400 கிமீ வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக புல்லட் ரயில் சோதனை!
மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் திறன் படைத்த உலகின் அதிவேக புல்லட் ரயிலின் சோதனை ஜப்பானில் துவங்கப்பட்டுள்ளது.

உலகின் அதிவேக புல்லட் ரயிலை ஜப்பான் ரயில்வே உருவாக்கி இருக்கிறது. தற்போது அங்கு இயக்கப்படும் சிங்கன்சென் புல்லட் ரயிலின் அடிப்படையில்தான் இந்த புதிய புல்லட் ரயில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய புல்லட் ரயில் ஆல்ஃபா எக்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் திறன் படைத்த இந்த புதிய புல்லட் ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று துவங்கப்பட்டுள்ளது. இதுதான் உலகின் அதிவேக புல்லட் ரயில் மாடலாக குறிப்பிடப்படுகிறது.

ஆல்ஃபா எக்ஸ் புல்லட் ரயிலின் மூக்குப்பகுதி 72 அடி நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. காற்றை கிழித்துச் செல்லும் விதமாக இந்த விசேஷ வடிவமைப்பை பெற்றுள்ளது.

சீனாவின் ஃபியூஜிங் புல்லட் ரயிலுக்கு இணையான வேகத்தில் செல்லும் திறனை பெற்றிருக்கிறது ஜப்பானின் ஆல்ஃபா எக்ஸ் புல்லட் ரயில். ஆனால், சீனாவின் ஃபியூஜிங் புல்லட் ரயிலைவிட 10 கிமீ கூடுதல் வேகத்தில் செல்லும் திறனை பெற்றிருக்கிறது.
இந்த புதிய புல்லட் ரயில் சோதனை ஓட்டங்கள் முடிந்து வரும் 2030ம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. மணிக்கு 360 கிமீ வேகத்தில் இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஜப்பான் புல்லட் ரயில் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகிறது. அந்நாட்டின் சிங்கன்சென் புல்லட் ரயில் மிகவும் பாதுகாப்பான புல்லட் ரயிலாக பெயர் பெற்றிருக்கிறது. காலந்தவறாமைக்கு பெயர் பெற்ற அந்த ரயில் விபத்தில்லா சேவையையும் அளித்து வருகிறது.

அந்த வகையில், புதிய ஆல்ஃபா எக்ஸ் புல்லட் ரயிலும் ஜப்பானின் புல்லட் ரயில் தொழில்நுட்பத்தை புதிய பாதையில் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானுக்கு சளைக்காமல் சீனாவும் புல்லட் ரயில் தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே, மாக்லெவ் என்ற ரயிலை ஜப்பான் சோதித்து பார்த்தது நினைவிருக்கலாம். சக்கரங்கள் இல்லாமல் காந்தவிசை மூலமாக தண்டவாளத்தில் சில மிமீ இடைவெளியில் செல்லும் திறன் படைத்த மாக்லேவ் ரயில் மணிக்கு 600 கிமீ வேகத்தில் இயக்கி சோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications