ஜான் ஆபிராகம் நடிக்கும் இந்த பாலிவுட் படம் அஜீத் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்... காரணம் இதுதான்
ஜான் ஆபிராகம் நடிக்கவுள்ள புதிய பாலிவுட் படம் தல அஜீத் ரசிகர்களுக்கு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜான் ஆபிராகம் (John Abraham). இவர் மோட்டார் சைக்கிள்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். புதிய ஆர்15 வி3.0 (R15 V3.0) மற்றும் 2019 யமஹா ஆர்3 (Yamaha R3) ஆகிய பைக்குகளை லான்ச் செய்வதற்காக, 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு ஜான் ஆபிராகம் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வசூலை வாரி குவித்த தூம் படத்தில் ஜான் ஆபிராகம் சுஸுகி ஹயபுசா (Suzuki Hayabusa) பைக்குகளை ஓட்டிய காட்சிகள் மிகவும் பிரபலம். ஏராளமான பெர்ஃபார்மென்ஸ் மோட்டார் சைக்கிள்களையும் ஜான் ஆபிராகம் சொந்தமாக வைத்துள்ளார். இந்த சூழலில், மோட்டார் சைக்கிள்கள் தொடர்பான புதிய திரைப்படம் ஒன்றில் ஜான் ஆபிராகம் நடிக்கிறார்.

இதில் விசேஷம் என்னவென்றால் இந்த படத்தை அவரேதான் தயாரிக்கிறார். ஆனால் ஜான் ஆபிராகம் இணை தயாரிப்பாளர்தான். அஜய் கபூருடன் இணைந்து இந்த படத்தை ஜான் ஆபிராகம் தயாரிக்கவுள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தை ரென்சில் டி சில்வா இயக்குகிறார். இந்த படத்திற்கான ஷூட்டிங் வரும் ஜூலை மாதம் தொடங்குகிறது.

இதுகுறித்து ஜான் ஆபிராகம் கூறுகையில், ''மோட்டார் சைக்கிள்கள் பற்றிய கதை எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது. ரைடர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீதான அவர்களின் காதல் பற்றிய திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே எண்ணினேன். அன்று முதல் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்வதற்காக நேரம் செலவிடப்பட்டது.

இந்த படத்தை உருவாக்கும் பணியில் அஜய் கபூர், ரென்சில் டி சில்வா ஆகியோர் என்னோடு இருப்பதால் மகிழ்ச்சியாக உள்ளேன்'' என்றார். இந்த திரைப்படத்திற்காக ஜான் ஆபிராகம் தற்போது தீவிரமான பயிற்சியை எடுத்து வருகிறார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இதில், மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த படத்திற்கான தொழில்நுட்ப ஆலோசகராக பீட்டர் ட்யூக் (Peter Duke) என்பவர் பணியாற்றவுள்ளார். 6 முறை உலக மோட்டார் சைக்கிள் சாம்பியன் பட்டம் வென்றவரும், 6 முறை டிடி வின்னருமான ஜெப்பின் மகன்தான் பீட்டர் ட்யூக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படம் குறித்து பீட்டர் ட்யூக் கூறுகையில், ''ஜான் ஆபிராகம் மற்றும் குழுவினருடன் இணைந்து பணியாற்றவும், இந்த விளையாட்டின் (ரேஸிங்) த்ரில்லை இந்திய மக்களுக்கு ஒளிப்பதிவாளர்கள் எப்படி காட்டப்போகிறார்கள்? என்பதை காணவும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இந்த படத்தை பார்த்து இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என நினைக்கிறேன்'' என்றார்.

தமிழ் திரையுலகை எடுத்து கொண்டால், ரசிகர்களால் 'தல' என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜீத் குமார் மோட்டார் சைக்கிள்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அடிப்படையிலே அஜீத் ஒரு ரேஸர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏராளமான ரேஸ்களில் அஜீத் பங்கேற்றுள்ளார். அவரது பெரும்பாலான திரைப்படங்களில் பைக் சாகச காட்சிகள் தவறாமல் இடம்பெறும்.

அப்படியான காட்சிகளுக்கு திரையரங்குகளில் பெரும் விசில் சப்தமும், கரகோஷமும் எழும். எனவே ஜான் ஆபிராகம் நடிப்பில் உருவாகும் புதிய படமானது, அஜீத் ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அஜீத் பைக் ஓட்டினால் மட்டும்தான் அவர்கள் விசிலை தெறிக்க விடுவார்களா? என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications








