பறக்கும் கார் விலை இவ்வளவு தானா? இனி ரோட்ல போற காருக்கு மவுசு குறைஞ்சிடுமே!
தனியார் நிறுவனம் ஒன்று பறக்கும் கார்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. விமான பைலட் லைசென்ஸ் இல்லாமல் யார் வேண்டுமானாலும் இந்த பறக்கும் கார்களை ஓட்ட முடியும். இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
ஒரு காலத்தில் ஃபேன்டஸி கதைகளில் மட்டும் பறக்கும் கார்களை பற்றி நாம் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் இப்படியெல்லாம் ஒரு கார் இந்த உலகில் இருக்கிறதா என்ற சந்தேகம் நமக்கு இருக்கும். ஆனால் இன்று அதைக் கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம். ஏன் என்றால் இன்று பறக்கும் கார்கள் சாத்தியம் என் நிலை வந்துவிட்டது. பல நிறுவனங்கள் வித விதமான பறக்கும் கார்களை தயாரித்துவிட்டன. ஆனால் இதுவரை பறக்கும் கார்கள் ஆய்வு அளவில் மட்டுமே இருந்தது.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெட்சன் என்ற நிறுவனம் முதன் முறையாகத் தனது பறக்கும் கார்களை விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளனர். ஜெட்சன் ஒன் என இந்த பறக்கும் காருக்கு அந்நிறுவனம் பெயர் வைத்துள்ளது. இந்த கார் அமெரிக்க டாலர் மதிப்பில் 80 ஆயிரம் டாலருக்கு விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்திய மதிப்பில் ரூ80.19 லட்சமாகும்.
இந்த பறக்கும் காரை வாங்க நினைப்பவர்கள் வெறும் 8000 அமெரிக்க டாலர் அதாவது ரூ6.5 லட்சம் மட்டும் முன்பணமாகச் செலுத்தி இந்த காரை வாங்கிக்கொள்ளலாம். மீதம் உள்ள பணத்தை இஎம்ஐ மூலம் செலுத்தினால் போதும். இந்த பறக்கும் கார் முற்றிலும் எலெக்ட்ரிக்கல் பவரில் இயங்குகிறது. பார்க்க ட்ரோன் போல இருக்கிறது. இதில் எளிதாக யார் வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பறக்கும் காரின் வடிவமைப்பு ஒரு ஹெலிகாப்டர் டிசைனை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இது வெர்டிகல் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த பறக்கும் கார் தொடர்ந்து 20 நிமிடம் பறக்கும் அளவிற்கு இதன் பேட்டரி உள்ளது. இந்த பறக்கும் கார் 2480 மிமீ நீளமும், 1500 மிமீ அகலமும் 1030 மிமீ உயரமும் கொண்டது.
பலருக்குப் பறக்கும் கார் என்றால் அதை யார் ஒட்டுவது, இதை ஓட்ட பைலட் லைசென்ஸ் எடுக்க வேண்டுமா என்ற கேள்வி வரும். இதற்கு ஜெட்சன் நிறுவனம் ஒரு விளக்கம் அளித்துள்ளது. இந்த பறக்கும் கார் வெறும் 86 கிலோ எடை கொண்டது தான். eVTOL என்ற தொழிற்நுட்பத்தில் இந்த கார் இயங்குகிறது. அமெரிக்கச் சட்டத்தின்படி இதை இயக்க பைலட் லைசென்ஸ் தேவையில்லை. ஆனால் மற்ற நாடுகளில் இதற்கான சட்டம் மாறும், அல்லது சட்டமே இல்லாமல் கூட இருக்கும். இதனால் நாடுகளை பொறுத்துத்தான் இதை இயக்குவதற்கான லைசென்ஸ் அமையும்.

இந்த பறக்கும் காரை இயங்குவது ஒன்று கம்ப சூத்திரம் கிடையாது. இதில் இரண்டு ஜாய் ஸ்டிக் இருக்கிறது. இதில் ஒன்று பறக்கும் காரின் உயரத்தை கண்ட்ரோல் செய்யும் கருவி, மற்றொரு ஜாய் ஸ்டிக் திசையை கண்ட்ரோல் செய்யும் எந்த திசை நோக்கி நகர வேண்டும் என்பதை இதில் கண்ட்ரோல்செய்யலாம். கிட்டத்தட்ட ஒரு வீடியோகேம் விளையாடு வதை போல இதை கண்ட்ரோல் செய்யலாம். இதனால் யார் வேண்டுமானாலும் இந்த பறக்கும் காரை இயக்க முடியும்.
இந்த பறக்கும் காரில் 88 கிலோவாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது பூமியிலிருந்து சுமார் 1500 அடி தூரம் வரை பறக்கும் திறன் கொண்டது. அது மட்டுமல்ல இது மணிக்கு 101 கி.மீ வேகத்தில் பறந்து செல்லும் திறனையும் கொண்டுள்ளது. இதன் லேண்டிங் வழிமுறை ஆட்டோமெட் செய்யப்பட்டுள்ளது. லைடார் என்ற சென்சார் மூலம் இதன் லேண்டின் தானியங்கிய நடக்கக்கூடியது. இது முழு பேட்டரியில் எவ்வளவு தூரம் பயணிக்கும் இந்த பேட்டரியை சார்ஜ் ஏற்ற எப்படிப்பட்ட சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எவ்வளவு நேரம் ஆகும் உள்ளிட்ட விபரங்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை.
சரி பறக்கிறோம் என்றால் அதில் ஏற்படும் ஆர்வம் போல பயமும் இருக்கும். இது நடுவானில் ஏதாவது சிக்கலில் மாட்டிக்கொண்டால் என்னவாகும் என்ற எண்ணம் நமக்குத் தோன்றும், இந்த பறக்கும் காருக்கு பாதுகாப்பு அம்சமாக ஜெட்சன் நிறுவனம் ஒரு பாலிஸ்டிக் பாராசூட்டை இதில் பொருத்தியுள்ளது. இது 20 மீட்டர் உயரத்தில் இறந்த கார் பறக்கும் போது விரிக்கப்பட்டாலும் காரை பத்திரமாகத் தரையிறக்கிவிடும்.
இது மட்டுமல்ல இந்த பறக்கும் காரில் ஹேண்ட்ஸ் ஃப்ரீ ஹோவர் ஃபங்சன் வழங்கப்பட்டுள்ளது. இறுதியாக இந்த பறக்கும் காரின் புரோபெல்லர் மோட்டார் நடுவானில் ரிப்பேர் ஆனாலும் இந்த பறக்கும் கார் தொடர்ந்து பறக்கும் எந்த விதமான விபத்தையும் ஏற்படுத்திவிடாது. பாதுகாப்பாகத் தரையிறங்கிவிட முடியும். எப்படி கார்களை பயன்படுத்துகிறோமோ அதே போல இந்த பறக்கும் கார்களையும் பயன்படுத்த முடியும்.
தற்போது ஜெட்சன் நிறுவனம் இந்த பறக்கும் கார்களுக்கான அதிகாரப்பூர்வ புக்கிங்கை துவங்கிவிட்டது. இதன் டெலிவரிஇந்தாண்டு இறுதிக்குள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த பறக்கும் காரை நூற்றுக்கணக்கில் மக்கள் புக் செய்துள்ளதாகத் தெரிகிறது. அடுத்தாண்டு அமெரிக்காவில் தனியார் பறக்கும் கார்களை காண முடியும் என எதிர்பார்க்கலாம்
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பறக்கும் கார்கள் அறிவியல் தொழிற்நுட்ப வளர்ச்சியின் ஒரு முக்கியமான மைல் கல்லாகவே பார்க்கப்படுகிறது. இது சாத்தியமாகிவிட்டால் போக்குவரத்து வழிமுறையிலேயே மிகப்பெரிய புரட்சி ஏற்படும். இந்தியா போன்ற அதிக ஜனத் தொகை கொண்ட நாடுகளில் இந்த பறக்கும் கார் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் விரைவில் இந்தியாவிலும் இதை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications









