ஜெர்மன்-இந்தியா இணைந்து இந்த பேருந்த லடாக்கிற்கு கொடுத்திருக்காங்க.. இனி ஒருவரும் பல் வலியால் துடிக்கமாட்டாங்க
லடாக்கில் உள்ள ஏழை கிராமவாசிகள் பயன்பெறும் விதமாக ஜெர்மன் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அமைப்புகள் தனித்துவமான வசதிகளைத் தாங்கிய ஓர் வாகனத்தை வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரோடரி இன்டர்நேஷனல் (ஜெர்மனி மற்றும் பெங்களூரு), சுவாமி விவேகானந்தா சேவா டிரஸ்ட் (கர்நாடகா) மற்றும் விஷன் ஹிமாலயா (லடாக்) ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்தே அந்த வாகனத்தை தயார் செய்து வழங்கி இருக்கின்றன. பார்க்க நவீன அம்சங்கள் கொண்ட கேரவன் வாகனத்தைப் போல காட்சியளிக்கும் இது ஓர் நடமாடும் பல் மருத்துவமனை ஆகும்.
பல் மருத்துவத்திற்கான அனைத்து வசதிகளையும் இந்த வாகனம் தாங்கி இருக்கும். லடாக்கின் உயரமான மலைகளில் உள்ள சிறு சிறு கிராமங்களில் வசிக்கும் ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்த வாகனத்தை சகல வசதிகளைத் தாங்கிய வாகனமாக தயார் செய்திருக்கின்றனர்.

லடாக் வாழ் மக்கள் பல் மருத்துவம் பெறுவதில் மிகப் பெரிய சிக்கலைச் சந்தித்து வந்த நிலையிலேயே இந்த வாகனம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த வாகனத்தை முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஜேசிபிஎல் லிமிடெட் வாயிலாகவே தயார் செய்திருக்கின்றனர். இவர்கள் இந்த வாகனத்தை ஹிமாச்சலின் அனைத்து விதமான சாலைகளையும் கையாளும் வகையில் தயார் செய்திருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது.
ஆகையால், மற்ற வாகனங்களால் செல்ல முடியாத இடத்திற்கும் சென்று இந்த வாகனம் பல் மருத்துவ சேவையில் ஈடுபடும் என நம்பப்படுகின்றது. ஏழைகளுக்கான நடமாடும் பல் மருத்துவமனையாக இது தயார் செய்யப்பட்டு இருந்தாலும் மிகவும் அட்வான்ஸ்டு அம்சம் தாங்கியதாகவும், உயர் ரக உள் அமைப்பைக் கொண்டதாகவும் அது காட்சியளிக்கின்றது.

ஏற்கனவே கூறியதைப் போல உச்ச நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு பயன்படுத்தப்படும் கேரவனைப் போல அது காட்சியளிக்கின்றது. அதேவேளையில், ஒரு நேரத்தில் ஒரு நோயாளிக்கு மட்டுமே சிகிச்சை வழங்கும் வகையில் இந்த வாகனம் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆனால், 2 அல்லது 3 நோயாளிகளால் ஒரே நேரத்தில் காத்திருக்க முடியும்.
பல முக்கியமான பல் சிகிச்சை பணிகளை இருந்த இடத்தில் இருந்தபடியே செய்யும் வகையில் இந்த வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒரே இடத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை இருந்து சிகிச்சைச் செய்வதற்கு என்றே இந்த வாகனத்தை தயார் செய்திருக்கின்றனர்.

இந்த வாகனத்தை மினி ஆம்புலன்ஸாகவும் அவர்கள் தயார் செய்திருக்கின்றனர். மேலும், முதலுதவி பொருட்கள், டூல் பாக்ஸ், ஆவணங்களை சேமிக்கும் அறை மற்றும் ஆம்புலன்ஸ் சைரன்கள் ஆகியவற்றை இந்த நடமாடும் பல் மருத்துவமான தாங்கியிருக்கும். இத்துடன், பயணிகள் சுலபமாக ஏறி-இறங்குவதற்கு ஏதுவாக மடிக்கும் வசதிக் கொண்ட ஏணிகளும் இந்த வாகனத்தில் வழங்கி இருக்கின்றனர்.
புராஜெக்ட் ஸ்மைல் ஹிமாலயா எனும் பெயரிலேயே இந்த வாகனத்தை அவர்கள் வழங்கி இருக்கின்றனர். மேலும், இந்த வாகனத்தில் நன்றி ஜெர்மனி என்கிற வாசகம் இடம் பெற்றிருக்கின்றது. அத்துடன், ஜெர்மன் தேசிய கொடி மற்றும் இந்திய தேசிய கொடி ஆகிய இரண்டும் அதில் இடம் பெற்றிருக்கின்றது. இந்த வாகனத்தின் முக்கிய நோக்கமே லடாக் மக்கள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதுதான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எஸ்எம்எல் பிராண்டின் பேருந்தையே ஜேசிபிஎல் நடமாடும் பல் மருத்துவமனையாக மாற்றி இருக்கின்றது. குறிப்பாக, வழக்கமான பேருந்தை லடாக்கின் மிக மோசமான சாலைகளைச் சமாளிக்கும் விதமாகவும் அது தயார் செய்திருக்கின்றது. ஆகையால், கிராமங்களை விட்டு வெளியே வர முடியாத மக்களாலும் இந்த வாகனத்தை பயன்படுத்தி தங்களுக்கான பல் மருத்துவ சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications









