் அவர் அந்த வெண்டிங் மிஷினை பயன்படுத்தி நமக்கு வேண்டிய டிக்கெட்டை எடுத்துக் கொடுப்பார்.

அதற்கான பணத்தை அவரிடம் பணமாகக் கொடுக்க வேண்டும். இப்படியாக முன்பதிவில்லாத பயண டிக்கெட்களை வாங்கப் பணத்தைத் தவிர வேறு வழிகள் இல்லாமல் இருந்தது டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்து முன்பதிவில்லாத டிக்கெட்களை பெற முடியாது.

இந்நிலையில் முன்பதிவில்லாத டிக்கெட்களை பெற டிஜிட்டல் முறை பரிவர்த்ததனைக்கு துவக்கமாக வடமேற்கு ரயில்வே புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் வெண்டிங் மிஷின்களில் டிக்கெட் எடுத்தவுடன் அதில் பயணிகளுக்குத் திரையில் ஒரு க்யூ ஆர் கோடு தெரியும். அதை ஏதாவது ஒரு UPI ஆப்பில் ஸ்கேன் செய்து அதன் மூலம் பணத்தைக் கட்டினால் பணம் கட்டப்பட்டவுடன் டிக்கெட் தானாக பிரிண்ட் ஆகி வெளியே வரும்.

இதற்கான சாஃப்ட்வேர்அப்கிரேடை தற்போது ஜெய்ப்பூரில் உள்ள ரயில் நிலையத்தில் மட்டும் ரயில்வே நிர்வாகம் செய்துள்ளது. இதை ஒரு சோதனை முயற்சியாகச் செய்துள்ளது. இது வெற்றிகரமாகச் செயல்படும்பட்சத்தில் இந்த சாஃப்ட்வேர் நாடுமுழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்படும். இதன் பின்பு மக்கள் செல்போனில் க்யூஆர்கோடை ஸ்கேன் செய்தே டிக்கெட்களை எடுத்துக்கொள்ள முடியும்.

இது டிக்கெட் வெண்டிங் மிஷின் இருக்கும் ரயில் நிலையங்களில் மட்டுமே சாத்தியமாகும். மற்ற ரயில் நிலையங்களில் பணம் கொடுத்தே டிக்கெட் எடுக்க வேண்டும். ஆனால் பயணிகள் மத்தியில் எப்படி முன்பதிவிற்காக செல்போன் ஆப் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடிகிறதோ அதே போல முன்பதிவில்லாத டிக்கெட்களை புக் செய்யவும் செல்போன் ஆப்களை கொண்டு வர வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் அப்படியாகத் திட்டத்தைக் கொண்டுவருவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக தொழிற்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு வந்தபோது டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும் என மத்திய அரசு சொன்னது. ஆனால் ரயில் டிக்கெட்டில் கூட இன்னும் முழுமையாக டிஜிட்டல் பரிவர்த்தனை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ரயில்வேக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை பெரும் சிக்கலாக இருக்கிறது. தற்போது ஐஆர்சிடிசி தளம் மட்டுமே பணப் பரிவர்த்தனையில் டிஜிட்டல் பணத்தைக் கையாளுகிறது.

அதே போல மாநில அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பஸ் டிக்கெட் வாங்குவதிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதில் சிக்கல் இருக்கிறது. நேரடியாகப் பணமாக மட்டுமே பரிவர்த்தனை செய்து டிக்கெட் வாங்க முடியும். இந்த பிரச்சனைகளைச் சமாளிக்கவும் போதுமான தொழிற்நுட்ப வசதிகள் இல்லை இருக்கும் தொழிற்நுட்பத்தை பயன்படுத்த நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது. ஆனால் மெட்ரோ ரயில் நிலையங்களில் கார்டுகளில் ரீசார்ஜ் செய்து பயன்படுத்தும் வசதி இருக்கிறது. பெங்களூரு மெட்ரோவில் இந்த பரிவர்த்தனை வெற்றிகரமாக நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications








