ராணிப்பேட்டைக்கு அடித்த ரூ9000 கோடி ஜாக்பாட்! அடுத்த மாசம் அடையாளமே தெரியாம மாறப்போகுது!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பணப்பாக்கம் என்ற பகுதியில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய வாகன தயாரிப்பு ஆலையை நிறுவ முடிவு செய்துள்ளது. இந்த ஆலை கட்டுமானத்திற்கான அடிக்கல்லை அடுத்த மாதம் முதல்வர் ஸ்டாலின் நாட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலையில் டாடா குழுமத்திற்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவன கார்களை தயாரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஜாக்குவார் லேண்ட்ரோவர், ஜேஎல்ஆர் என்ற நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கிவிட்டது. இந்த நிறுவனம் வாங்கிய பிறகுதான் டாடா குடும்பம் தனது வாகன தயாரிப்பில் பல்வேறு விதமான மாற்றங்களை செய்து தற்போது மக்களுக்கு பிடித்த கார்களை தயாரித்து வருவதாக மக்கள் மத்தியில் பேச்சு நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஜாகுவார் லேண்ட்ரோவர் பிராண்டில் உருவாகும் கார்களை தயாரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்காக பிரத்தியேகமாக நிறுவனம் ஆலையை அமைக்க இடம் தேடிய போது தமிழகத்தில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கம் என்ற பகுதியில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் இந்நிறுவனம் ஆலையை அமைத்துக் கொள்ள தமிழக அரசு அங்கீகரித்தது. தமிழக அரசுடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.
அதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழகத்தில் சுமார் 9000 கோடி முதலீட்டை கொண்டு வருவதாக ஒப்பந்தம் செய்தது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் சுமார் 5000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை பகுதியில் அந்நிறுவனம் விரைவில் தனது ஆலையை கட்டமைக்க முடிவு செய்துள்ளது.

இந்த ஆலை தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜேஎல்ஆர் நிறுவனத்திற்காக அமைக்கும் முதல் வாகன தயாரிப்பு ஆலையாகும். இதற்கு முன்னர் பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து பூனேவில் உள்ள நிறுவனத்தின் ஆலையில் வைத்து அதை அசெம்பிள் செய்து விற்பனை செய்து வருகிறது. தற்போது தமிழகத்தில் அமைய உள்ள ஆலையில் அனைத்து பொருட்களையும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்து இங்கேயே தயாரிக்க முடிவு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கவுள்ள இந்த ஆலையில் லேண்ட்ரோவர் மற்றும் ஜாகுவார் ஆகிய பிராண்டுகளில் உள்ள எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இந்த ஆலையில் தயாரிக்கப்படும் வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கான பணிகளும் தற்போது நடந்து வருகிறது.
இந்தியாவிலும் ஜேஎல்ஆர் என்ற நிறுவனத்தின் விற்பனை கணிசமான அளவு உயர்ந்துள்ளது. மொத்தம் 1371 வாகனங்களை விற்பனை செய்து 31 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இது இந்த நடப்பு நிதியாண்டிற்கான விற்பனை விபரம் தான். லேண்ட்ரோவர் பிராண்டில் டிஃபென்டர் மற்றும் ரேஞ்ச்ரோவர் ஆகிய கார்கள் சிறப்பான விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளதாக ஜேஎல்ஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு ஆலைக்கான கட்டுமான பணிகளை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் மாதம் இது நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் முதல் ஆலை கட்டமைக்கும் பணிகள் நடந்து விரைவில் ஆலை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆலை பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஆலை மூலம் ராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் சுமார் 5000 பேருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் சொகுசு கார் பிராண்டுகளை தமிழகத்தில் தயாரிக்க முன் வந்திருப்பது நிச்சயம் வரவேற்கத்தக்கது தான். ஏற்கனவே வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் தனது வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இப்படியாக ஆட்டோமொபைல் துறை தமிழகத்தை குறி வைத்துள்ளது நிச்சயம் தமிழகத்திற்கு வளர்ச்சியை ஏற்படுத்தி தரும்.


Click it and Unblock the Notifications








