1,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருந்தும் புது காரை வாங்க குழந்தை போல் ஓடிவந்த தொழிலதிபர்!!
ஜோஸ் அலுக்காஸ் (Jos Alukkas) என்றவுடனே முதலாவதாக நம் நினைவிற்கு வருவது நடிகர் விஜய் தான். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக தற்போது இருக்கும் நடிகர் விஜய் நடித்த மிகவும் சில விளம்பரங்களில் ஜோஸ் அலுக்காஸின் நகைக்கடை விளம்பரமும் ஒன்றாகும். இதன் மூலமாக தென்னிந்திய அளவில் பிரபலமான நகைக்கடையாக உருவெடுத்த ஜோஸ் அலுக்காஸ் நிறுவனத்தின் சிஇஓ புதியதாக விலையுயர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) காரை வாங்கியுள்ளார். ஜோஸ் அலுக்காஸின் சிஇஓ-ஐ பற்றியும், அவர் வாங்கியுள்ள மெர்சிடிஸ் காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களுக்கு கிடைத்துவரும் வரவேற்பை பற்றி நான் கூற வேண்டியதில்லை. இந்தியாவில் 30க்கும் அதிகமான மெர்சிடிஸ் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. செல்வந்தர்கள் பலரிடம் குறைந்தது ஒரு மெர்சிடிஸ் காராவது உள்ளது. அந்த வகையில் தற்போது விலையுயர்ந்த மெர்சிடிஸ் காரை வாங்கியுள்ள செல்வந்தர், ஜான் அலுக்காஸ் ஆவார்.

ஆம்... ஜோஸ் அலுக்காஸின் சிஇஓ தான் ஜான் அலுக்காஸ். தந்தை ஜோஸ் அலுக்காஸ் உருவாக்கிய இந்த சாம்ராஜ்ஜியத்தை தனது சகோதரர்கள் வர்கீஸ் அலுக்காஸ் மற்றும் பால் ஜே.அலுக்காஸ் உதவியுடன் ஜான் அலுக்காஸ் கவனித்து வருகிறார். போர்ஷே 911, லம்போர்கினி ஹூராகென் உள்ளிட்ட கார்களை ஏற்கனவே வைத்திருக்கும் ஜான் அலுக்காஸ் புதியதாக வாங்கியிருப்பது, மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் கேப்ரியோலெட் (C-Class Cabriolet) என்கிற மெர்சிடிஸ் கன்வெர்டபிள் கார் ஆகும்.
இந்த புதிய காரை ஷோரூமில் இருந்து டெலிவிரி எடுக்கும் வீடியோவை ஜான் அலுக்காஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புதிய மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் கேப்ரியோலெட் காரை டெலிவிரி பெறுவதற்கு தனது போர்ஷே 911 காரில் ஜான் அலுக்காஸ் ஷோரூமுக்கு வருவதை அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் காணலாம். இது மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் ஷோரூம் கிடையாது.

வீடியோவில், காருக்கு பின்னால் அல்டிமேட் டீடெயிலர்ஸ் என பலகை இருப்பதை காணலாம். அல்டிமேட் டீடெயிலர்ஸ் ஆனது கேரளாவின் திரிச்சூரில் செயல்படும் கார் டீடெயிலிங் ஷோரூம் ஆகும். இந்த ஷோரூமுக்குள் ஜான் அலுக்காஸ் நுழைந்த போது அவரது கார் கருப்பு நிற மறைப்பால் மறைக்கப்பட்டு இருந்தது. மறைப்பை நீக்கிய பின்னரும் ஹெட்லைட்களும், கார் ரூஃப் மட்டுமே பளிச்சென்று தெரிகின்றன.
மற்றப்படி, காரின் மற்ற பகுதிகள் எல்லாம் கருப்பு நிறத்தில் உள்ளன. அதாவது, அந்த அளவிற்கு அடர் கருப்பு நிறத்தில் இந்த கன்வெர்டபிள் ஸ்போர்ட்ஸ் காரை ஜான் அலுக்காஸ் வாங்கியுள்ளார். காரின் மேற்கூரை தனியாக தெரியும் வகையில், அடர் சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பிராண்ட்-நியூ சி-கிளாஸ் கேப்ரியோலெட் காரில் ஜான் அலுக்காஸின் விருப்பத்திற்கேற்ப சில சிறு, சிறு மாடிஃபிகேஷன்கள் செய்யப்பட்டுள்ளன.

இதனால்தான், வழக்கத்தை காட்டிலும் இந்த சி-கிளாஸ் கன்வெர்டபிள் கார் பார்க்க அழகாக தெரிகிறது என சொல்லலாம். குறிப்பாக, காரின் முன் மற்றும் பின்பக்கங்களில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் 3-ஸ்டார் லோகோவும் கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்களை தனியாக வாங்கி இந்த காரில் ஜான் அலுக்காஸ் பொருத்திக் கொண்டுள்ளார். காரின் வெளிப்பக்கத்திற்கு ஏற்ப, உட்புறமும் முழுவதுமாக கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கன்வெர்டபிள் ஸ்போர்ட்ஸ் காரில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர், பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 255 பிஎச்பி மற்றும் 370 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. என்ஜினின் இயக்க ஆற்றல்கள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வாயிலாக காரின் பின் சக்கரங்களுக்கு செல்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்சமயம் மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் கேப்ரியோலெட் கார் விற்பனையில் இல்லை. அதற்கு பதிலாக தான் சி.எல்.இ கேப்ரியோலெட் காரை மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் விற்பனை செய்கிறது. ஆகையால், இந்த காரை வெளிநாட்டில் இருந்து ஜான் அலுக்காஸ் இறக்குமதி செய்திருக்கலாம். அதனால்தான், காரில் சில பல மாற்றங்களை இவர் செய்துள்ளார் என நினைக்கிறோம்.


Click it and Unblock the Notifications









